எனக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மூவின மக்களும் வாக்களித்துள்ளனர்- இம்ரான் மகரூப்

0
117
சில்மியா யூசுப்
எனக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மூவின மக்களும் வாக்களித்துள்ளனர்,
எதிர்வரும் பாராளுமன்றத்தில் உங்களில் குரலாக எனது குரல் பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் ஒலிக்கும் என திருகோணமலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மேலும் கூறுகையில்,
திருகோணமலையில் போட்டியிட்ட முக்கியமான வேட்பாளர்களில் மிகக் குறைந்த செலவில் தேர்தலை எதிர்கொண்ட வேட்பாளர் நான். எனக்காக பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ள உங்களுக்கு நான் சம்பளம் வழங்கவில்லை. எனது பிரச்சார நடவடிக்கைகளுக்கு கூடிய கூட்டம் காசு மற்றும் சலுகைக்களுக்காக கூடிய கூட்டமல்ல அன்பால் தானாக சேர்ந்த கூட்டம் என்பதை நான் பெருமையாக சொல்லிக்கொள்வேன். இது உங்களின் தியாகத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற வெற்றியாகும்
தேர்தலில் அதிகம் செலவு செய்யாததால் பாராளுமன்றம் சென்ற பின் தேர்தல் செலவுகளை ஈடுசெய்ய உழைக்க வேண்டும் என்ற தேவை எனக்கு கிடையாது. கடந்த காலங்களில் எவ்வாறு ஊழலற்ற பயணமாக எனது பயணம் தொடர்ந்ததோ அதுபோன்றே இனிவரும் காலங்களிலும் தொடரும்.
எனக்கு ஒரு பிரதேசத்தில் குறைவான வாக்குகள் இன்னொரு பிரதேசத்தில் அதிகமான வாக்குகள் விழுந்தன என்று யாரும் எந்த ஊரையும் உயர்வாக தாழ்வாக பேசே வேண்டாம். எனக்கு மாவட்டம் முழுவதும் உள்ள மூவின மக்களும் வாக்களித்துள்ளனர்.
அதுபோன்று முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் பெரும்பாலான ஆதரவாளர்களின் ஒத்துழைப்பும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒத்துழைப்பும் கிடைத்திருந்தது. அவர்களுக்கும் இச்சந்தர்பத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.