எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகளுக்காக எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முன்வரும்

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தான் எப்போதும் வருவோம். அன்றும், இன்றும், என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையொட்டி வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களித்த மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம். எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை எவ்வளவு பிரயத்தனத்திற்கு மத்தியில் அவர்கள் நடத்திக் கொண்டு வருகிறார்கள். பொலிஸாரின் தடைகள் பலவற்றைத் தாண்டி இன்று இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது. இன்று இந்த மக்களின் போராட்டத்திற்காகக் குரல்கொடுக்க வந்தவர்கள் யார் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பாhளுமன்ற உறப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்கள் தான் இன்று இந்த மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வந்திருக்கின்றார்கள்.

உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி அவர்களின் உறவுகள் மிகவும் அமைதி முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமானது பொலிசாரினால் ஏற்படுத்தப்பட்ட தடையின் காரணமாக மிகவும் பாரிளயளவிலான ஆர்ப்பாட்டமாக மாற்றம் பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக வந்த நேரம் அவருக்கான வரவேற்பு செய்வதற்கு ஆயிரக்கணக்கான மக்களை அவரே ஏற்றிச் சென்று வெடி கொழுத்தி அவரைக் கௌரவிக்கச் செய்தார். ஆனால் இன்று இந்த மக்களின் உணர்வு பூர்வமான போராட்டத்திற்கு அவர் வரவில்லை. இன்று இந்த மக்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து இந்த மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் நீங்கள் ஆளுங்கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு இந்த மக்களுக்காக இங்கு வந்து குரல் கொடுக்க முடியாதா?
மக்கள் உங்களைத் தெரிவு செய்தது நீங்கள் வீதிகளில் ஊர்வலம் போவதற்கோ வெடிக் கொழுத்துவதற்கோ, உங்களுக்குப் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவிப்பதற்கோ அல்ல. மக்களின் பிரச்சினைகளைப் பற்றிக் கதைப்பதற்கே உங்களை மக்கள் தெரிவு செய்தார்கள் ஆனால் நீங்கள் அவர்களின் பிரச்சினையின் போது வருவதில்லை.

எமது மக்களின் உரிமைக்கான பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தான் எப்போதும் வருவோம். அன்றும், இன்றும், என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் வரும்.

இன்னுமொரு பாராளுனமன்ற உறுப்பினர் அவர் அவரது கன்னி உரையில் மக்களின் பிரச்சினைகள் பற்றி எதுவுமே வாய் திறவாது தன்னை விடுதலை செய்யும் படியே தெரிவித்திருந்தார். அவரை விடுதலை செய்வதற்காகவா பாராளுமன்றத்திற்கு மக்கள் அவரைத் தெரிவு செய்தார்கள்.

அவர் வரமுடியாது விட்டாலும் அந்தக் கட்சியில் போட்டியிட்ட சக வேட்பாளர்கள் வந்திருக்கலாம் தானே. அதில் மனித உரிமைச் சட்டத்தரணியொருவரும் இருக்கின்றார். அவராவது இங்கு வந்திருக்கலாம். சட்ட ஆலோசனைகள் வழங்குபவர்கள் ஏன் இந்த இடத்திற்கு வந்து எமது மக்களின் பிரச்சினக்கு உங்களால் சட்ட ஆலோசனை வழங்க முடியாது. அக்கட்சியில் போட்டியிட்ட வர்த்தகரொருவரின் சந்தியில் தான் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆனால் அவரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

நாங்கள் களத்தில் நிற்கின்றோம் தேர்தல் காலத்தில் மக்கள் மக்கள் என்று கதைத்தீர்களே நீங்கள் எல்லாம் எங்கே. இதோ நாங்கள் இப்போதும் எமது மக்களுக்காகக் களத்தில் நிற்கின்றோம். எமது தமிழரசுக் கட்சி, தமிழ்; தேசியக் கூட்டமைப்பு, வாலிபர் முன்னணி என அனைவரும் நிற்கின்றோம்.

இன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் என்னையும் கைது செய்வதாகக் கூறியிருந்தார்கள். என்னையும் கைது செய்யுங்கள். அது மட்டும் தான் எனக்கு இன்னும் நடைபெறவில்லை. அவ்வாறு நடைபெற்றால் அடுத்த தேர்லில் நானும் விலங்குடன் ஒரு போஸ்டர் அடிக்கலாம்.

இது மக்களின் போராட்டம். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். மக்களுக்கான இந்தப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? கடத்தியவர்கள் இந்த மாவட்டத்திலும் உள்ளார்கள். கடத்தியவர்கள், காசுக்காகக் கடத்தினீர்களா, பதிவிக்காகக் கடத்தினீர்களா இல்லை இராணுவம் சொல்லிக் கடத்தினீர்களா என்று எங்களுக்குத் தெரியாது. இன்று கடத்திய நீங்கள் பெரும் பதவிகளில் இருக்கலாம். ஆனால் எங்களுக்குத் தேவை பதில் எமது உறவுகள் உயிருடன் இருக்கின்றார்களா? இல்லையா? உயிருடன் இருந்தால் எங்கே? உயிருடன் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நடந்தது?

இந்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எத்தனையோ இடங்களில் கையொப்பமிட்டுள்ளது. சுமார் எட்டுக்கு மேற்பட்ட விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கையொப்பமிட்டுள்ளது. இது தொடர்பில் சர்வதேச சமூகம் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் இந்த காணாமல் போதல் தொடர்பான விடயங்கள் அரசியல் அடக்கு முறையாகக் கூட பயன்படுத்தப்பட்ட விடயம் என்றும், தொடர்ச்சியாக இந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படுகின்றார்கள் என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையே குறிப்பிட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தினை தடுப்பதற்கு கொரோணாவைப் பயன்படுத்தினர், எமது உறவுகளைத் தேடும் போராட்டத்தை விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் முயற்சி என்றும் தீவிரவாதத்தைத் துண்டும் செயற்பாடு என்றும் சொல்லித் தடுக்கப்பார்த்தார்கள். இவ்வாறு நிறைய பிரச்சனைகள் உள்ளன. எது எவ்வாறு இருப்பினும் மக்களுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
நான் ஒரு இனவாதியுமல்ல எனது கட்சி ஒரு இனவாதக் கட்சியுமல்ல, இனவாதத்தைத் தூண்டும் கட்சியுமல்ல. நியாயம் கேட்கும் கட்சி, நியாயத்தைக் கோரி மக்கள் எந்த இடத்தில் அழைத்தாலும் எமது கட்சி சார்பில் நான் அந்த இடத்தில் நிற்பேன் என்று தெரிவித்தார்.