முன்னாள் போராளிகளிடம் மாகாண சபை அதிகாரத்தை  ஒப்படைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆவண செய்ய வேண்டும்

முன்னாள் வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்

( வாஸ் கூஞ்ஞ)

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பாராளுமன்றம் செல்வோர் உரிகை;காக குரல் கொடுங்கள் அபிவிருத்திக்காக மாகாண சபைக்கு நிதியை ஒதுக்கீடு செய்து அபிவிருத்தியை மாகாண சபையிடம் விட்டுவிடுங்கள். அத்துடன் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அபிவிருத்தி பணியில் திறமையானவர்கள் அவர்களை அரசியலுக்குள் உள்வாங்கி அவர்களிடம் மாகாண சபை அதிகாரத்தை  ஒப்படைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை அமைச்சரும் சிரேஷ்ட சட்டத்தரனியுமான பா.டெனிஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் வட மாகாண சபை அமைச்சரும் சிரேஷ்ட சட்டத்தரனியுமான பா.டெனிஸ்வரன் சனிக்கிழமை (25.07.2020) செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கையில்

எமது இந்த அரசியல் போராட்டமானது நீண்ட தூர பயணமாக அமைந்துள்ளது. இதை எமது கடந்தகால வரலாரு எமக்கு எடுத்து காட்டியுள்ளது.

ஓரிரு நாட்களில் நாம் எமது உரிமையை வென்றெடுக்கலாம் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது. நம்பவும் முடியாது. இவற்றை இந்த தீபவாளி அல்லது பொங்களுக்கு முன் இவ் உரிமையை பெற்றுத் தருவோம் என்ற விடயமும் பொருத்தமானது என நான் கருதவில்லை.

ஆனால் இதை கூறுபவர்களின் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. எனவே நாம் முன்னெடுத்துச் செல்லும் இவ் அரசியல் போராட்டமானது நீண்டதூர பயணமாகும். இதை எமது கடந்தகால வரலாறு எமக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

கடந்த காலங்களில் 30 வருடங்கள் ஆயதப் போராட்டம் இவ்வாறு 30 வருட அரசியல் போராட்டம் இவற்றினூடாக அடையமுடியாத பல்வேறு விடயங்களை நாம் தூரநோக்கோடு சிந்தித்து  செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இவ்வாறு இருக்க இந்த 2020 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி இன்று எல்லோர் மனதிலும் தோன்றியிருக்கின்றது.
தன்னை பொறுத்தமட்டில் தனக்கு பின்னால் இருக்கும் மக்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பொதுமக்கள் எமது இனத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணம் செய்து தற்பொழுது புனர்வாழ்வு பெற்று வந்திருக்கும் அனைவருக்கும் நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

இம்முறை நாம் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்போம். இது எமது தலைவரால் உருவாக்கப்பட்டதொன்றாகும். ஆனால் தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல அதிருப்திகளும் இருக்கின்றன.

இதில் பேசி உடனடி தீர்வுகாணும் விடயங்கள் பல இருக்கின்றன. இந்த கூட்டமைப்பில் பலர் வைக்கின்ற குற்றச்சாட்டுக்களைவிட எனக்கு ஒரு விடயத்தில் அதிகமாகவே இருக்கின்றது.

எமது இனத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்ய துணிந்தவர்கள் இன்று புனர்வாழ்வு பெற்று வந்துள்ளனர். இவர்களை எமது இந்த அரசியல் ரீதியான போராட்டத்தில் நாம் அவர்களை இணைத்துக் கொள்ளவில்லை என்பது பாரிய குற்றச்சாட்டுகளாக இருக்கின்றது.

எனவே இவ் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பொறுப்புவாய்ந்தவர்கள் இவர்களை அரசியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
இதனால் தமிழ் மக்களை சிதறவிடாத சக்தி இந்த புனர்வாழ்வு பெற்ற போராளிகளிடம் இருக்கின்றது என்பது உண்மை. ஆகவே இப்பொழுது தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைப்போம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டியது பாராளுமன்றத்தில் எமது உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பதே. அபிவிருத்தியும் எமக்கு அத்தியாவசியமானது. இதையும் நாம் ஒதுக்க முடியாது.

-நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் உரிமை என்பது வேறு. அபிவிருத்தி என்பது வேறு. இன்று சிலரை நோக்கும்போது குழாய்க் கிணறு அமைத்து தருவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் அவர்கள் பின்னால் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாம் சற்று பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் எமது மக்கள் இவ்வளவு பெரிய உயிர்களை இழந்திருக்காமல் அபிவிருத்தியை பெற்றிருக்கலாம். ஆனால் எமது உரிமைக்காக பலர் விலை மதிக்க முடியாத உயிர் தியாகங்களை செய்துள்ளனர்.

ஆகவே இதற்கு அர்த்தம் தேடும் விதத்தில் நாம் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டியவர்கள். ஆகவே அபிவிருத்தி சார்ந்த போராட்டம் மற்றையது உரிமை சார்ந்த போராட்டம் என நாம் பிரித்து கையாள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
மாகாண சபை எமது தமிழ் தேசிய கூட்டமைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் இதில் தெரிவாகின்ற கூட்டமைப்பினர் எமது தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்னால் இருந்து செயல்பட வேண்டும்.

ஆகவே அபிவிருத்தி என்பதை தனிமையில் மாகாண சபையிடம் ஒப்படைத்தல் வேண்டும். கம்பெலிய போன்ற அபிவிருத்திக்காக  அரசியலிடம் கையேந்த வேண்டாம். பாராளுமன்றத்தில் வடக்கு கிழக்கு பகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு போகும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிமைக்காக நீங்கள் அங்கு குரல் கொடுங்கள்.

கூட்டமைப்பினரை சிலர் சேர்பூசி வருகின்றனர். இதையிட்டு நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம். அவர்களும் ஒரு நேரத்தில் எம் பக்கம் திரும்பி வருவார்கள். தற்பொழுது வன்னித் தேர்தல் தொகுதியில் 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 4000 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் நாம் கவலை அடையத் தேவையில்லை.

ஒரு சிலர் பிரிந்து நின்றாலும் தமிழ் மக்கள் இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒன்றினைந்து இருக்கின்றார்கள் என்பது தற்பொழுது கண்கூடாக இருக்கின்றது.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவம் எதிர்காலத்தில் தாங்கள் விடும் தவறுகளை சீர்தூக்கி பார்த்து அபிவிருத்திகளை மாகாண சபைகளிடமும் உரிமை விடயமான செயல்பாடுகளை பாராளுமன்றத்திலும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே அபிவிருத்தி நிதிகளை மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்ய பாராளுமன்றத்தில் உங்கள் செயல்பாடாக அமைய வேண்டும்.

எமது மக்கள் பாராளுமன்றம் அனுப்புவர்களை அபிவிருத்திக்காக அல்ல அல்லது அமைச்சர் பதவிகளை பெறுவதற்காக அல்ல. மாறாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே அனுப்புகின்றனர்.

ஆகவே மற்றவர்கள் சொல்லுகின்றார்கள் என்று பாராளுமன்றம் செல்வோர் மாயைக்குள் அகப்படாமல் உரிமைக்காக குரல் ஓங்கட்டும் அபிருத்திக்காக மாகாண சபைக்கு நிதியை ஒதுக்கவும் உங்கள் செயல்பாடுகள் அமையட்டும்.

கடந்த வட மாகாண சபை முதல்வர் சரியான முறையில் செயல்பட்டிருந்தால் இம்முறை அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தேவையிருந்திருக்காது. இம்முறையும் அவர் முதல்வாராக வர வாய்ப்புக்கள் இருந்திருக்கும்

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அவர்களின் போராட்டக் காலத்தில் 36, 37 திட்டங்களை செயல்படுத்திய திறமைசாலிகள் ஆகவே இவ் தேர்தல் முடிந்த கையோடு இவ் புனர்வாழ்வு பெற்ற போராளிகளை அரசியலுக்குள் உள்வாங்கி மாகாண சபைக்குள் அவர்கள் செல்ல வழிசமைக்கப்பட வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.