தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய அரசியலின் சறுக்கலே தவிர அது  முற்றுப்புள்ளியல்ல…

0
131
(பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம்)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து எமக்கான மக்கள் ஆதரவுத்தளம் தடம்புரண்டதாக அல்லது சில சில்லறைகள் எமது மக்கள் ஆதரவை தடம்புரள வைத்ததாகக் கருத வேண்டாம். இத் தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய அரசியலின் சறுக்கலே தவிர அது  முற்றுப்புள்ளியல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று (21) இடம்பெற்ற பாராளுமன்ற கன்னியுரையின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு இளம் பாராளுமன்ற உருப்பினராக தமிழ் தேசிய விடுதலை வேட்கை கொண்டவனாக எம் மக்களின் அபிலாசைகளை ஆயத போராட்டம் மூலம் மட்டும் தான் வென்றிட முடியும் என்ற அக்கால களநிலமையில் ஆயதம் ஏந்தி எம் மக்கள் விடுதலைக்காக போராடிய நான் அந்த ஆயத போராட்டம் கற்றுத்தந்த படிப்பினைகள் காரணமாக அக்கால நிலைகளுக்கிணங்க ஆயத போராட்டத்ததை துறந்து தமிழ் தேசிய அபிலாசைகளை ஜனநாயக வழிமுறையில் பெற்றுக்கொள்ளாலாம் என்பதை உணர்ந்து தமிழர் விடுதலை கூட்டணி எனும் அமைப்பின் ஊடாக பாராளுமன்ற தேர்தலுக்குள் உள்நுழைந்து 1989 தொடக்கம் 1994ம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்து அதன் பின்னர் தமிழ் தேசிய அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சிறு இடைவெளியின் பின் மீண்டும் என் உயிரிலும் மேலான மட்டக்களப்பு மாவட்ட மக்களால் ஐயம் திரிபற்ற முறையில் மக்கள் பிரதிநிதியாக தொரிவு செய்யப்பட்டமைக்கு இறைவனுக்கும் என்உயிரிலும் மேலான மட்டக்களப்பு தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நடைபெற்று முடிந்த ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை வைத்து எமக்கான மக்கள் ஆதரவு தளம் தடம்புரண்டதாக அல்லது சில சில்லறைகள் எமது மக்கள் ஆதரவை தடம்புரள வைத்ததாக மார்தட்டிக் கூறுவதை ஏற்க முடியாது ஒன்று தமிழ் தேசிய அரசியலை தமிழ் தேசிய மக்கள் உணர்வுகளை தெளிவாக புரிந்து கொண்டவன் என்ற வகையில் இத் தேர்தல் முடிவுகள் எமக்கு ஏற்பட்ட ஒரு சறுக்கல் அவ்வளவுதான் அது தமிழ் தேசிய அரசியலின் முற்றுப்புள்ளியல்ல. இதை முதலில் நாம் அறிய வேண்டும்.
