மட்டக்களப்பு நகருக்குள் இனிமேல் களவாக குப்பைகளை வீசவேண்டாம்.

0
108

மட்டக்களப்பு மாநகரினை சுத்தமான மாநகராகப் பராமரிக்கும் வகையில் நடமாடும் கண்காணிப்பு கமெராக்களைப் பொருத்தும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபையானது ஆரம்பித்துள்ளது.

மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீதியோரங்களில் குப்பை கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளை வீசி செல்லும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக இச்செயற்பாடுகளை தொடரும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில் இரகசியமான முறையில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்படி முதற்கட்டமாக வடிவமைக்கப்பட்ட மேற்படி கமெராக்களை உள்ளடக்கிய தொகுதியினை இன்று (02) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தகவல் தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடம் கையளித்தார்.

மட்டக்களப்பு மாநகரினை சுத்தமான மாநகரமாகப் பேணும் நோக்கில் 10 சுகாதார பிரிவுகளில் மேற்படி கண்காணிப்பு கமெராக்களை பொருத்தவுள்ளதாகவும், இதன் ஊடாக குப்பைகளை வீதிகளில் வீசிச் செல்லும் நபர்களை அலுவலகத்திலிருந்தே அடையாளங்கண்டு அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்க கூடியதாக இருக்கும் என்றும் மாநகர முதல்வர் இதன் போது கருத்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல்இ பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.