(படுவான் பாலகன்) இயற்கை வளம் நிறைந்த மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது. இவ்வாறுள்ள மாவட்டத்தில் உள்ள மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே இருந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களும் மிக முக்கிய காரணமாக உள்ளன. மாவட்டத்தில் உள்ள படுவான்கரைப்பிரதேசம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகவும், அபிவிருத்தியில் வஞ்சிக்கப்பட்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான பிரதேசத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் உருவாகாமை அயல்நாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் இயற்கையினாலும், யுத்தத்தினாலும் அங்கங்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக பலர் உள்ளனர். இவர்களுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்துக்கொடுக்க வேண்டிய மிக அவசியமான தேவை பலராலும் உணரப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் உள்ள படுவான்கரைப்பிரதேசத்தினை முழுமையாக கொண்ட மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி ஆகிய மூன்று பிரதேசங்களிலும் மொத்தமாக 1798 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குறிப்பாக மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 637மாற்றுத்திறனாளிகளும், வெல்லாவெளியில் 612மாற்றுத்திறனாளிகளும், மண்முனை மேற்கு பிரதேசத்தில் 549 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர்.
இவர்களுள் பலருக்கு அரசினால் வழங்கப்படுகின்ற ரூபா 5000கொடுப்பனவும் கிடைக்கப்பெறுகின்றது. சிலர் தகைமைப்பட்டியலில் உள்ளனர். இவ்வாறு மாற்றுத்திறனாளிகளாக உள்ள பலர் திருமணம் செய்தும் உள்ளனர். இதனால் அரசினால் கொடுக்கப்படும் 5000ரூபாய் பணம் ஒரு வார செலவினையே ஈடுசெய்யும். மீதமாகவுள்ள ஏனைய நாட்களை கழிப்பது மிக கடினமே. இவ்வாறான நிலையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்கள் மாதாந்த வருமானத்தினை பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தினை வகுக்க வேண்டும். இதன்மூலமாக அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்த முடியும்.
மாற்றுத்திறனாளிகளாக உள்ள பலர் சமூகத்தில் பல்வேறான சவால்களுக்கும் முகக்கொடுக்கின்றனர். குறிப்பாக பொருளாதாரமின்மை காரணமாக ஏனையவர்கள் இவர்களுக்கான சமூக அந்தஸ்தினை கொடுக்க மறுக்கின்றனர். இதனால் விரக்தி அடைகின்ற தன்மையையும் காணமுடிகின்றது. வாய்ப்பேச்சில் எல்லோரும் வீரர்தான். என்பது போல தேர்தல் அறிவித்தல் செய்யப்பட்டதும் எல்லோரும் வீர வசனங்களை பேச ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு வீர வசனங்கள் பேசுவதுதான் தமது பங்கு என்று நினைத்துவிடாது, மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கேற்ற திட்டங்களை தீட்ட வேண்டும். என்பதே எல்லோரதும் அவா.