சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் நௌஷாட் இராஜினாமா!

(காரைதீவு  நிருபர் சகா)


சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

சமகால அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக தவிசாளர் நௌசாட் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இராஜினாமா தொடர்பாக ஜனாப் நௌசாட் கூறுகையில்:
இன்று சம்மாந்துறை பிரதேசசபைத்தவிசாளர் பதவியை  அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் உரிமையைக்கோரியதன் காரணமாக தன்மானத்துடன் நான் இந்த ஊரில் அரசியலில் இருப்பதனால் இப்பதவியை அவருக்கு மீண்டும் கொடுத்துவிட்டு மக்களுடன் மக்கள் சேவகனாக இருக்கவிரும்பி எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரும் வகையில் இப்பதவியை இராஜினாமாச் செய்திருக்கிறேன். என்றார்.

ஜனாப் நௌசாட் கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  போட்டியிட்டு வெற்றியீட்டினார். கட்சி ஸ்ரீல.சு.கட்சியினருடன் செய்துகொண்ட ஒப்பந்தம் காரணமாக ஆட்சியை அமைத்து  தவிசாளராகத் தெரிவானார்.

சமகால அரசியல் மேடைகளில் மாவட்டத்தை வென்றெடுப்போம் என்ற தொனியில் ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதுதொடர்பாக அ.இ.ம.காங்கிரஸ் கட்சியித்தலைவர் றிசாட்பதியுதீன் சம்மாந்துறை மேடையில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அண்மையில் உபதவிசாளராக நியமிக்கப்பட்ட ஆதம்பாவா அச்சிமொகமட் பதில் தவிசாளராக எதிர்வரும் 10ஆம் திகதி முதல் கடமையேற்பார் எனத் தெரியவருகிறது.