(எஸ்.அஷ்ரப்கான்)
இந்த அரசியலின் மூலமாக வரும் ஒரு சதமும் என் உடம்பில் சேராது என்று திகாமடுல்ல மாவட்ட அகில இலங்கை மக்கள் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஷர்ரப் முதுநபீன் தெரிவித்தார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் பொத்துவில் பள்ளிவாயலில் வைத்து மக்களிடம் உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கூறுகையில்,
ஒரு பாராளுமன்ற உறுப்பினராகி விட்டால் முதலாவதாக வாகன பேர்மிட் வரும். அதில் இரண்டு கோடி, மூன்று கோடி என்று உழைத்துக்கொள்வார்கள். எனவே, நான் அல்லாஹ்வின் மாளிகையிலிருந்து சத்தியமிட்டு வாக்குறுதி வழங்குகிறேன். இந்த அரசியலின் மூலமாக வரும் ஒரு சதமும் என் உடம்பில் சேராது.
நான் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறேன். நான் உழைத்து என்னுடைய குடும்பத்தையம் என்னையும் காப்பாற்றிக் கொள்வதற்கு எனக்கிருக்கின்ற கோர்ட் போதும்.
என்னுடைய நோக்கம் இந்த சமூகம் வெற்றி பெற வேண்டும். அதற்கான வழியை அல்லாஹ் காட்டித் தந்துள்ளான். எனவேதான் நாம் இணைந்து ஒற்றுமையாக எமது சமூகத்திற்காக உழைப்பதற்கும் சவால்களை எதிர்கொள்ளவும் முன்னின்று பாடுபட வேண்டும்.
எனது வெற்றிக்காக வாக்களித்து, உழைத்த அணைத்து அம்பாறை மாவட்ட மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.