தமிழ்த் தேசியத்திற்கு நான் எதிரானவன் அல்ல .சே.ஜெயானந்தமூர்த்தி.

பாண்டிருப்பு 
 
தமிழ்த் தேசியத்திற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் போலித் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் போர்வையில் சுயலாப அரசியலை மேற்கொள்ளும் ஆசாமிகளை முற்றாக நிராகரிக்கிறேன் என, கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டு. மாவட்ட வேட்பாளருமான சே.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

மட்டு. தேற்றாத்தீவு, மாங்காடு ஆகிய கிராமங்களில் இடம்பெற்ற பொக்கற் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனிநபர், கட்சி நலன்களை முதன்மைப்படுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுகிறார்களே தவிர தனிநபா் மற்றும் கட்சி நலன்களுக்கு அப்பால், மக்கள் நலன் சார்ந்த அர்ப்பணிப்புடனான அரசியல் செயற்பாடுகளை கூட்டமைப்பினர் முன்னெடுக்கவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று ஓர் அரசியல் ‘முகவர்’ ஆக மாறி ‘வாக்குப்பெட்டி’ அரசியல்வாதிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இனப்பிரச்சினைக்கு அதி குறைந்தபட்சத் தீர்வாக வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு மொழிவாரி அதிகாரப் பகிர்வு அலகுதான் அமைய வேண்டும். அதற்கான அடித்தளத்தை இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம் 1987 இல் ஏற்படுத்தித் தந்தது. 13வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் தற்காலிகமாகவேனும் இணைக்கப்பெற்ற வடகிழக்கு மாகாண அரசும் நிறுவப்பட்டது. ஆனால் அச்சந்தர்ப்பத்தை விஞ்ஞானபூர்வமாகவும் அரசியல் உபாயங்களுடனும் பயன்படுத்தத் தமிழர் தரப்பு தவறிவிட்டது. அதன் விளைவு 1990 இல் ஜனாதிபதி ஆர்.பிரேமதாச காலத்தில் வடகிழக்கு மாகாண அரசு கலைக்கப்படவும் பின்னர் 2007 இல் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச காலத்தில் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் வடகிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்படவும் ஏதுவாயிற்று.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்ட பின்பு கிழக்கு மாகாணத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் விடயங்களில் மேலும் பல மறைத்தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2012 ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் கிழக்குத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பும் பாதுகாப்பும் பேண்தகைமையும் நாளாந்தம் கேள்விக்குள்ளாகி வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தி மாற்று வழியைத் தேடும் ஆத்மார்த்தமான அக்கறையோ அரசியல் வல்லமையோ கூட்டமைப்பிடம் இல்லை என்றார்.