பௌத்தம் பௌத்தம் என்று உரத்து உரைக்கின்றவர்களே பௌத்த சித்தாந்தத்தை  நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பௌத்த மதத்தை ஸ்தாபித்த கௌதம புத்தனின் பின்னனியை நீங்கள் அனைவரும் மறந்துவிட்டீர்கள். உலகின் ஒரே ஒரு இந்து நாடான நேபாள நாட்டின் இந்து மன்னன் சுத்தோதனுக்கும் அவன் மனைவி மாயாதேவி மகா ராணிக்கும் இரண்டாவது இளவளாக இம் மண்ணில் அவதரித்தவர் சித்தார்த்த இளவரசனாவார். இவர் அடிப்படையில் இந்து மதம் சார்ந்தவர். இவரது வாழ்வு அரச சுகபோகங்களை துறந்ததாகவே இருந்தது. அரண்மனையை விட்டு ஒரு நாள் வெளியே வந்த பொழுது வீதியிலே மூப்பு, பிணி, சாக்காடு கண்டு வாழ்வின் அர்த்தம் உணர்ந்து தன் அரச வாழ்வு துறந்து தன் அருமை மனைவி மக்களை துறந்து தன் குடும்பம், தன் மக்கள், தன் மதம், தன் இனம் என்பவற்றை மறந்து உலகிற்கு ஒளியூட்டும் பௌர்ணமி தினம் ஒன்றில் பரிபூரணம் பெற்றவர். இங்கு ஒரு ஒற்றுமையை இனங்காண வேண்டும் சித்தாத்தன் இளவரசன் பிறந்தது ஒரு பௌர்ணமி தினமென்றில், அவர் கௌதம புத்தராக புத்த கயாவில் ஞானம் பெற்றது ஓர் பெனர்ணமி தினமொன்றில், அவர் கௌதம புத்தராக இலங்கையில் காலடி பதித்தது ஒரு பௌர்ணமி தினமொன்றில், அவர் கௌதம புத்தராக வாழ்ந்து பரிநிர்வாணம் அடைந்ததும் பெனர்ணமி தினமொன்றில். கௌதம புத்தர் தன்னை கடவுளாக ஒருநாளும் உருவகித்தது இல்லை தான் உருவாக்கிய பௌத்த நெறியை ஒருமதமாக முன்மொழியவுமில்லை. பௌத்தம் இலங்கைக்கு மட்டுமல்ல சிங்களவருக்கு மட்டுமல்ல உலகிற்கே ஒளியூட்டும் அர்த்தம் பொதிந்த வாழ்வியல் நெறி. இதை இந்த உயரிய சபையில் உரத்துக்கூறுவதில் எவ்வித தயக்கமுமில்லை. கௌதம புத்தர் ஆரம்பமத்தில் இந்து மதத்தை சார்ந்தவன் என்ற உண்மை வரலாற்றை மறக்காதீர்கள். பௌத்த மதம் சிங்களத்துடன் தொடர்புபட்டது என்று முடிச்சுப் போடாதீர்கள். பௌத்தம் பின்னாளில் மதமாக உருவாகி  உலகளாவிய ரீதியில் வியாபித்தது. பௌத்தமும் சிங்களமும் இணைய முன்னரே பௌத்தமும் தமிழும் உலகளாவிய ரீதியில் இணைந்து பிணைந்தது வரலாறு. பௌத்த இலக்கியங்கள் பாளி மொழிக்கு முன்னர் சிங்கள மொழிக்கு முன்னர் தமிழ் மொழியில் ஆக்கப்பட்டமை வரலாறு. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களான சீவகசிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை என்பன பௌத்த காப்பியங்களே. இவற்றை அடியொட்டியதாகவே சிங்கள காப்பியங்கள் உருவாகின என்பதே மறுக்கமுடியாத உண்மை. எனவே பௌத்தம் இந்து என்பதும் இந்து பௌர்ணமி என்மதும் பௌத்தம் பௌர்ணமி என்பதும் சிங்களம் பௌர்ணமி என்பதும் என்பன ஒரு நேர் கோட்டில் வருபவை என்பது உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா? எனது உரையின் பின் உங்கள் அகக்கண்களை திறந்து நிதானமாக யோசியுங்கள் இந்த நேர்கோட்டுத்தத்துவம் நமக்கிடையான உறவினை ஒற்றுமையை நெருக்கத்தை பிரிக்க முடியாத பிணைப்பை உங்களுக்கு உணர்த்தும்.
