பழிவாங்கல் இல்லை : மாணவர்களின் கல்விக்கே முன்னுரிமை

0
374

பழிவாங்கல் என்பது குறித்து இதுவரை ஜோசித்ததும் இல்லை. அதற்கான நேரமும் இல்லை. பாதிக்கப்பட்டிருக்கின்ற மாணவர்களின் கல்வியை கட்டியெழுப்புவதே ஒரே நோக்கு என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

மீண்டும் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையை இன்று(17) மட்டக்களப்பு மேற்கில் பொறுப்பேற்றதன் பின்பு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

அதிபர்களோ, ஆசிரியர்களோ, ஏனைய ஊழியர்களோ சேவையை பெறுவதற்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவாக சேவைகள் வழங்கப்படும். வலயக்கல்விப் பணிப்பாளரை சந்திப்பதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை. எப்போதும் கதவுகள் சேவைக்காக திறந்தே இருக்கும்.

யாரையும் பழிவாங்கும் எண்ணமில்லை. அவசர அவசரமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை தேவையற்றது என கருதும் பட்சத்தில் மாகாண பணிப்பாளரின் அனுமதியுடன் இரத்து செய்யப்படும், குண்டுவெடிப்பு, கொரோனா போன்ற காரணங்களால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயற்படுத்த வேண்டி உள்ளது. கடந்த காலங்களில் தேசிய ரீதியாக சாதித்தோம், தொடர்ந்தும் பல சாதனைகளை நிலை நிறுத்த எண்ணியுள்ளோம் என்றார்.