மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தை மீட்கப் போகின்றோம் என்பது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு சதி.

0
152

கோவிந்தன் கருணாகரம்

தமிழ் மக்களுக்காகப் போராடுவதற்கு, தமிழர்களுக்காகக் கதைப்பதற்கு, அவர்கள் நலன்கள் மீது அக்கறை கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எவருமே இல்லை. தமிழ்; தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்றைய தினம் (25) மட்டக்களப்பு தமிழீழ விடுதலை அயக்கக் காரியாலயத்தில் அதன் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி தங்கதுரை ஆகியேரின் படுகொலை நினைவின் 37ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்களான ஜெயச்சந்திரன், ரூபராஜ் உட்பட கட்சியின் மாவட்டப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடக்கிய ஒடுக்கப்பட்ட எமது மக்களின் விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்திற்குள் உள்வாங்கப்பட்ட எமது தலைவர்களான குட்டிமணி தங்கதுரை ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். 1983ம் ஆண்டு யூலைக் கலவரத்தின் போது இலங்கையின் பல பாகங்களிலும் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்டு, கோடிக்கணக்கான சொத்துக்களும் சூறையாடப்பட்டன. அதுமட்டுமல்ல இலங்கையிலேயே மேற்கு தெற்கில் இருந்த தமிழ் மக்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு குடிபெயரச் செய்யப்பட்டார்கள்.

அந்த வேளையில் வெலிக்கடை சிறையில் இருந்த எமது தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட அரசியற் கைதிகள் 53 பேர் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். குறிப்பாக குட்டிமணி அவர்கள் மரணதண்டனைக்கான நீதிமன்ற விவாதத்தின் போது “நான் இறந்தாலும் தமிழீழத்திற்கான போராட்டம் இறவாது, என்னைப்போல் ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் தமிழீழத்திற்காக வருவார்கள். நான் இறந்ததும் எனது கண்களை ஒரு கண்தெரியாத தமிழ்மகன் ஒருவனுக்கு தானமாகக் கொடுக்கவும். நான் காணத தமிழீழத்தை என் கண்கள் காணட்டும்” என்று கூறிய கருத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவரைப் படுகொலை செய்யும் போது அவரது கண்களைப் பிடுங்கி அதனைச் சப்பாத்துக் காள்களில் மிதித்தார்கள். அவர் சொன்னதைப் போன்று ஆயிரம் ஆயிரம் குட்டிமணிகள் உருவாகினார்கள். அதில் ஒருவன்தான் நானும். இந்தப் போhட்டத்தில இணைந்து இன்று வரைக்கும், ஆயுத ரீதியாகவும், அரசியல் ரீதியான ஜனநாயக வழியிலும் மக்களின் உரிமையைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நாட்டிலே தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களை ஆண்டு எமது மக்களைத் துவம்சம் செய்த இந்த நாட்டின் பேரினவாதக் கட்சிகளும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சூரையாடுவதற்காகக் களமிறங்கியிருக்கின்றன. எம்மைப் பிரித்தாள நினைப்பவர்களும், பெரும்பான்மைக் கட்சிகளின் அடிவருடிகளாக இணைந்து தேர்தல் களத்திலே நிற்கின்றார்கள்.

அன்று யூலைக்கலவரத்திற்குக் காணமானவர்களும், கடந்த 2009லே ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட எமது மக்களைக் காவு கொண்டவர்களும் இன்று களத்திலே நிற்கின்றார்கள். அவர்களுக்குச் சாதகமாக அவர்களுடன் இணைந்து செயற்படுகின்ற எம்மவர்களும் வாக்குக கேட்டு வருகின்றார்கள். கடந்த காலங்களிலே அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் எமது இனம் போராடியது. இலட்சக் கணக்கான மக்களையும் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளையும் பறிகொடுத்திருக்கின்றோம். அவ்வாறிருக்கையில் எம்மை அழித்த அந்த பேரினவாதிகளுடன் இன்று எம் மக்கள் மத்தியில் வந்து வாக்குப் பிச்சை கேட்கின்றீர்களே அது அந்தப் பேரினவாதிகள் எமது மக்களைக் கொன்றொழித்ததை அங்கீகரிப்பதற்காகவா? உங்கள் உங்கள் சுயலாபங்களுக்காகவா? அல்லது வெறுமனே அமைச்சுப் பதவிகளுக்காகவா?