ராச்சிய விஸ்தரிப்பில் யுத்த வெறிகொண்டு அலைந்த சாம்ராட் அசோக சக்கரவர்த்தி கலிங்க மண்ணில் நடத்திய கலிங்கப் போர். கலிங்கப் போர் யுத்த வெறிகொண்டு அலையும் ஆட்சியாளர்களின் மனதை அகிம்சையின்பால் திருப்பிய வரலாற்று யுகமாற்றமாகும். கலிங்க யுத்தம் காரணமாக கலிங்க மண்ணில் ஓடிய மனித குருதி வெள்ளம் உயிரிழந்த சடலங்கள் உயிரிழந்த யானை, குதிரை படைகள் அத்தனைக்கும் மத்தியில் யுத்த வெற்றி இறுமாப்பில் யுத்த களத்தில் உலாவந்த சாம்ராட் அசோக சக்கரவர்த்தி யுத்த களநிலமை கண்டு யுத்ததின் கொடுமை உணர்ந்து கவலையுற்று மனுக்குலத்தின் பெறுமதி கண்டு தன் ஆதிக்க வெறி கலைந்து புத்தம் சரணம் கச்சாமி என்று யுத்த களத்தில் நின்று உரத்து கூறி மறுவாழ்வு பெற்று கௌதம புத்தனின் போதனை உணர்ந்து அரசபதவிக்கு அடுத்து காத்திருந்த தன் மக்களை தன் உறவுகளை பௌத்த தூதுவராக உலகின் நாற்திசையும் அனுப்பி பௌத்த தர்மத்தை வியாபிக்கச் செய்தான். அதன் காரணமாகதான் நமது இந்து சமுத்திரத்தின் முத்தான இரத்தினதுவீபம் இலங்கையில் புத்தம் சரணம் கச்சாமிஎன்ற கோசமும் முத்தா, முதித்தா, சங்கா என்ற தத்துவவமும் பிரகாசிக்கத் தொடங்கியது.
உலக வரலாற்றை புரட்டிய உலக வரலாற்றில் யுத்த வெறியை அகற்றிய உலக வரலாற்றில் மனுக்குலத்தின் பெறுமதியை உயர்த்திய கலிங்க யுத்தத்தை நினைக்கும் பொழுது என் மனக்கண் முன் ஞாபகம் வருவது முள்ளிவாய்க்கால் யுத்தமும் அதனூடாக என் தமிழ் தேசிய உறவுகள் கண்ட அவலமுமே என் நினைவுக்கு வருகின்றது. எனது பார்வையில் கலிங்க மண் கண்ட அவலம், துயரம், அழிவு அத்தனையும் என் முள்ளிவாய்க்கால் மண் கண்டது. ஆனால் கலிங்க யுத்தம் யுத்த வெறி கொண்ட சாம்ராட் அசோக சக்கரவரத்தியின் மனநிலையில் ஏற்பட்டமாற்றத்தினை முப்பது வருடகாலம் உள்நாட்டுயுத்தம் புரிந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தினை நடத்தி கலிங்க யுத்தத்திற்கு ஒப்பான பேரழிவினை எம்மண்ணில் ஏற்படுத்திய உங்களிடத்தில் காணவில்லை என்பதுவே எனது மனக்கவலை. கலிங்க யுத்தம் உலகிற்கு பௌத்தத்தை பரப்பியது போல உலகிற்கு உண்மை ஒளியை உணர்த்தியது போல உலகிற்கு சமாதானத்தின் தேவையினை உணர்த்தியது போல உலகிற்கு ஞானஒளியை போதித்தது போல முள்ளிவாய்க்கால் அவலம் எதனையும் உங்களிடத்தில் ஏற்படுத்தவில்லை.
