தனி விருப்பு, வெறுப்புகளுக்கு பாடசாலைகளில் இடமளிக்கப்படக் கூடாது” மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம்

ஏ.எல்.எம்.சலீம்
“தனிநபர்கள், குழுக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு பாடசாலைகளில் இடமளிக்கப்படக் கூடாது அவ்வாறான நிலைமை பாடசாலைகளைச் சூழுமானால், பாடசாலைகள் முன்னேற்றம் காணமுடியாது அர்ப்பணிப்பான சேவையாளர்களின் பங்களிப்பே முக்கியமாகும்”
இவ்வாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் கூறினார்.
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப் பாடசாலையில், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் நிர்மாணிக்கப்படவிருக்கும் மூன்றுமாடி பல்தேவைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேசியப் பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.சாஜித், வலய கல்வி அலுவலக பொறியியலாளர் ஜௌஸி அப்துல் ஜப்பார், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எம்.சரீப்டீன், ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பழைய மாணவர் சங்கச் செயலாளர் அரூப் அர்ஸாத்தின் வரவேற்புரையுடன் ஆரம்பமான விழாவில், மாகாணக் கல்விப் பணிப்பாளர் அப்துல் நிஸாமின் அளப்பரிய கல்விச் சேவைகளைப் பாராட்டி பழைய மாணவர் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாகாண கல்விப் பணிப்பாளர் அப்துல் நிஸாம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசியப் பாடசாலையின் நீண்டகால கல்விச் சேவை மூலம் சமுதாயத்திற்கு சிறந்த தலைவர்கள் கிடைத்துள்ளனர். இந்தவகையில் பெறுமதியானவர்களை உருவாக்கிய பெருமைக்குரிய பாடசாலையாக இப்பாடசாலை திகழ்கின்றது.
இந்த நிலையில் இப்பாடாசலையின் ஆரம்பகாலகட்டத்தில் அதிபராக பொறுப்பேற்று, கல்வி அபிவிருத்திக்காகப் பாடுபட்ட மர்ஹ{ம் சீ.ஓ. லெஸ்தகீர் அவர்களை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டும்.
அவர் போன்றே இன்றைய அதிபர் அப்துல் கபூரும் பாடசாலை முன்னேற்றத்திற்காகவும், மாணவர் கல்வி அபிவிருத்திக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவது பாராட்டத்தக்கதாகும்.
ஒரு பாடசாலையின் முன்னேற்றமும், கல்வி அபிவிருத்தியும் அர்ப்பணிப்பான சேவைகள் மூலமே ஏற்படும் ஆனால் பாடசாலைகள் தனி நபர்களினதோ, அல்லது குழுக்களினதோ விருப்பு வெறுப்புகளுக்கோ உட்பட்டால் எத்தகைய முன்னேற்றங்களையும் காணமுடியாது.
இத்தகைய பாடசாலைகளின் முன்னேற்றம் கருதாத தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஒரு போதும் நாம் இடமளிக்கக் கூடாது.
ஒரு பாடசாலைக்கு அஸ்த்திவாரமாகத்திகழ்வதும், பெயர் பெறுவதும் அப்பாடசாலையின் கல்வி அபிவிருத்திச் சாதனைகளிலேயே தங்கியுள்ளது.
இச்சாதனைகளை நிலைநாட்டுவதற்கு பெற்றோர் ஒத்துழைப்புமட்டுமன்றி பாடசாலை அபிவிருத்தி சபைகள், பழைய மாணவர் சங்கங்களின் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பும், சேவைகளும் முக்கியமாகும்.
பழைய மாணவர்களின் கொழும்புக்கிளையொன்றும், வெளிநாட்டுக்கிளையொன்றும் அங்குராப்பணம் செய்து விடுவதில் அர்த்தமில்லை.
பெயரளவில் மட்டும் இவை இயங்காது பாடசாலைகளுக்குப் பயனுள்ள அமைப்புகளாக இவை செயற்பட வேண்டும்.
தாம் கற்ற, இன்றைய உயர் நிலைக்கு வழிவகுத்த பாடசாலையின் முன்னேற்றம், கல்வி அடைவு மட்ட உயர்வுக்கு வழிவகுக்கும் சேவைகளை அர்ப்பணிப்புடன் நாம் ஆற்ற வேண்டும்.
இந்த வகையில் இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயற்பாடுகளை நான் வெகுவாகப்பராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
இன்று பழைய மாணவர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்தேவைக்கட்டிட நிர்மாணப் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
எனது கல்விச் சேவை முடிவதற்குள் எனக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களைக் கௌரவிக்க வேண்டுமென்ற ஆசை கொண்டவனாக நானுள்ளேன்” என்றார்.