மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்கள் குடிநீர் விநியோகத்திற்கு தமது ஒத்துழைப்புக்களினை வழங்குமாறு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் வேண்டுகோள் விடுத்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வு இன்று இடம்பெற்ற போது அமர்வில் குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராயப்பட்ட போது தவிசாளர் ஏ.எம்.நௌபர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த பொதுத் தேர்தல் வரையான காலம் வரை வடமுனை, ஊத்துச்சேனை போன்ற கிராமங்களுக்கு ஒரு இழுவை இயந்திரமும், தண்ணீர் பௌசரும், தியாவட்டவான், காவத்தமுனை, வாகனேரி, புனானை பிரதேசங்களுக்கு இரண்டு வாகனங்களும் குடிநீர் விநியோகித்து வந்தன.

பொதுத் தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் 50க்கு மேற்பட்ட புதிய தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டதால் குடிநீர் விநியோகத்திற்காக மேலும் ஒரு வாகனம் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் குடிநீர் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதனால் தூர இடங்களில் குடிநீரினை பெற வேண்டிய நிலையில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பாட்டிற்கும் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய மேலும் ஒரு வாகனத்தினை வெளியில் இருந்து வாடகைக்கு பெறல் என்று தீர்மானிக்கப்பட்டது.

தற்போது நிலவும் கடுமையான வரட்சி, நிலத்தடி நீர் வற்றியுள்ளமை என்பவற்றால் மாவட்டம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதும், அரச மற்றும் அரச சார்பற்ற நிர்வனங்களிடமிருந்து வாகன வசதிகள் யாவும் ஏலவே கொரோணா சிகிச்சை நிலையம் மற்றும் தடுப்பு முகாம்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதனால் அவற்றின் ஒத்துழைப்புக்களை பெற முடியாத நிலை உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நிலைமைகளை கருத்திற் கொண்டு விநியோகிக்கப்படும் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் நிலைமையின் எதார்த்தத்தை உணர்ந்து செயற்படுவதும், கருத்துக்கள் வெளியிடுவதும் அவசியமானது எனவும் அனைத்து தரப்பினரிடமும் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகத்தை முடிந்தவரை தடையின்றி வழங்க பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் அக்கறை செலுத்தி வருவதோடு தமது பங்களிப்புகளினை வழங்கி வருகின்றனர். இப்பிரதேசத்தில் உள்ள பொது அமைப்புக்கள் குடிநீர் விநியோகத்திற்கு தமது ஒத்துழைப்புக்களினை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

குடிநீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக நேரடி கள விஜயத்தினை மேற்கொண்ட போது பல பிரச்சினைகளையும் அதற்கு பொறுத்தமான தீர்வுகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்தது என்றார்.