சாய்ந்தமருது கூட்டத்தில் ஹக்கீம் உறுதி
(அஸ்லம் எஸ்.மௌலானா)
பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றபோது சாய்ந்தமருது பிரதேசத்திற்கு அந்த மாகாண சபையில் உச்ச அதிகாரம் வழங்கப்படும் என்று கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்தார்.
அதேவேளை சாய்ந்தமருதுக்கு நகர சபையை ஏற்படுத்துவதற்காக எம்மால் முன்னெடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் தொடரும் என்றும் அவர் உத்தரவாதமளித்தார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடற்கரையில் ஞாயிறு (02) இரவு இடம்பெற்ற இறுதிப் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இவற்றைக் குறிப்பிட்டார்.
தனியான நகர சபைப் போராட்டம் காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் நலிவடைந்து காணப்பட்ட சூழ்நிலையில், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ரவூப் ஹக்கீம் பங்குபற்றிய இப்பிரசாரக் கூட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இத்தேர்தலில் எங்கும் எவருக்கும் எந்த வாக்குறுதியும் வழங்கப்பட மாட்டாது என்று முன்னதாக கூறியிருந்த மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம், சாய்ந்தமருதில் மாத்திரம், கிழக்கு மாகாண சபையில் ஜெமீலுக்கு உச்ச அதிகாரம் கொடுக்கப்படும் என்கிற உத்தரவாதத்தை அவ்வூர் மக்களுக்கு வழங்கியுள்ளார்.
இங்கு ரவூப் ஹக்கீம் தனதுரையில் மேலும் கூறியதாவது;
“சாய்ந்தமருது பிரதேசமானது அதாவுல்லாவின் கோட்டை என்ற கனவு இன்று ஜெமீலால் தவிடுபொடியாக்கப் பட்டிருக்கிறது. சாய்ந்தமருது மக்கள் அயலூர் அரசியல்வாதிகள் சிலரால் வஞ்சிக்கப்பட்டதாலேயே எமது கட்சி மீது இம்மக்கள் மனச்சோர்வடைந்திருந்தனர். ஆனால் இப்போது ஜெமீலின் வரவுடன் அவர்கள் எமது பக்கம் மீண்டு விட்டனர். உண்மையின் பக்கம் சாய்ந்தமருது மக்களை அணிதிரட்டக் கூடிய சக்தி ஜெமீலிடமுள்ளது என்கிற விடயம் இங்கு அலையாய் திரண்டிருக்கும் ஜனசமுத்திரத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
சாய்ந்தமருது மண்ணுக்கு அமையப்போகும் மாகாண சபையில் எவ்வித தடைமின்றி உச்ச அதிகாரம் வழங்கப்படுகின்ற அதேவேளை சாய்ந்தமருது மக்களின் அபிலாஷையான நகர சபையை இந்தத் தலைமை என்ன விலை கொடுத்தாகினும் பெற்றுக்கொடுக்கும் என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றேன்.
நாட்டில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்த காலகட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய, யாருக்கும் அடிபணிந்து சேவகம் செய்யாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத்தை பேரினவாதிகள் தமக்கு ஏற்றால் போல் செயற்படுத்த அனுமதிக்க முடியாது. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும்.
எமது முஸ்லிம் ஜனாசாக்கள் எரிக்கப்பட்டபோதும் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய நெருக்குதல்கள் வந்தபோதும் மௌனமாக இருந்தவர்கள் நமது எதிர்கால சந்ததிகளுக்காக பேசுவார்களா என மக்கள் சிந்திக்க வேண்டும். தனி நபர்கள் மீதுள்ள கோபம் காரணமாக இயக்கத்தை புறந்தள்ளிவி விட முடியாது. தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகம் பற்றி சிந்திக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தின் கீழ் மக்கள் ஒன்றுபட வேண்டும்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரேயொரு மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் நீங்கள் விரும்பும் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலமே இது எமது மாவட்டம் என்று பறைசாற்ற முடியும்” என்றும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தவிசாளர் அப்துல் மஜீத், வேட்பாளர்களான முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஐ.மன்சூர், ஏ.எல்.நசீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், பொத்துவில் தவிசாளர் அப்துல் வாசித் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
—