கட்சி கட்டுப்பாட்டை மீறி நடக்கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறமாட்டோம் – ரவூப் ஹகீம்

0
113

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மாவட்டம், கல்குடா தொகுதியில் தேவையற்ற ரீதியில் கட்சிக்குள் ஊடுருவல் நடப்பதாக எனக்கு அறியக் கிடைக்கிறது என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஹபீப் றிபானை நேற்று (2) ஆதரித்து வாழைச்சேனையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்சிக்குள் இருக்கும் சிலர் கட்சி தலைமை எடுக்க வேண்டிய முடிவை தாங்களே எடுப்பதனால் இன்று நாட்டில் கட்சி பற்றிய தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இது சம்பந்தமான தெளிவான நிலைபாட்டை கட்சி தலைமைத்துவம் எடுத்திருக்கிறது. இதற்கு பிற்பாடு கட்சி கட்டுப்பாட்டை மீறி நடக்கின்ற எவர் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்க தவறமாட்டோம் என்பதை நான் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதேநேரம் கட்சியுடைய பதவி நிலையில் இருக்கின்றவர்கள் தனிப்பட்ட ஒருவருக்காக வேலை செய்வது மிக அநாகரிகமான விஷயம். இது சம்மந்தமாக சில இடங்களில் இவ் விவகாரங்களை நாங்கள் கவனித்து வந்திருக்கின்றோம்.

பொதுவாக கட்சி போட்டியிடும் சின்னத்துக்கு வேலை செய்வதும் அந்த சின்னத்தில் போட்டியிடும் எல்லோருக்கும் சமத்துவமாக தங்களுடைய செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும்தான் கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற ஒருவரின் கடமையாக இருக்கும்.

அதை மீறி ஒருசில சிரேஷ்ட உறுப்பினர்களும் கூட இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்ற முறைப்பாடு எங்களுக்கு கிடைத்திருக்கிறது அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை கட்சி எடுக்கும். அத்தோடு அவர்களுடைய பதவியையும் எடுப்பதற்கு தவறமாட்டாது.

ஏனென்றால், இந்த கட்சியுடைய கெளரவம் தேர்தல் காலத்தில் அதுவும் குறிப்பான பதவிகளில் இருக்கின்ற உறுப்பினர்கள் அவர்களுடைய நடுநிலை தவறி அவர்களை பக்கச்சார்பாக நடந்து கொள்வது மிகவும் அநாகரிகமான விஷயம் என்பத நான் இங்கு சொல்லியாக வேண்டும்.

மாவட்டத்தல் உள்ள வேட்பாளர்களுக்கு எந்தெந்த ஒத்துழைப்புக்களை கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுத்து இருக்கிறேன். மாவட்ட ரீதியாக அவர்களுடைய செயற்பாடுகளை அந்தந்த ஊர்களில் இருக்கின்ற வேட்பாளர்கள் அவர்களின் அங்கீகாரத்தோடும் அவர்களுக்கான அறிவிப்போடும்தான் நடக்க வேண்டும்.

வெளியூர்களில் இருந்து வந்து விலைக்கு ஆட்களை வாங்குகின்றார்கள். கட்சி ஆட்கள் விலை போயுள்ளனர். அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை ஏராளமானவர்கள் விலை போனாலும் இந்தக் கட்சி யாருக்கும் விலை போகாது என்றார்.