வேலையற்ற நிலையில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான தொழில்வாய்ப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும்

0
97

பாராளுமன்ற உறுப்பினரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன்

வேலையற்ற நிலையில் உள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான தொழில்வாய்ப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் அரசாங்கத்திடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதேபோன்று கடந்த ஜனாதிபதி தேர்தல்காலத்தில் இடைநிறுத்தப்பட்ட செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் வேலையற்ற பட்டதாரிகளை அரச நியமனத்திற்குள் உள்வாங்கும் செயற்பாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பட்டதாரிகளை பொறுத்தவரையில் வடகிழக்கில் உள்ள பட்டதாரிகள் கடந்த காலத்தில் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது பட்டக்கல்வியை பூர்த்திசெய்து பலகாலமாக தொழில்வாய்ப்புகள் இன்றி பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டவர்களாவர்.குறிப்பாக வடகிழக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பட்டதாரிகளைக்கொண்ட குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையினைக்கொண்டதாகவும் இருக்கின்றது.இந்த நிலையில் பட்டக்கல்வியை பூர்த்திசெய்த பின்னர் தமது குடும்ப வறுமையினைப்போக்கும் வகையில் சிலர் நிறுவனங்களில் மிகவும் குறைந்த சம்பளத்தில் தமது தொழில் தகைமைக்கும் குறைவான தொழிலை செய்து தமது குடும்ப நிலையினை ஓரளவு போக்கிவருகின்றனர்.

இவ்வாறான பட்டதாரிகள் அரச பட்டதாரிகள் நியமனம் வாங்கும் நடைமுறைக்குள் உள்வாங்கப்படாத நிலையில் இவர்களின் குடும்பங்கள்மேலும் வறுமை நிலைக்கே செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும்.

எனவே வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும்போது அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பிரதேச செயலகங்கள் தோறும் நியமிக்கப்பட்டு தேர்தல் நடவடிக்கைகளினால் இடைநிறுத்தப்பட்ட செயற்றிட்ட உதவியாளர்களின் நியமனங்களையும் மீண்டும் வழங்கவேண்டும்.

செயற்றிட்ட உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டவர்களின் பல குடும்பங்கள் இன்று நிர்க்கதியான நிலையில் உள்ளது.பலர் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்கின்றனர்.

எனவே இவர்களின் நியமனத்தினை மீளவும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.