முள்ளிவாய்காளில் யுத்தம் நிறைவு பெற்ற பின் இன்றைய கௌரவ பிரதமரும் அன்றைய மேதகு ஜனாதிபதியுமான மகிந்தராஜபஸ அவர்கள் அவ்வப்போது உள்நாட்டிற்கும் உலகிற்கும் கூறிய செய்திகள் எமக்கு ஒரு சிறு நம்பிக்கை ஒளிகீற்றை தந்தது. பதின்மூன்று போதாது பதின்மூன்றிற்கு அப்பால் பதின்மூன்று பிளஸ் தருவேன் என்றார். இந்நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மையில்லை அனைவருமே ஒருமித்த இலங்கையர் என்றார். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பிரதேச வேறுபாடு இல்லை அனைத்துமே எமது நாடு என்றார். அதுவும் வடக்கு, கிழக்கு என்று எல்லா இடமும் சென்று நம் சுந்தரத் தமிழை தன் சிங்கள தமிழில் சிறப்பாக சொன்னார். ஐ நா செயளாலர் நாயகமும் வந்தார் அனைத்துலக தலைவர்களும் வந்தார்கள் அன்மைய இந்திய நாட்டின் அரசுத்தலைமையும் வந்தது. அவர்கள் அனைவரிடமும் இதனையே கூறினார் நாடுகளிடையே நடக்கும் ஒப்பந்தங்களில் மட்டுமல்ல சர்வதேச சமவாயங்களில் ஏற்கப்படும் விடயங்கள் மட்டுமல்ல உள்நாட்டிலும் சர்வதேச ரீதியான கலந்துரையாடலிலும் அரசுத்தலைவர் மேற்கொள்ளும் கலந்துரையாடல் ஐயம்திரிபட ஏற்கத்தக்க விடயமே. அதனால் நடந்தவை அனைத்தையும் நம்பினோம் ஆனால் எமது நம்பிக்கை நிறைவேறியதாக நான் நம்பவில்லை. அவர்களும் நிறைவேற்றியதாக தெரியவில்லை. கலிங்க யுத்தம் உலகிற்கு ஏற்படுத்திய பௌர்ணமி நிலவு ஒளிபோல முள்ளிவாய்க்கால் யுத்த வெற்றி எமது நாட்டில் பௌர்ணமி நிலவு ஒளியினை பாய்ச்சவில்லை.
அதாவது எமக்கு ஏற்பட்ட வாய்ப்புக்களை தவறவிட்டமை தொடர்பாக புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் ஒருவரின் மேற்கோளோடு இதனை ஆரம்பிப்பது பொருத்தம் என்று எண்ணுகிறேன் ‘ வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் வராலாற்றில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதே ஆகும். அது எமக்கும் பொருந்தும் என்பதே எனது நிலைப்பாடு 1956ம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற கோசத்தோடு ஆட்சியை கைப்பற்றிய பண்டாரநாயக்கா அவர்கள் ஆட்சி அமைத்த பின்னர் யதார்த்தம் உணர்ந்து தமிழரசு கட்சி தலைவர் தந்தை செல்வா அவர்களுடன் வடகிழக்கு தமிழ்மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காணும் நோக்கில் இரு தலைவர்களும் இணைந்து பண்டா செல்வா ஒப்பந்தத்தை உருவாக்கினர். ஆனால் ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்டு ஒப்பமிடப்பட்ட மை காய முன்னரே பௌத்த பேரின வாதிகளினதும், பௌத்த பிக்குகளினதும் அழுத்தங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்கொள்ள முடியாத பண்டாரநாயக்கா இரு தரப்பு இணங்கி ஆக்கப்பட்ட ஒப்பந்தத்தினை ஒப்பந்த ஒழுக்க விதிக்கு முரணாக ஒருதரப்பாக கிழித்தெறிந்தார் இத்தனைக்கும் பண்டா செல்வா ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் சமஸ்டிக்கு சமமாவோ அல்லது இந்திய இலங்கை ஒப்பந்நத்தின் அழுத்தத்தால் உருவான பதின்மூன்றாவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகபணசபைக்கு ஈடானதானதோ அல்ல வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்மொழி பிரயோகம் சம்மந்தமான சரத்துக்களையே பொரும்பாலும் உள்ளடக்கியிருந்தது ஒரு வேளை பண்டா செல்வா ஒப்பந்தம் அமுலாகி இருந்தால மூன்று தாசாப்தங்களாக எமது நாட்டில் தமிழ் தேசிய விடுதலை என்ற பெயரில் எமது தரப்பாலும் நாட்டின் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் அரசு தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் அதன் மூலம் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள், உடைமைகள் அழிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதை ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார அபிவிருத்தியில் சிங்கப்பூரை விட மிஞ்சியிருக்கலாம் என்பதை நான் இன்றும் நம்புகின்றேன்.
