சாளம்பஞ்சேனை கிராமத்தினுள் புகுந்த யானைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிராம அதிகாரிக்குட்பட்ட சாளம்பஞ்சேனை கிராமத்தினுள் புகுந்த யானைகள் வீடு மற்றும் தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சாளம்பஞ்சேனை கிராமத்தினுள் வியாழக்கிழமை இரவு புகுந்த யானைகளினால் கோ.தமிழ்செல்வன் என்பவரது வீட்டினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் இருந்தவர்களின் வீட்டுத் தோட்டங்கள் என்பவற்றினை சேதப்படுத்தி சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக வீடு முற்றுமுழுதாக சேதமாக்கப்பட்டதுடன், உடமைகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றது. அத்தோடு வீட்டுத் தோட்டங்கள் பயிரிடப்பட்ட கச்சான், கத்தரி, வெண்டி, மிளகாய் என்பவற்றை அழித்து துவம்சம் செய்துள்ளது.

இரவு நித்திரையில் இருந்த சமயத்தில் வந்த யானைகள் வீட்டினை சேதப்படுத்தும் போது சத்தமிட்ட வேளை எங்களையும் தாக்க முற்பட்ட போது வீட்டினை விட்டு தப்பி ஓடி மீண்டும் வந்து பார்க்கும் போது வீடு சேதமடைந்து காணப்பட்டதாக கோ.தமிழ்செல்வன் தெரிவித்தார்.

எனவே எங்களது பகுதிகளுக்கு தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் இடம்பெற்று வரும் நிலையிலும், இதன் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி யானை வேலி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பல தடவை சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இடம்பெறவில்லை எனவும், இனியாவது இதில் கூடிய அக்கறை கொண்டு எங்களது உயிரை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.