முரண்பாட்டில் உடன்பாட்டோடு பயணிக்கிறோம்

0
106

புதிய வாகனத் தரிப்பிட திறப்பு விழாவில் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ் )       

கல்முனை பிரதேச செயலகத்திற்கும் மாநகர சபைக்குமிடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன எனினும் இப்போது சுமுகமான நிலையில் உடன்பாட்டோடு பயணிக்கிறோம் என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகனத் தரிட்பிடம் இன்று (25.08.2020) திறந்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதான கணக்காளர் எம்.எம்.முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடாவை வெட்டி வாகத் தரிப்பிடத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் பிரதேச செயலாளர் தலைமைதாங்கி உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர்,

அம்பாறை மாவட்டத்தில் மிகவும் சன நெரிசலை கொண்ட பிரதேச செயலகம் கல்முனை பிரதேச செயலகமாகும். எனினும் மிகவும் பழமைவாய்ந்த இந்த கட்டடம் அமைந்திருக்கும் வளாகத்தில் கல்முனை மாநகர சபை கட்டடம் மற்றும் நகர அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகம் என்பனவும் இயங்கிவருகின்றன.

இட நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கிவரும் இந்த பிரதேச செயலகத்திற்கு வாகன தரிப்பிட வசதி இல்லாமையால் மிக நீண்ட காலமாக அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
கல்முனை மாநகரம் என்பது இந்தப்பிரதேசத்தின் முகமாகும். இதனை கலை ரசனையோடு அழகு படுத்த வேண்டும். நான் இந்த பிரதேச செயலகத்திற்கு வரும் போது பிரதேச செயலகத்தை அடையாளம் காண முடியவில்லை. இப்போது முடிந்தளவு முகப்பை அழகு படுத்தியிருக்கிறோம். எனினும் எதிர்காலத்தில் இங்கு கடமையாற்றும் ஆளணிகள் அதிகரிக்கப்படும் போது இடநெருக்கடி ஏற்படும். இதனை உணர்ந்து எல்லோரும் உடன்பாட்டோடு பயணிப்போம். முரண்பாடுகளை இல்லாமல் செய்து சுமுகநிலையை தோற்றுவித்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்தப் பிரதேச செயலகம் அமைந்திருக்கும் கட்டடம் மாநகரத்துக்குரியது உடனடியாக இடத்தை விட்டு எழும்ப வேண்டும் என்று மாநகர முதல்வரால் அண்மையில் பிரதேச செயலாளருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து இந்த வாகன தரிப்பிடத்தை அமைப்பதற்கு முன்னர் அந்தப் பகுதியில் நின்ற மரம் வெட்டப்பட்டது. எனினும் பிரதேச செயலாளர் மரத்தை அனுமதி இல்லாமல் வெட்டியதாக தெரிவித்து பிரதேச செயலக ஊழியர்களை கடும் வார்தைகளால் மாநகர முதல்வர் தாக்கியதாக தெரிவித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மாநகர சபை முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர்

இன்னிலையில் சுமார் 5 இலட்சம் ரூபா செலவில் பல்தேவைகளுக்கும் பயன்படுத்தும் விதத்தில் தற்போது இந்த வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழா நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் எம்.ஐ.எம்.பிர்னாஸ், சுகாதார வைத்திய அதிகாரி அர்ஸாத் காரியப்பர், பிரதேச செயலக கணக்காளர் வை.கபீபுல்லா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.