காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இன்றைய ஜனாதிபதியே பதிலளிக்க வேண்டும் எம்.பி.சாள்ஸ் நிர்மலநாதன்

0
72
 (வாஸ் கூஞ்ஞ) 
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வேளையில் இன்றைய ஜனாதிபதியே பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் அவருக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் முழு விபரங்களும் தெரியும் ஆகவே அவரே இதற்கான பதிலை கூற வேண்டியவர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நேற்று திங்கள் கிழமை (31.08.2020) மன்னாரில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடுபங்களின் அமைப்பும்  அமைதியான முறையில் நடாத்திய கவனயீர்ப்பு போராட்டதில் கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ நிர்மலநாதன் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்
 தமிழரின் உரிமைகளுக்காக போராட்டம் நடைபெற்றபோது அந்த போராட்டத்துக்கு பங்களிப்பு செய்தார்கள் என்ற அடிப்படையில் எங்கள் உறவுகள் இலங்கை அரசாங்கத்தால் குறிப்பாக கடற்படை இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டு இதுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்து வருகிறது
மாறி மாறி வரும் அரசாங்கங்கள் இது விடயமாக கவனம் எடுக்காமல் இருக்கின்றன
அத்துடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உதவிபுரிந்த சர்வதேசங்கள் மிக பெரிய ஏமாற்றங்களை எங்களுக்கு தந்து கொண்டிருக்கிறன
2009 இல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வேளையில் பாதுகாப்பு செயலாளராக கோத்தபாய ராஐபக்சவே இருந்தார்
அவரே அப்பொழுது யுத்தத்தை வழிநடத்தி வந்தவர் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக கோத்தபாய ராஜபக்சவுக்கு மாத்திரமே தெரியும்
அவர் இன்று ஜனாதிபதியாக இருக்கின்றார் நான் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியபோது காணாமல் ஆக்கப்பட்ட விபரங்கள் யாவும் கோத்தபாய ராஜபக்சவுக்கு மாத்திரமே தெரியும் எனவும் இவ் மாவட்டங்களில் நிலை கொண்டிருந்த பாதுகாப்பு படையினருக்கு பாதுகாப்பு செயலாளராக இருந்து நேரடியாக வழிநடத்தியவர் என்பதால் இவரே இதற்கான பதிலை கூற வேண்டியவராக இருக்கின்றார்
ஆகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பதை வெளிக்கொணர வேண்டும்
காணாமல் போன உறவுகளைத் தேடி தொடர்ச்சியாக இவ் போராட்டம் இடம்பெற வேண்டும்  இவ்வாறான செயல்பாட்டினால் நாங்கள் எங்கள் உரிமைகளைப் பெற வேண்டி தள்ளப்பட்டுள்ளோம்
நாம் ஒவ்வொருவரும் இது விடயத்தில் பார்வையாளராக இருக்காது பங்காளிகளாக இருக்க வேண்டும்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்கு வலு சேர்க்கும் நபர்களாக நாம் இருக்க வேண்டும் என்றார்