எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஒற்றுமைப்பட்டு வடகிழக்கை தாயகமாக் கொண்டு இயங்கும் தமிழ் தேசியத்தை தாரகமந்திரமாக கொண்டு இயங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர் ஒற்றுமையை பேரினவாத சக்திகளுக்கும், சர்வதேசத்திற்கும், தமிழர்களை பிரித்தாள நினைக்கும் எம் இன துரோகிகளுக்கும் படம் போட்டுக் காட்ட வேண்டும் என கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமாகிய கனகரெட்ணம் கமலநேசன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஆதரித்து இன்று வாழைச்சேனை நாசிவந்தீவு மீனவர்களுடனான கலந்துரையாடலின் போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையல்-
தமிழ் தேசிய கூட்டமைப்பே தமிழர்களின் பலம் தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிளிர வேண்டும், என்பதற்காகவே அன்று தலைவர் உருவாக்கினார். எவ்வாறு தமிழ் தேசியத்தை கூறு போடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்த பேரினவாத அரசுக்கு துருப்புச் சீட்டாக கருணா அமைந்தாரோ அதைபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைப்பதற்கு பல துருப்புச் சீட்டுக்களை கட்சிக்குள்ளும் வெளியிலும் இந்த பேரினவாத அரசு களம் இறங்கி விட்டுள்ளது. இவ்வாறான சக்திகளை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலோடு வீட்டுக்கனுப்ப தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் நமது தொகுதி பிரதிநிதிகளை தெரிவு செய்ய முன்வர வேண்டும்.
சிறந்த சேவை செய்பவனே சிறப்பான மக்கள் சேவகன். இந்த மக்கள் சேவகர்களை தெரிவு செய்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் என்ற எண்ணக்கருவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவ்வாறான பிரதிநிதிகள். சிறப்பான சேவை செய்யவில்லையாயின் அவர்கள் தூக்கி எறியப்பட வேண்டியவர்களே தான். அதற்கான வாய்ப்பு இப்போது உங்களை நாடி வந்துள்ளது. சரியான சிறந்த ஆளுமையுள்ள மக்கள் பிரதிநிதிகளை நீங்கள் தெரிவு செய்யுங்கள், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் சிறப்பான மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருக்கலாம் அவர்களை நீங்கள் இனம் கண்டால் அவர்களை விடுத்து கட்சி சின்னத்துக்கு வாக்களித்து சரியானவர்களை தேர்ந்தெடுங்கள். ஒரு இருவருக்காக கட்சியை வெறுக்காதீர்கள் அவ்வாறு வெறுத்து மாற்றுக்கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் எமது தேசியம் இருப்பு தமிழர் என்ற அடையாளம் இல்லாமல் செய்யப்பட்டு விடும் அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சரியானவர்களை தேர்த்தெடுக்க கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் எம் இன காவலன் எம்மை நடுத்தெருவில் விட்டு செல்லவில்லை ஐக்கிய நாடுகள் சபையில் எமக்கான தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் தூரநோக்கு சிந்தனையோடே விட்டுச் சென்றுள்ளார்.
எம் இனத்தை அழித்தவர்களுக்கான விசாரணைகளை துரிதப்படுத்தவும் அவர்களுக்கான தண்டனையை பெற்றுக் கொடுக்கவும் தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளவும் ஐக்கிய நாடுகள் சபையில் அதற்கான ஆணித்தரமான குரல் கொடுக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே முடியும். அதை இல்லாமல் செய்வதற்காக பேரினவாதிகள் பல நபர்களை, குழுக்களை, கட்சிகளை களம் இறங்கியுள்ளனர் அபிவிருத்தி என்ற போர்வையில்
எமக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் தியாகங்களை கொச்சப்படுத்தியும் எமது விடுதலைப் போராட்ட வரலாறுகளை இல்லாமல் செய்யவும், பல இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்கி தங்களது சுகபோகங்களை அதிகரித்துக் கொள்வதற்காக வாக்கு கேட்டு தமிழர் ஒற்றுமையை சிதைக்க பலர் உங்கள் முன் வருவார்கள் தற்காலிக சுகபோகங்களுக்கு மயங்கி இவர்களுக்கு வாக்களிப்பீர்களானால் உங்கள் எதிர்கால சந்தியின் தமிழர்களின் எதிர்காலம் சிதைவடைந்து ஈழமணி திருநாட்டில் தமிழர் இருப்பு கேள்விக்குறியானதாக மாறிவிடும்.
தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஒற்றுமை தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எந்த கட்சிகளோ, குழுக்களோ இல்லை தமிழர்களுக்காக களம் இறங்கியுள்ளோம் எனக்கூறும் மாற்று கட்சிக்காரர்களும் குழுக்களும் உண்மையிலேயே தமிழ் மக்களின் நலனில், தேசியத்தில் பற்றுதல் கொண்டவர்களாயின் தமிழர்களின் தேசிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த தனி நபருக்கும் சொந்தமனதல்ல அக்கட்சியில் உள்ள தனி நபர்கள் தமிழ் மக்களின் உரிமைக்கும், அபிவிருத்திக்கும் பங்கம் விளை விக்கின்றார்கள் என்றால் அவர்களை கட்சியில் இருந்து பலவினப்படுத்த வேண்டுமே தவிர ஒட்டு மொத்த கட்சிக்கும் நாம் துரோகம் செய்து தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்து விடுதல் கூடாது. எமது ஒற்றுமை சிதைவடைந்து விடுமானால் எமது தேசியம், வரலாறு. இல்லாமல் அழித்தொழிக்கப்படும்.
எனவே பிரதேசத்தின், தொகுதியின் இருப்பினை தக்க வைத்துக் கொள்ள எமது தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை வெற்றிபெறச் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.