பண்டா செல்வா ஒப்பந்தத்தின் கிழித்தெறியப்பட்ட பரிநாம வளர்ச்சியே எமது நாடு எதிர் நோக்கிய உள்நாட்டு யுத்தம் இது நாட்டின் ஒருமைப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தியதேயன்றி நாட்டின் இனரீதியான மதரீதியான மொழிரீதியான முரண்பாட்டை தோற்றுவித்தது. இந்த முரண்பாட்டின் முதிர்ச்சி வடகிழக்கு தமிழ் இளைஞர்களிடையே ஆயத போராட்டத்தை தோற்றுவித்தது. இந்த போரட்டத்தின் விளைவாக கோவிந்தன் கருணாகரம் ஆகிய நான் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினூடாக ஜனா எனும் பெயர் சூடி களமாடி விழுப்புண் பெற்று இறப்பின் தருவாய்க்கு சென்று இன்று உங்கள் முன் இந்த உயரிய சபையில் உரையாற்றுகின்றேன்.
இது மட்டுமல்ல யுத்த உச்சகட்டம் நிலவிய காலத்தில் மேதகு ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் காலத்தில் இன்றைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட பிராந்தியங்களின்  ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வரைபு இந்த உயரிய சபையில் தீயிட்டு கொழுத்தப்பட்டது. இது போன்று பல வட்ட மேசை மகாநாடுகள் சர்வகட்சி கலந்துரையாடல்கள் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு யாவும் கிடப்பில் போடப்பட்டு நம் நாடு யுத்த இருளில் மூழ்கி சின்னாபின்னம் அடைந்தது நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயங்களாகும். இவையெல்லாம் நாம் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களே. இது கூட நான் உங்கள் மீது வாசிக்கும் குற்றப்பத்திரிகை அல்ல இது எனதும் என் மக்களின் மனக்கவலை மாத்திரமே.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு உங்களுக்கு பெரும் வெற்றி இதில் எந்த வித ஐயமும் இல்லை ஆனால் இந்த வெற்றிக்கான காரண காரியங்களை நான் ஆராய முனையவில்லை. நீங்கள்பெற்ற இந்த பெரு வெற்றியை நம்நாட்டில் ஐக்கியம் ஒருமைப்பாடு இனமத மொழி ரீதியான சமத்துவம் என்பவற்றை கட்டியெழுப்ப பயன்படுத்துங்கள் படைகளின் மனோபாவம் படைத்தளபதிகளின் மனோபாவம் யுத்தத்தின் தர்மம் யுத்தத்தின் அதர்மம் அத்தனையும் புரிந்தவன் நான். ஏன் என்றால் நானும் முன்னாள் போராளி களமாடியவன் இதனால் தான் கூறுகின்றேன் யுத்தகால சமன்பாடு சமாதானகாலத்திற்கு பொருந்தாது. யுத்த வெற்றி இந்த தேர்தல் வெற்றி இவை மூலம் நீங்கள் கொள்ளும் மமதை சில வேளை விபரீதத்தை ஏற்படுத்தலாம்;. அந்த விபரீதம் எதிர்காலத்தில் உங்களுக்கும் ஏற்படக்கூடாது. ஆணை பெண்ணாக்க பெண்ணை ஆணாக்க மட்டுமே முடியாத அத்தனை அதிகாரங்களையும் கொண்டு தனக்கேற்ற வகையில் அரசியலமைப்பை உருவாக்க தனது பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து  பெரும்பாண்மை பெற்ற ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை இக்கனம் நினைவு கூர்ந்துகொள்ளுங்கள்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கோருவது பிரிக்க முடியாத பிளவு படாத ஒருமித்த நாட்டுக்குள் ஒன்றாக சமத்துவமாக வாழும் உரிமையினையே எமது கோரிக்கை. இதனை பிழையாக பொருள்கோடல் செய்யாதீர்கள் தென்னிலங்கை மக்களை எமது கோரிக்கை தொடர்பாக பிழையாக தவறாக வழிநடத்தாதீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது நாட்டை கட்டியெழுப்புவோம் என்று தெரிவித்தார்.