( அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 18 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது நபர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஆறு பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 பேரிலும் அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களுக்கும் தலா 15,000/= ரூபாய் வீதம் தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க கட்டளையிட்டார்.
இதேவேளை கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆறு பேரில் ஐவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 25,000/= ரூபாய் வீதம் தண்டம் செலுத்துமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை செய்து வந்ததாக கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் தான் அக்குற்றத்தைச் செய்யவில்லை எனவும் பொலிஸார் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை கைது செய்யப்பட்ட பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறும் எதிர்வரும் வழக்கு தினம் நீதிமன்றத்திற்கு ஆஜராகுமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டது.