கல்முனை மாநகர சபையில் பணியாற்றிய சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மொட்டுக்கு வாக்களித்தமை காரணமாம் ; நீதியமைச்சரே நீதியை பெற்றுத்தாருங்கள் ; பாதிக்கப்பட்டவர்களால் மகஜரும் கையளிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான்)  

கல்முனை மாநகர சபையில் அதிகார துஸ்பிரயோகம் ஊழல்கள், மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்சியாக நடைபெற்று வருகின்றன இதனை குறித்த துறைக்கான உயரதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம் சுமத்தி அப்பிரதேச பொதுமக்கள் சிலரால் இன்று (21.08.2020) ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.

அரசாங்கம், மாகாண ஆணையாளர், கல்முனை மாநகர ஆணையாளர், முதல்வர், அடங்கலாக உயரதிகாரிகள் பலரையும் விழித்து எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்திக்கொண்டு கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் முன்றலிலிருந்து கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை மாநகர சபை அமைந்துள்ள வளாகம் வரை நடைபவனியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
கல்முனை மாநகர சபையில் ஊழல்கள் நடைபெற்று வருவதாகவும், சிற்றூழியர்கள் அரச அதிகாரிகளால் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்ட காரர்கள் இதன்போது குரலெழுப்பி கோஷமிட்டதுடன் கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டுச் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்தமையை காரணம் காட்டி தங்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் குற்றம் சாட்டினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது தற்போதைய நீதியமைச்சர் கௌரவ அலி சப்றி அவர்கள் அன்று கல்முனை பிரதேசத்திற்கு வந்த போது நான் மாலை அணிவித்து வரவேற்றேன். இன்று மொட்டுக்கு ஆதரவு வழங்கினேன் என்று என்னை பணிநீக்கம் செய்துள்ளனர் நீதி அமைச்சர் அவர்களே! நீதியை பெற்றுத்தாருங்கள் என்றார்.