இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழ் மொழி பேசுகின்ற திராவிடப் பண்பாட்டு மக்கள்.பொ.ஐங்கரநேசன்

 

இலங்கைத் தீவில் தமிழர்களே ஆதிக்குடிகள் என்பதும் அவர்கள் தனியானதொரு தேசம் என்பதும் பேரினவாதிகளின் கூச்சல்களால் இல்லை என்றாகிவிடாது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றின் முதல் அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஆற்றிய உரைகள் தொடர்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “சிங்கள இலக்கியங்களும், பாளி இலக்கியங்களும் இலங்கையின் பூர்வீக மக்கள் சிங்கள மொழி பேசுகின்ற ஆரியமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்த ஆரிய இன மக்கள் என்றும் கூறுகின்றன. ஆனால், இவற்றுக்கு ஆதாரமாக எவ்விதத் தொல்லியல் சான்றுகளும் இலங்கையில் இருந்து கிடைக்கவில்லை.

இலங்கையின் பூர்வீக மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த, பெருங்கற் பண்பாட்டுக்குரிய மக்கள் இனம் என்பது வரலாற்றாசிரியர்களாலும், தொல்லியலாளர்களாலும், மொழியியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தென்னிந்தியாவின் நிலப்பரப்பில் இருந்து இயற்கைப் பேரிடர் காரணமாகப் பிரிந்த ஒரு நிலப்பரப்பே இலங்கைத் தீவு என்று புவியியலாளர்கள் நிரூபித்திருக்கும் நிலையில், இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழ் மொழி பேசுகின்ற திராவிடப் பண்பாட்டு மக்கள் என்பதை வரலாற்று அறிவில்லாத சாதாரண மக்களே ஏற்றுக்கொள்வார்கள்.

இலங்கைத் தீவில் சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் தங்களது ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தவர்கள் என்றவகையிலும், பாரம்பரியத் தாயகமாகக் கொள்ளக்கூடிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளவர்கள் என்றவகையிலும், தங்களுக்கிடையே மொழி ரீதியான, சமய ரீதியான, பண்பாட்டு ரீதியான சார்பு நிலையைக் கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும் தனியானதொரு தேசமாகவே உள்ளார்கள்.

இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் தமிழர் தேசத்தை அங்கீகரித்த நிலையில், இவர்களின் பின்வந்த ஆங்கிலேயர்களே இரண்டு தேசங்களையும் வலுக்கட்டாயமாக ஒன்றாக்கி, ஒற்றையாட்சி முறைமையைத் திணித்துவிட்டுச் சென்றனர்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் எத்தகைய கொடும் நெருக்கடிகளைக் கொடுத்தாலும் தமிழர்களே தொன்மைக் குடிகள் என்பதும், தமிழர்கள் தனியானதொரு தேசம் என்பதும் ஒருபோதுமே இல்லை என்றாகிவிடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.