(படுவான் பாலகன்)
கால்நடையெல்லாம் கால் நடையாகத்தான் போகிறது.. காசுகொடுத்ததோ? களவெடுத்ததோ? தெரியாதென கந்தசாமியும் வேல்சாமியும் மண்முனைத்துறையின் வங்காளவிற்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
மண்முனைப் பக்கமாகவிருந்து மகிழடித்தீவு நோக்கி வருகைதந்த இருவரும், மழை பெய்ய வங்காளவிற்குள் நுழைந்து இருந்தபோதே இதனைப் பேசிக்கொண்டனர். மண்முனை துறைக்கென பாலம் அமைக்கப்படாத போது, படகு வரும் வரை அவ்வங்களாவிற்குள் இருந்துகொண்டு பல இடத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் பேசிக்கொள்வது வழமை. இவ்விடம் பல செய்திகளை கொண்டு சேர்க்கும் ஊடக நிலையமாகவே இருந்தது. பல தெரியாத விடயங்களும் தெரிவதுண்டு, புதுமுகங்கள் பழக்கமாவதும் வழமையாகவிருந்தது. மண்முனை ஆற்றிற்கு பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பது எல்லோரதும் விருப்பம். ஏன்னெனில் பலர் ஆற்றில் வீழ்ந்து இறந்துள்ளனர். நேரத்திற்கு உரிய இடத்திற்கு பயணிக்க முடியாது அல்லல் உற்றதும் உண்டு. படகு செலுத்துபவன்தான் பலருக்கு ராசாவும் கூட. காற்று பலமாக வீசினால் படகு நீரில் அடித்துச்சென்று வெறொரு கரையை அடைவதும், இரவுநேரத்தில் பயணிக்க முடியாதிருந்ததும் கடந்த அனுபவங்கள்.
எல்லோர் விருப்புக்கும் ஏற்ற வகையில் 2014ல் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. அதன் பின்னர், குறுகிய, உரிய நேரத்தில் தமது வேலைகளை முடிக்க கூடிய வகையிலும், எந்நேரத்திலும் செல்லக்கூடிய நிலையையும் அடைந்தது. இதனால், படுவான்கரைப்பகுதிக்கும், எழுவான்கரைப்பகுதிக்குமான தொடர்பு அதிகரித்திருக்கின்றது. மாணவர்கள், சாதாரண மக்கள் தொடக்கம், அரச உத்தியோகத்தர்கள் பலர் நன்மை அடைகின்றனர்.
பாலத்தால் அடைந்த நன்மைகளை அடுக்கிச் செல்லும் வேளை, பாலம் அமைக்கப்பட்டதால் வளச்சுரண்டல்களும் வேகமாக நடைபெறத்தான் செய்கிறது என கந்தசாமி வேல்சாமியுடன் கூறுகின்றான்.
பாலம் அமைக்கப்பட முன்பு இவ்வாறான கனரக வாகனங்கள் இதனால் செல்ல முடியாதென மண்ணேற்றி செல்லும் வாகனத்தினை பார்த்து கந்தசாமி சொல்லுகிறான். இப்போ நிமிடத்திற்கு ஒரு லோட் மண் போகுது. அதுஒரு புறமிருக்க, நம்மட மக்கள் அனேகர் மாடுகளை வளர்க்கின்றனர். அம்மாடுகளை ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு பல சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. ஆனால், சிறிது காலம் வாகனங்களில் மாடுகள் கொண்டு செல்லப்பட்டன. இதன்போது பல மாடுகள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு அவை பிடிக்கப்பட்டன. இப்போது, மாடுகள் எல்லாம் கால்நடையாக மண்முனைப் பாலத்தினை கடந்து நடந்து செல்கின்றன. சந்திக்கு சந்திக்கு காவல், பாலம் கழிந்து கண்ணா, வயலோராமாக கால்நடைகள் செல்கின்றன. இவற்றில் எத்தனை வாங்கியவை, எத்தனை திருடியவையென்றும் தெரியாது. இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நம்மட மாவட்டத்தில வேட்பாளராக நிற்கின்றவர்கள் முன்வருவார்களா? என வேல்சாமியுடன் கந்தாமி வினவியபடியே மழை நிற்க இருவரும் புறப்பட்டனர்.