பல்வேறு சுரண்டலுக்குட்பட்டவர்களாக மட்டக்களப்பு தமிழ்மக்கள் காணப்படுகின்றனர்.உதயகுமார்

பாண்டிருப்பு  

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களில் பல்வேறு வகைகளிலும் பாதிப்புற்றதுடன், மக்கள் பல்வேறு நிறைவேற்றப்படாத தேவைகளை கொண்டுள்ளனர் என, மட்டு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டு. மயிலாம்பாவெளி, கதிரவெளி, கித்துள் ஆகிய கிராமங்களில் நேற்று(22) இடம்பெற்ற  சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறை அபிவிருத்தி என்பதற்கு இணையாக மக்கள் மொழி, நிலம், இனம், பண்பாடு, கலை கலாசாரம் என பல்வேறு சுரண்டலுக்குட்பட்டவர்களாக மட்டக்களப்பு தமிழ்மக்கள் காணப்படுகின்றனர். இவர்களது தேவைகள், அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதும், தனித்துவம் அழிக்கப்படாமல் இவற்றை பெறக்கூடிய தமிழ் மக்களின் கூட்டணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது.

தமிழரசுக்கட்சி என்பது மிக நீண்ட கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கட்சியாகும். தமிழ் மக்களை வென்றெடுப்பதிலே பல அறபோராட்டங்களை கண்டதுடன், தீர்க்கதரிசனமுள்ள தலைவர்களால் வளர்க்கப்பட்ட கட்சியாகும். இக்கட்டான கால கட்டங்களிலும் மக்களுடன் இருந்து அவர்களின் நலன்சார்ந்து செயற்பட்ட ஒரே கட்சி என்ற வகையில் இன்றும் மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சியும் கூட்டமைப்பும் செல்வாக்கு மிக்க கட்சியாகவே உள்ளது.

எமது மக்களது தேவைகளை அபிலாசைகளை அவர்களது தனித்துவம் ,சுய கௌரவம், சுதந்திரம், உரிமை என்பன பாதிக்காத வகையில் நிறைவேற்றி வைப்பதற்கான வேலைத் திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டியதே காலத்தின் தேவையாகும். அரசியல் கட்சிகள் மக்களின் தேவைகள், உரிமைகள், நலன்கள் சார்ந்து இருத்தல் வேண்டுமேயின்றி கட்சி நலன்கள் சார்ந்ததாக இருத்தலாகாது.

ஜனநாயக ரீதியான ஒரு கட்சி என்ற அடிப்படையில் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுவது இயல்பே. எனினும் இவ்விமர்சனங்கள் சரியான வகையில் அனுகப்பட்டு அதற்கான தீர்வுகளையும் திருத்தங்களையும் செய்ய வேண்டிய தேவையுள்ளது. எனினும் தமிழ் மக்கள் குறிப்பாக எமது மாவட்ட மக்கள் தமது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளமையினை காணக்கூடியதாக உள்ளது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் மொழி, இனம், இருப்பு, நிலம் தொடர்பான சரியான தீர்மானங்களை சரியான நேரத்தில் கூட்டமைப்பினர் எடுப்பார்கள் என்றார்.