19வது மற்றும் 13வது திருத்த சட்டங்களில் மேற்கொள்ளும் திருத்தங்கள் நாட்டுக்கு உகந்ததாக அமையப்போவதில்லை

ஞா.சிறிநேசன்

தமிழ்பேசும் உறுப்பினர்களும்,முற்போக்காக சிந்திப்பவர்களும் 13வது திருத்த சட்டத்தினை பலவீனப்படுத்துவதிலோ 19வது திருத்த சட்டத்தினை பலவீனப்படுத்துவதற்கோ ஆதரவு தெரிவித்தால் இந்த நாட்டில் மீண்டும் பல பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்பிருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்காக திடசங்கற்பத்தை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வாதிகாரத்துவ ஜனாதிபதி ஆட்சிமுறையில் இருந்து மக்களை மீட்டெடுத்து ஜனநாயகத்தினையும் மக்கள் உரிமை சுதந்திரத்தினையும் பலப்படுத்தக்கூடிய தன்மையினை 19வதுதிருத்தம் கொண்டிருந்தது.அதனை அகற்றுவது என்பது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தொடர்நது கருத்து தெரிவித்த அவர்,

இன்றைய நிலையில் 19வது திருத்த சட்டத்தினை நீக்குவது தொடர்பிலும் அதேபோன்று 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கம் சிலாகித்துபேசிவருகின்றது.

19வது திருத்த சட்டமானது ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து நல்லாட்சியில் ஏற்படுத்திய ஒரு முற்போக்கான செயற்பாடாகும்.

எதேச்சதிகாரம்கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி ஜனாதிபதியின் சர்வாதிகார போக்குகளை கட்டுப்படுத்தி பாராளுமன்றத்தின் அதிகாரங்களை உயர்த்தக்கூடிய வகையிலும் சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுயாதீனமாக செயற்படக்கூடிய விதத்திலும் 19வது திருத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்கள், தன்மைகளைப்பொறுத்தமட்டில் ஒரு ஜனாதிபதி எத்தனை தடவையும் ஜனாதிபதி தேர்தலில்போட்டியிட்டு ஜனாதிபதியாக வரமுடியும் என்ற நிலைமை 18வது அரசியல்யாப்பில் காணப்பட்டது.225 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தினை ஒரு வருடத்தின் பின்னர் கலைக்கு அதிகாரம் ஜனாதிபதியுடம் காணப்பட்டது.ஆறு வருடங்கள் கொண்ட பாராளுமன்றத்தினை ஒரு வருடத்தில் தன்னிச்சையாக ஜனாதிபதி கலைத்துவிடுவதற்கான அதிகாரங்கள் காணப்பட்டன.225பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவிதியை தனியொருவர் தீர்மானிக்கினற நிலையிருந்தது.இது ஜனநாயகத்திற்கு மாறான சர்வாதிகாரம் எனக்கொள்ளமுடியும்.ஆனால் 19வது திருத்த சட்டம் வந்ததன் பின்னர் இந்த நிலைமையில் மாற்றம் செய்யப்பட்டது.பாராளுமன்றம் கூட்டப்பட்டு நான்கரை ஆண்டுகளின் பின்னர்தான் ஜனாதிபதியினால் கலைக்கமுடியும் என்கின்ற ஆரோக்கியமான செயற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.அதுவும்போதாது பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஜனாதிபதி தலையிடக்கூடாது என்பதே எனது கருத்தாகும்.தற்போதைய நிலையில் 19வது திருத்தினை மாற்றுகின்றபோது ஏற்கனவே இருந்ததுபோன்று பாராளுமன்றத்தினை ஒரு வருடத்தில் கலைக்கும் நிலையும் ஏற்படுமோ என்பது சந்தேகமாகவுள்ளது.

19வது திருத்த சட்டத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பல காணப்படுகின்றன. இதில் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படக்கூடிய சூழ்நிலைகள் காணப்பட்டன.19வது திருத்த சட்டம் அகற்றப்படும்போது சுயாதீன ஆணைக்குழுவினை கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தினை ஜனாதிபதி தனது கைகளில் எடுக்கும்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்கமுடியாத நிலைக்கு தளப்படும்.

