ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள்களை பொதி செய்து கொண்டிருப்பதாக 11.8.2020 அன்று இரவு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்திற்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக போதைப்பொருளை பொதி செய்த நிலையில் ஐவர் கைதாகினர்.
இவ்வாறு கைதானவர்கள் 25 வயது முதல் 30 வயதுடையவர்கள் எனவும் சுமார் 1 கிராமிற்கு அதிகமான பொதி செய்யப்பட்ட போதைப்பொருள் பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த போதைப்பொருளை பனடோல் மாத்திரையுடன் கலந்து பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டார்.
மேலும் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று(11) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.