கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் நீதிக்கான மய்யம் கோரிக்கை.

ஆசிரியர்களின் வருடாந்த லீவினை கட்டுப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம்,  மற்றும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் –  

(எஸ்.அஷ்ரப்கான்)
ஆசிரியர்களின் வருடாந்த லீவினை கட்டுப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம்,  மற்றும் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானதாகும் என அறிவிக்குமாறு கோரி கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் நீதிக்கான மய்யம் அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளது.

இது விடயமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இச்சுற்றிக்கை பின்வரும் காரணங்களுக்காக சட்டவிரோதம் என அறிவிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தீவு ரீதியில் கல்விக்கு பொறுப்பான மத்திய அமைச்சு  லீவு தொடர்பாக மௌனம் காக்கும் போது, மாகாண கல்வி அமைச்சு லீவுகளை கட்டுப்படுத்தும் முகமாக சுற்றறிக்கை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சின் அதிகாரத்திற்கு சவாலாக அமைகிறது.
அரச ஊழியருக்கான லீவு என்பது நியதி சட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு அம்சம் ஆகும். எனவே துணை சட்டங்களால் அதாவது சுற்றறிக்கைகளால் நியதி சட்டத்தால் வழங்கப்பட்ட ஒரு உரிமையினை மட்டுப்படுத்த முடியாது.
பொதுவாக சட்டங்கள் பின்னோக்கி ஆளும் தன்மையைக் கொண்டிருத்தலாகாது. இந்த சுற்றறிக்கை பின்னோக்கி ஆளும் இயல்பினை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மற்ற மாகாணங்களில் ஆசிரியர்கள் வருடாந்த லீவினை எவ்விதமான மட்டுப்பாடுகளும் இல்லாமல் பெற்றுக்கொள்ளும் போது கிழக்கு மாகாண ஆசிரியர் மட்டும் அந்த உரிமையை இழப்பது ஒரு அடிப்படை மனித உரிமை  மீறலாகும்.
குறித்த சுற்றறிக்கையானது தேசிய பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைக்கு ஆசிரியர் லீவு தொடர்பான வழிகாட்டுதலை மேற்கொள்ள மாகாண கல்வி திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளதா ? என்ற விடயமும் தீர்க்கப்பட வேண்டும்.
மேற்சொன்ன விடயங்களை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வினை பெற்றுத் தருமாறு இவ்வமைப்பு கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.