1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மற்ற முடியாது அது தவிர்ந்த அனைத்தையும் செய்ய இயலுமான நிலை இருந்தது. ஆனால் 18ஆவது திருத்ததோடு அவையனைத்தையும் செய்ய முடியுமான நிலையே காணப்பட்டது. அந்நிலையை 19ஆவது திருத்தம் மாற்றியமைத்திருந்தது.

குறிப்பாக நீதித்துறையை தனக்கு விரும்பியபடி ஆட்டிப்படைக்கும் வல்லமையை ஜனாதிபதி கொண்டிருந்தார். இதன் ஊடாகவே தமக்கு விரும்பிய சில சட்டங்களை நிறைவேற்ற தடையாக இருந்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை மிலேச்சாதிகாரத்தின் மூலம் பதவிவிலக்கப்பட்டது.

இவற்றுக்கெல்லாம் முடிவுகட்டி ஜனநாயகத்தினைப் பாதுகாக்கும் நோக்கிலேயே 19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. 17ஆவது யாப்புத் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக் குழுக்களான தேர்தல் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு என்வற்றை மஹிந்த ராஜபக்ஸ 18ஆவது யாப்புத் திருத்தம் மூலம் இல்லாமலாக்கினார். ஆனால் 19ஆவது திருத்தத்தின் மூலம் மீண்டும் குறித்த சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் இதற்கும் மேலதிகமாக புதிதாக கணக்காய்வு ஆணைக்குழு, மற்றும் பெறுகை ஆணைக்குழு என்பனவும் உருவாக்கப்பட்டன.

அதுமட்டுமல்ல பழைய முறைமையில் ஜனாதிபதிக்கு எதிராக எவ்விதமான வழக்குத் தாக்கலும் செய்ய முடியாது என்றே இருந்தது. ஆனால் 19ஆவது திருத்தத்தில் தனிமனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களுக்காக ஜனாதிபதிக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்ற சரத்து இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கும் மேலதிகமாக சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவையும் உருவாக்கப்பட்டு அதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சிறுபான்மை இனங்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்திருந்தனர்.

இப்படிப்பட்ட ஜனநாயக முறைமைகளை எல்லாம் இல்லாதொழித்து மீண்டும் சிறுபான்மை இனங்களை அடக்கி ஓர் சர்வாதிகார, குடும்ப ஆட்சியினை தொடர்வதற்காகவே 19ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படவுள்ளது. இதற்கு சிறுபான்மையினக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

13வது திருத்த சட்டம் இந்திய-இலங்கை மூலம் கொண்டுவரப்பட்டது. மாகாணசபை முறைமையினைக்கொண்டது.13வது திருத்த சட்டத்தினை மேலும் வலுப்படுத்தவேண்டும்.காணி,பொலிஸ்,நிதியதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்,வடகிழக்கு இணைப்பு பற்றியெல்லாம்பேசப்பட்டது.13வது திருத்த சட்டத்தில் மேலும் பல தேவைகள் இருக்கும்போது அதனை திருத்தும்போது எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படப்போகின்றது என்பதை மிகவும் கவனமாக பார்க்கவேண்டியுள்ளது.

13வது திருத்த சட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையென்பது சிறுபான்மை மக்களின் உரிமையின் மீது கைவைக்கப்படும் நிலைமையாகும்.அத்துடன் அதிகாரப்பரவலாக்கல் மீது வைக்கப்படும் கையாகவும் இருக்கும்.

19வது மற்றும் 13வது திருத்த சட்டங்களில் மேற்கொள்ளும் திருத்தங்கள் நாட்டுக்கு உகந்ததாக அமையப்போவதில்லை.குறித்த ஆளும் கட்சிக்கு உகந்ததாக அந்த திருத்தம் அமையும்.தற்போதுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையென்பது அசுர பெரும்பான்மை.இதற்கு கையுயர்த்தும் ரோபோக்களாக தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் இருக்ககூடாது.தமிழ்பேசும் உறுப்பினர்களும்,முற்போக்காக சிந்திப்பவர்களும் 13வது திருத்த சட்டத்தினை பலவீனப்படுத்துவதிலோ 19வது திருத்த சட்டத்தினை பலவீனப்படுத்துவதற்கோ ஆதரவு தெரிவித்தால் இந்த நாட்டில் மீண்டும் பல பிரச்சினைகள் எழுவதற்கான வாய்ப்பிருக்கின்றது.