தேசியபட்டியலில் எதுவிதமாற்றமும் செய்யப்படமாட்டாது இரா.சம்பந்தன். கலையரசனுக்க வழங்கியது தவறல்ல மாவை

0
128

(கதிரவன்)

தமிழ்தேசிய கூட்டமைப்பின்  தேசிய பட்டியலில் எதுவிதமாற்றங்களும் ஏற்படாது அத்தேசிய பட்டியல் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் செயற்குழுக்கூட்டம் நேற்று திருமலையில் இரா சம்பந்தன் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விடயங்கள்  பற்றி ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தின்பின்னர் பத்திரிகையாளர்களிடம் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில்,தேசியப்பட்டியல் நியமனத்தில் எதுவிதமாற்றங்களும் ஏற்படாது இந்நியமனம் மேற்கொள்ளப்பட்ட சில நடைமுறைகள் பற்றி எதிர்வரும் மத்திய குழுக்கூட்டத்தில்  கலந்தாலோசிக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் இரா.சம்பந்தன் ,மாவை சேனாதிராஜா, கி.துரைராஜசிங்கம், எம்.ஏ சுமந்திரன், சி.வி.கே சிவஞானம், கே.வி. தவராஜா, சி.சிறிதரன் டாக்டர் சத்தியலிங்கம் போன்றோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் அம்பாறையைச் சேர்ந்த தவராசா கலையரசனுக்கு வழங்கியது தவறல்ல. ஆனால், அது வழங்கிய முறைமைதான் தவறு.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா  இதன்போதுதெரிவித்தார்.
அந்த நியமனம் அம்பாறையின் கலையரசனுக்கு வழங்கியது தவறல்ல என்று கூறிய அவர், ஆனால் அது வழங்கிய முறைமை தவறு என்று குறை கூறினார். அவரது குற்றச்சாட்டு தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மீது காட்டமாக இருந்தது. ஆனால், பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம் அதற்குப் பதிலளித்து, மோதலில் ஈடுபடாமல் தவிர்த்துக் கொண்டார்.
“அம்பாறைக்கு அல்லது மகளிர் பிரதிநிதி ஒருவருக்கு அது கிட்டுவதுதான் பொருத்தம் என்று நான் கருதினேன். எனினும், ஆதரவாளர்களும் கட்சிப் பிரமுகர்களும், அதனைச் பெற்றுக்கொள்ளும்படி என்னை வற்புறுத்தியமையால் நான் அதற்கு இணங்கினேன். இப்போது அந்தப் பதவி அம்பாறையின் கலையரசனுக்கு வழங்கப்பட்டு விட்டது. இனிமேல் அதைக் குழப்ப வேண்டாம். இந்த விடயத்தை இன்று இங்கு பேசுவதை நிறுத்துவோம். 29ஆம் திகதி வவுனியாவில் நடைபெறும் கட்யின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதனை ஆராய்வோம்” என்று தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் பின்னடைவு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்குக் குழு ஒன்றை அமைப்போம்” என்று மாவை சேனாதிராஜா இதன்போது தெரிவித்தார்.
அந்தக் குழுவுக்குக் கட்சி சாராத பொதுப் பிரமுகர்களை நியமிப்பதே பொருத்தமானது என சுமந்திரன் தெரிவித்த யோசனையை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து கடந்த பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஏற்பட்ட பின்னடைவுகளை விரிவாக – நடுநிலையாக – பக்கம் சாராமல் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கட்சி சார்பற்ற ஐந்து பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமிப்பது என்றும், அந்தக் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்து அதனடிப்படையில் அடுத்த கட்டம் குறித்துத் தீர்மானிப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.