மூதூர் முன்னம்படி வெட்டை கிராம மக்கள் வாக்கு சீட்டினை நிராகரித்துள்ளனர்.

சி.சசிகுமார்
திருகோணமலை

திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்னம்படி வெட்டை கிராம மக்களின் வாக்காளர் அட்டையில்  (வோட் லிஸ்ட்) விலாசம் பிழையாக அச்சடிக்கப்பட்டுள்ளமையால் 247 வாக்கு சீட்டினையும் கிராம மக்கள் நிராகரித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டிற்கு பிறகு நடைபெற்ற அனைத்து  தேர்தல்களிலும் முன்னம்படி வெட்டை கிராம மக்களின் வாக்கு சீட்டுக்களில் விலாசம் பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட  தேர்தல் திணைக்களத்தில் பல தடவை முறையிட்டிருந்த போதிலும் இதுவரைக்கும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு வீட்டில் தங்கி இருப்பவர்களுக்குகக்கூட விலாசம் பிழையாக அச்சடிக்கப்பட்டுள்ளது என்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரினால் வழங்கப்பட்ட வாக்காளர் படிவத்தில் தமது தேசிய அடையாள அட்டையில் இருக்கும் விலாசத்தினையே தாம் பதிவிட்டதாகவும் தற்போது தமதுவாக்கு சீட்டில்  தாம் பதிவிட்ட விலாசம் வரவில்லை எனவும் மக்கள் அங்கலாக்கின்றனர்.

இது தொடர்பாக கோசங்களை எழுப்பி தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தியதோடு அனைத்து (247) வாக்கு சீட்டுக்களையும் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் இன்று வைத்துள்ளனர்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு முன்னம்போடி வெட்டை, பாலத்தடிச்சேனை, மூதூர் என வருவதற்கு பதிலாக பாலத்தடிச்சேனை, தோப்பூர் எனவும்  பிழையாக விலாசம் வாக்காளர் அட்டையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.