தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதம் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும்

மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை இணைப்பாளர் ஆர். மனோகரன்
(எஸ்.சதீஸ்)
இந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் வரும் பெறுபேற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஜனநாயக முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதம் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவை இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

இடம்பெறும் பொதுத் தேர்தல் பற்றியும் அதற்குப் பின்னரான சமூக நிலைமைகள் குறித்தும் அவர் செவ்வாய்க்கிழமை 04.08.2020 ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்ட சர்வமதப் பேரவை மாவட்டத்தில் இன மத நல்லிணக்கத்தினூடாக ஐக்கியப்பட்ட சமூகத்தையும் அதன்வழி அபிவிருத்தியையும் அமைதியையும் அடைந்து கொள்வதற்கு முயற்சித்து வருகின்றது.

அந்தவகையில் மக்களின் கருத்துச் சுதந்திரம் சிந்தனைச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம் மத சுதந்திரம் என்பனவற்றை மதித்து தேர்தல் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு நாம் விழிப்புணர்களை அவ்வப்போது வழங்கி வந்திருக்கின்றோம்.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற ஒரு அம்சமாக தேர்தல்கள் விளங்குகின்றன.

மனித உரிமைகளின் அடிப்படையில் ஒருவருக்குள்ள விருப்பத் தேர்வையும் அதன் மூலமாகத் தெரிவாகும் மக்கள் பிரதிநிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது.

அதேவேளை தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் எந்த சமூக அரசியல் பின்னணிகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இனவாதம் மதவாதம் என்பனவற்றையும் வெறுப்புணர்வுகளையும் விதைக்காமல் சிறந்த சேவையாற்ற முன்வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

பிரதேசத்தில் அனைத்து மதங்கள் அனைத்து இனங்களுக்கிடையில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சகவாழ்வுக்கான செயற்திட்டங்களில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள தெரிவாகப் போகும் மக்கள் பிரதிநிதிகள் சிரத்தை எடுக்க வேண்டும்.

உள்ளுர் சமூகங்களுக்கிடையில் சமாதானத்திற்கான வழிவகைகளைக் கட்டியெழுப்பும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. பிரதேசத்தில் இன, மத முரண்பாடுகளை பின்புறத்தில் நின்று தூண்டி விட்டு அழிவுகளை ஏற்படுத்தும் அறிவீனர்களாக தெரிவாகப் போகும் மக்கள் பிரதிநிதிகள் இருந்து விடக் கூடாது என்பதே மாவட்ட சர்வமதப் பேரவையின் எதிர்பார்ப்பாகும்.

நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய சமாதான கலந்துரையாடல் செயற்பாடுகளில் அனைத்து இன மதங்களையும் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் பங்கெடுக்க வேண்டும்.  என்றார்.