சுகிர்தகுமார், சகா
‘ஒன்றாகுவோம் ஒரு குடையின் கீழ்’ எனும் கருப்பொருளில் அன்புக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களை அரசியல் ரீதியில் ஒரு குடையின் கீழ் கொண்டுவருகின்ற முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனை கூட்டம் இன்று 16 ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் சுந்தரம் சிறிதரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டத்தின் கல்விமான்கள் அரச உயர் அதிகாரிகள் புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் இளைஞர்கள், யுவதிகள், ஆலயம் உள்ளிட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகங்கள், பொதுமக்கள் ; என பலரும்; கலந்து கொண்டனர்.
இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வின் பின்னராக இடம்பெற்ற தலைமையுரையின் போது அன்புக்கரங்கள் அமைப்பினர் கடந்த காலத்தில் மேற்கொண்ட சமூக பணிகள் தொடர்பில் விளக்கினார். அத்தோடு காலத்தின் தேவைகருதி அம்பாரை தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபடவேண்டியதன் நோக்கத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்காக மக்களாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இதற்காக அன்புக்கரங்கள் முன்னெடுத்துள்ள ஆக்க பூர்வமான நடவடிக்கை தொடர்பிலும் விளக்கினார்.
இதேநேரம் விளக்கவுரை வழங்கிய அமைப்பின் உறுப்பினர் பொறியியலாளர் ஆர்.யுவேந்திரா கூறுகையில் 95000 இற்கும் மேற்பட்ட வாக்குகளை வைத்திருந்த போதிலும் தமிழர்கள் பிரிந்து நின்று செயற்பட்டதன் விளைவினை கடந்த பொதுத்தேர்தலின் முடிவுகள் எமக்கு கற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்காரணமாகவே நாம் ஒன்றுபடவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் எதிர்வருகின்ற தேர்தலிலும் இதுபோன்று பிரிந்து செயற்படுவதனால் இன்னும் பல இழப்புக்களை தமிழ் மக்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலிலும் இன்னும் பல கட்சிகள் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களிடையே களமிறக்கப்படுவதற்கான காய் நகர்த்தல்களும் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.
ஆகவே எத்தனை கட்சிகள் களத்தில் குதித்தாலும் அம்பாரை மாவட்ட தமிழ் ஒன்றுபடாத சந்தர்ப்பத்தில் வெற்றி வாய்ப்பென்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என்பது யதார்த்தம் என்பதையும் புரிய வைத்தார்.
இதன்பின்னர் உரையாற்றிய அரச அதிகாரிகள் மற்றும் கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட கிராமங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பொதுமக்கள் அன்புக்கரங்கள் அமைப்பு அம்பாரை தமிழ் மக்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளமையிட்டு மகிழ்ச்சி வெளியிட்டதுடன் பாராட்டினையும் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம் அனைத்து அரசியல் கட்சிகளையும் பொதுச்சின்னம் ஒன்றின் கீழ் அணி திரட்டி அதற்குள் அவர்கள் விரும்புகின்ற வேட்பாளர்களை நிறுத்தி ஒட்டுமொத்தமான வாக்கினையும் தெரிவு செய்யப்படும் பொதுச்சின்னத்திற்கு அளிப்பதன் மூலம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கும் செயற்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அத்தோடு வாக்களிக்கும் வீதத்தினை மக்களிடம் அதிகரிக்க செய்யும் விழிப்பூட்டலையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
பல்வேறு வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்ற கூட்டத்தின் இறுதியில் எதிர்காலத்தில் குறித்த செயற்றிட்டத்தை செயற்படும் வகையிலான குழுவொன்றும் மாவட்டம் முழுவதுமாக இருந்து வருகை தந்தவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கான பணிகளும் ஒப்படைக்கப்பட்டன