வெளியில் இருப்பவர்களை விட சிறையில் இருப்பவரை நம்பும் மக்கள்!

– படுவான் பாலகன்; –
இலங்கை நாட்டில் பொதுத்தேர்தல் இடம்பெற்று மகிந்த ராஜபசக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன 128 ஆசனங்களுடன் 17தேசியப்பட்டியல்களையும் உள்ளடக்கி மொத்தமாக 145ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருக்கின்றது. இத்தேர்தல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு செய்திகளைச் சொல்லியிருக்கின்றது. நீண்டகாலமாக தேசிய கட்சியாகவிருந்து, நாட்டில் ஆளும், எதிரக்கட்சிகளாகவும் தம்மை நிலைநிறுத்திய கட்சிகள், நடைபெற்று முடிந்த தேர்தலில் படுதோல்வியினை சந்தித்திருக்கின்றன. புதிதாக முளைத்த கட்சிகள் பெரும் வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. இதேவேளை குறித்த சில மாவட்டங்களை மாத்திரம் முன்னிறுத்தி தேர்தலில் களமிறங்கிய கட்சிகளும் எதிர்பாராத வெற்றிகளைக் குவித்திருக்கின்றன. குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தனது செல்வாக்கினை கடந்த காலங்களில் நிலைநிறுத்திக்கொண்டிருந்தாலும் இம்முறை தேர்தலில் சில இடங்களில் வாக்கு சரிவினை எதிர்கொண்டிருக்கின்றது. மொத்தமாக வடக்கு, கிழக்கிலே எதிர்பாராத வாக்குசரிவினை எதிர்கொண்டுள்ளது. இவ்வாறான சூழலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலின் வாயிலாக என்ன கூறவருகின்றனர் என்பதனையும் ஆராயவேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 308பேர் வேட்பாளர்களாக களமிறங்கியிருந்தனர். அவ்வாறு களமிறங்கியிருந்தாலும், தமிழ்தேசிய கூட்டமைப்புதான் வெற்றிபெறும் என்ற பேச்சு வழமைபோன்று இருந்தது. அப்பேச்சு பொய்யாகாது தமிழ்தேசிய கூட்டமைப்பு மாவட்டத்தில் அதிக வாக்கினைப் பெற்று முதலிடத்தினைத் தக்கவைத்து இரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஆனாலும் இதனை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் நான்கு உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய இம்மாவட்ட மக்கள் 2015ல் மூவரை அனுப்பி இருந்தனர். 2020இல் நான்கு உறுப்பினரை தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக அனுப்ப வேண்டுமென்பது அக்கட்சியினரின் நிலைப்பாடாகவிருந்தது.

இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு நிகராக மட்டக்களப்பில் தாம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மட்டக்களப்பு மாவட்டத்தினை முதன்படுத்தி தேர்தலில் களமிறங்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கொண்டிருந்தது. இதைச்சாத்தியமாக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் பக்கத்தில் இருந்தது. கடந்த காலங்களில் அக்கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பொதுத்தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்கும், முதலமைச்சராகவிருந்து மாவட்டத்தில் மேற்கொண்ட அபிவிருத்திகளும் ஆரம்ப படிநிலையாயின. அதற்கு இன்னும் வலுச்சேர்க்கும் வகையில் உள்ளுராட்சி தேர்தலில் பெற்றுக்கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியிருந்ததெனலாம். அத்தோடு விட்டுவிடாது, அக்கட்சியில் இறக்கப்பட்ட வேட்பாளர்கள் வாக்கு வங்கி உள்ளவர்களாவே காணப்பட்டனர். இதனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஒரு ஆசனத்தினை பெறும் என்ற நம்பிக்கை ஆரம்ப முதலே பலரிடமும் தோன்றின.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், அவரின் ஆதரவாளர்கள், அக்கட்சியில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் என பல ஆதரவு அணியாளர்களை இணைத்துக்கொண்டனர். குறிப்பாக இளைஞர்களே அதிகமாக ஆதரவாளர்களாகினர். சமூகவலைத்தளங்களிலும் பிரசாரங்கள் மும்முரமாகவே இருந்தது. ஏனைய பிரசார கூட்டங்களிலும் மக்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப் பெறும் என்ற நம்பிக்கையும் பலரிடத்தில் இருந்தது. சில இடங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் என்ன செய்தது? என்ற வினாவினையும் மக்கள் தொடுத்திருந்தனர். இவ்வினா மக்கள் அபிவிருத்தியினை அதிகம் விரும்புகின்றனர் என்ற நிலைப்பாட்டினை எடுத்துரைத்தது. அவ்வாறான அபிவிருத்தியினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடாக மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரை குறிப்பாக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை மக்கள் நம்பியிருக்கின்றனர் என்பதனை உணரமுடிகிறது. இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பினுள்ளே உள்ள உட்பூசல்களும், வடக்கு, கிழக்கிற்கான பொதுவான முடிவுகளும் மட்டக்களப்பு மாவட்ட அரசியலில் பிரதேசவாதம் மேலோங்க காரணமென்றும் குறிப்பிடலாம்.

