ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்களுக்கு முதல் கட்டமாக காணி அனுமதிப் பத்திரம்

0
92
????????????????????????????????????

ஜனாதிபதியின் காணி இல்லாதோருக்கு காணி வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக அரச காணிகளை பராமரித்து வந்த மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றது.

இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நீண்ட காலமாக அரச காணிகளை பராமரித்து வந்த மக்களுக்கு முதல் கட்டமாக காணி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக கணக்காளர் ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹமட், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.அப்துல் ஹமீட், செயலக காணிக் கிளை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2015ம் ஆண்டில் செயலகத்தினால் 52 காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்ட பின்னர் மிக நீண்ட காலம் மாகாண காணி ஆணையாளரின் முறையான அனுமதி கிடைக்கப் பெறாமையினால் குறிப்பிட்ட பயனாளிகளுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்க முடியாமல் காணப்பட்டது.

காணி இல்லாதோருக்கு காணி அனுமதிப் பத்திரம் நாடளாவிய ரீதியில் வழங்கும் திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதல் கட்டமாக நூறு பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.

மாகாண காணி ஆணையாளரிடம் இருந்து 358 காணி அனுமதிப் பத்திரங்களுக்கான அனுமதி பெறப்பட்ட நிலையில் எதிர்வரும் வாரங்களில் ஏனைய 258 காணிகளுக்குமான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் அரச காணிகளை பராமரித்து வந்த ஏனைய மக்களுக்கும் அனுமதிப் பத்திரத்தினை பெற்றுக் கொடுப்கதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த காணிகளை தங்களின் தேவைக்கு மாத்திரம் பயன்படுத்த முடியும், அதனை பயன்படுத்த முடியாத பட்சத்தில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடியுமே தவிர காணியை இன்னொருவருக்கு கைமாற்ற முடியாது என ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் மேலும் தெரிவித்தார்.

ந.குகதர்சன் –