அமைச்சுப் பதவிகளுக்காகவா நாங்கள் இத்தனை உயிர்களைப் பறிகொடுத்தோம். இத்தனை கோடிக்கணக்கான சொத்துக்களையும் பறிகொடுத்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி.

2001லே தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையில் இருந்த காலத்திலே அனைத்துப் போராளி இயக்கங்களையும் மிதவாதக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களின் அரசியற் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2009ன் பிற்பாடு எமது ஆயதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்களுக்காகத் தனியாகக் குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றது.

தமிழ் மக்கள் இன்று ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டிய காலம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான கட்சியாக இருந்தால் தான் வரப்போகும் பாளுமன்றத்திலே ஒரு பேரம்பேசும் சக்தியாக இருந்து எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கி மாகாணசபைகளுக்கு பூரண அதிகாப்பரவலாக்கலைச் செய்து எங்களை நாமே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியை உருவாக்க பாடுபடும். தமிழ் மக்களுக்காகப் போராடுவதற்கு, தமிழர்களுக்காகக் கதைப்பதற்கு, அவர்கள் நலன்கள் மீது அக்கறை கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எவருமே இல்லை.

கிழக்கு மாகாணத்தை மீட்கப் போகிறோம். எமது மண்ணைக் காப்பாற்றப் போகின்றோம் என்று சொல்லி பேரினவாதத்துடன் இணைந்து அவர்களது முகவர்களாகச் செயற்படுகின்றவர்கள் படகுச் சின்னத்திலும் மொட்டுச் சின்னத்திலும் வருகின்றார்கள். இவர்கள் ஒருவேளை வெற்றி பெற்றால் ராஜபக்சர்களின் காலடியிலே உட்கார இருக்கின்றார்கள். ராஜபக்ச சகோதரர்கள் இன்றுவரை வடகிழக்கு மாகணங்களில் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அவர்கள் வந்தால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை அறிந்தே அவர்கள் இங்கு வரவில்லை. ஆனால் அவர்களுக்காக இவர்கள் களத்திலே நிற்கின்றார்கள். ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டு அரசுடன் பேச முடியுமா? அல்லது ஒரு ஆசனத்தைப் பெற்ற கட்சியுடன் தான் எந்த அரசாங்கமும் பேச முன்வருமா? எவ்வாறு இவர்கள் தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களின் நலன்களுக்காகப் பேசப் போகின்றார்கள். இவை அனைத்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு அரசியற் தந்திரமேயாகும்.

கிழக்கு மாகாணம் என்பது வெறுமனே மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமல்ல. அம்பாறை திருகோணமலை மாவட்டங்களும் உள்ளன அங்கெல்லாம் போட்டியிடாதவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தை மீட்கப் போகின்றோம் என்பது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு சதி. எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டும்.
எமது வாக்குப் பலத்தினை அதிகரிக்க வேண்டும். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வரக்கூடிய இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்குரிய 04 பிரதிநிதித்துவங்கள் பெறப்பட வேண்டும். அந்த நான்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பெறப்பட வேண்டும். அவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்களில் குறைந்தது 20 ஆசனங்களையாவது நாம் பெற்றுக் கொள்வோமாக இருந்தால் நாம் பெரிய சக்தியாக இருப்போம். அந்த ரீதியில் நாங்கள் ஒரு பேரம்பேசும் சக்தியாகச் செயற்பட்டு எமக்கான அதிகாரப் பரவலாக்கலை நாங்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார்.