மாவட்டத்தில் உள்ள மக்களினதோ அல்லது உறுப்பினர்களினதோ கருத்துக்கள் முதன்மைப்படுத்தாது, பொதுவாக எடுக்கப்படுகின்ற முடிவுகள் மாவட்டத்திற்கு பொருந்தாமல் போயின. பெண் உறுப்பினர் ஒருவரை மாவட்டத்தில் உள்வாங்க வேண்டுமென்ற கருத்துக்கள் இருந்தாலும், பெண் வேட்பாளர் ஒருவர் உள்வாங்கப்படவில்லை. இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தம்பக்க பல்வேறு நியாயாதிக்கங்களை முன்வைத்தாலும், ஆரம்பத்தில் வழங்க மறுத்தனர் என்பதே உண்மை எனவும் கூறப்படுகின்றது. இதனையும் சாதகமாக்கிக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மாவட்டத்தில் பெண் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி தமது வாக்கு வங்கியினை அதிகரித்துக்கொண்டனர். இதேவேளை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்கினையும் பிள்ளையான் பெற்றுக்கொண்டார்.
இங்கு விசேடமாக பார்க்கப்பட வேண்டிய விடயங்களும் உள்ளன. குறிப்பாக தமக்கு வாக்கு சேகரிப்பதற்காக ஒவ்வொரு வேட்பாளர்களும் பல்வேறு உத்திகளை கையாண்டனர், பிரசாரங்களை மேற்கொண்டனர், வாக்குறுதிகளை வழங்கினர், நேரடியாக மக்கள் இடத்திற்குச் சென்றனர். ஆனால் எந்ததொரு பிரசார மேடைகளிலும் ஏறாது, மக்கள் மத்தியில் நேரடியாக எந்ததொரு வாக்குறுதிகளையும் வழங்காது, மக்களையும் சந்திக்காது 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் விருப்பினைப் பெறுவதென்பது இலகுவானதல்ல. இச்சாதனை வரலாற்றுச் சாதனையும் கூட. அவ்வாறு பார்க்கின்ற போது வெளியில் இருப்பவர்களை விட, சிறையில் இருப்பவரை மக்கள் நம்புகின்றனர். என்பதனை இத்தேர்தல் வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, கடந்த காலங்களில், பல்வேறு அபிவிருத்திகள் சகோதர இனத்தவர்கள் வாழும் சூழலில் இடம்பெற்றாலும், தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்திகள் குறைவாகவே இருந்தன. இதனால் தொழில்வாய்ப்புக்களிலும், ஏனைய துறைகளிலும் பின்தங்கிய தன்மையிலேயே தமிழர் பிரதேசங்கள் இருந்து வருகின்றன. இதற்கு அப்பால் அத்துமீறல்கள், கையகப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்றனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுகின்றன. இதனை நிறுத்த வேண்டிய தேவையும், அமைச்சரவைக்கு மாவட்டம் சார்ந்த விடயங்களை கொண்டு சென்று பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாடும், வடக்கில் அபிவிருத்தியையும், உரிமையையும் பேசக்கூடிய இருசாரர் இருக்கின்ற போதிலும் மட்டக்களப்பில் அவ்வாறானதொரு நிலையில்லை. இரண்டும் வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடத்தில் தென்பட்டதென்ற கருத்தும் வலுப்பெற்றிருக்கின்றது.
இதேவேளை, பலமிக்க தலைமைத்துவமொன்று கிழக்கிற்கு தேவையென்ற செய்தியையும் இத்தேர்தல் எடுத்துக்காட்டிருக்கின்றது என்ற கருத்தும் நிலவுகின்றது. 74வீதமாக தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பில் நான்கு தமிழ் உறுப்பினர்கள் தெரிவாக வேண்டும் என்பது பலரது விருப்பு. அவ்விருப்பு மூன்று கட்சிகள் ஊடாக நிலைபெற்றிருக்கின்றது. இதன் மூலம் மாவட்டம் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியையும் பெற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளதெனலாம்.