ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்த நிலையில் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபர் தெரிவு எந்த போட்டிகளுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் புதிய தவிசாளர் தெரிவுக்கான அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஷ், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், உதவி தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபையில் தவிசாளராக பதவி வகித்த ஐ.ரீ.அஸ்மி (அமிஸ்டீன்) தனது தவிசாளர் பதவியை கடந்த ஜூலை மாதம் 20ம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஓட்டமாவடி பிரதேச சபையினை கைப்பற்றியது. அதில் தவிசாளராக ஐ.ரீ.அஸ்மி தெரிவு செய்யப்பட்;டார். அந்த நிலையில் அதே கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எம்.நௌபர் என்பவருக்கு இரண்டு வருடங்களில் பின்னர் தவிசாளர் பதவியை விட்டுக் கொடுப்பதாக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது.
அதன் பிரகாரம்; பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற அமர்வில் சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் வேறு எவரது பெயரும் பரிந்துரைக்கப்படாத நிலையில் எந்தவித போட்டிகளும் இன்றி கலந்து கொண்ட பதின்மூன்று உறுப்பினர்களால் புதிய தவிசாளராக சபை உறுப்பினர் ஏ.எம்.நௌபர் தெரிவு செய்யப்பட்டார்.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சபை உறுப்பினர்கள் ஏழு பேரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சபை உறுப்பினர்கள் மூன்று பேரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர்களுமாக கலந்து கொண்ட பதின்மூன்று பேரின் ஆதரவுடன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டது.
அத்தோடு குறித்த தவிசாளர் தெரிவு செய்யும் அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.