வஞ்சகரின் அம்புகள் வந்த வண்ணமுள்ளன, என்னை வஞ்சிக்கப் பெரும் சதிகள்! என்கிறார் ரிஷாட்!

0
154

பாடம்புகட்டுங்களென உணர்ச்சிபொங்கவும் கோரிக்கை
(ஏ.எல்.எம்.சலீம்)
“வஞ்சகரின் அம்புகள் என்னை நோக்கி வந்த வண்ணமுள்ளன. என்னை வஞ்சிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அடக்கி, ஒடுக்கி ஆள வஞ்சக அரசு மனப் பால் குடிக்கின்றது. எனவே, பொதுத்தேர்தல் மூலம் எம் மக்கள் அரசுக்கும், பேரினவாதத்திற்கும் தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும்”
இவ்வாறு, நிந்தவூரில் நடைபெற்ற (ஞாயிறு மாலை) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி பொங்க உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.
நிந்தவூர் மாந்தோட்டம் பிரதேசத்தில், இரவு வேளையாகவிருந்தும் அலை, அலையாக பெருமளவு மக்கள் திரண்ட நிலையில் இப்பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திகாமடுல்ல தேர்தல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிரை ஆதரித்து இப்பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் ரிஷாட்டிற்கு இரவாக விருந்தும் வழி நெடுகிலும் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் திரண்டு பெரும் ஆரவாரத்துடன் முன்னெப்போதுமில்லாத வகையில் உணர்வு பொங்க வரவேற்பளித்தனர்.
மாந்தோட்டம் பிரதேச கட்சி அமைப்பாளர் எஸ்.ஜெசூலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“இங்கு திரண்டுள்ள மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும் போதும், அவர்களது உணர்ச்சி பூர்வமான வெளிப்பாடுகளைக்; காணும் போதும் நான் பெரும் ஆறுதல் அடைகின்றேன்.
இன்றைய அரசினாலும், பேரினவாத வஞ்சக செயற்பாடுகளினாலும் ஏதுமறியா அப்பாவியாக நான் வஞ்சிக்கப்பட்ட வண்ணமுள்ளேன்.
வஞ்சகரின் அம்புகள் இன்னும் என்னை நோக்கி எய்யப்பட்ட வண்ணமேயுள்ளன. சஹ்ரான் எனும் படுபாவியின் செய்கையால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே வஞ்சிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இந்த சமூகத்தின் குரலாக, எதற்கும் மண்டியிடாத, உண்மை, நேர்மையுடன் சேவையாற்றிவந்தமைக்காக என்மீது வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட அபாண்டப்பழிகள் சுமத்தப்படுகின்னறன.
எனக்கு எதிரானதும், முஸ்லிம் சமூகத்திற்கும் எதிரானதுமான பெரும் சதி அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
பயங்கரவாதத்துடன் என்னையும், எனது குடும்பத்தையும் வேண்டுமென்றே அநியாயமாக முடிச்சுப்போட்டு சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
ஏதுமறியா எனது சகோதரரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மூன்று மாதகாலமாக எவ்வித காரணமுமின்றி தடுப்புக் காவலில் வைத்திருப்போர் இப்போது என்னையும் சிறையில் தள்ள முயற்சிக்கின்றனர்.
தேர்தல் பரப்புரைகளுக்கான இன்றைய முக்கியமான காலகட்டத்தில்கூட வஞ்சகத்தனம் மேலோங்கி என்னை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இதுதான் இன்று இந்த நாட்டிலுள்ள ஜனநாயகம், ஆட்சி அதிகாரம்.
இந்த அரசு பதவிக்கு வந்ததிலிருந்து முஸ்லிம் சமூகத்திற்கு நடந்தவைகளும், நடந்து கொண்டிருப்பவைகளும் யாவரும் அறிந்ததுதான்.
குறிப்பாக ஜனாஸா எரிப்பு தொடர்பில், அரசும், அரச இயந்திரமும் நடந்து கொண்டமுறை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத வஞ்சகர் செயலாகும்.
இதன் மூலம் அவர்களும், பேரின வாதமும் இன்பம் காண்கின்றது. இச் செயற்பாடுகள் மூலம் பெரும்பாண்மை சமூகத்தைப் திருப்திப்படுத்தி சிங்கள ஆதரவுதளத்தைப் பெறுவதுடன், பேரினவாதிகளுடனான நெருக்கத்தையும் அடையலாமெனவும் நம்புகின்றனர்.
சிறுபாண்மை முஸ்லிம்களின் இருப்பையும், பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் வகையிலான இத்தகையான செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே, முஸ்லிம் மக்கள் தமது ஒற்றுமை மூலம் இத்தகைய செயற்பாடுகளுக்கும், முனைப்புகளுக்கும் தக்க பதலடி வழங்க வேண்டும்.
இந்த வகையில் நமது வாக்கு பலம் மூலம் பாடம்புகட்டுவதுடன், நமது ஒற்றுமையையும், சக்தியையும் எடுத்துக் காட்டவும் வேண்டும்.
இன்று உணர்ச்சிப் பிளம்புகளாக, வஞ்சகத்தை முறியடிக்கவென அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் முஸ்லிம்கள் கைகோர்த்து அணிதிரண்டுள்ளமை எம்மைப் பூரிக்க வைக்கின்றது.
அந்த வகையில் எமது வேட்பாளர் அஷ்ரப் தாஹிர் சிறந்த மக்கள் சேவையாளனாக செயலில் காட்டிய ஒருவராவார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக விருந்து அவர் ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளுக்கும் பல சான்றுகள் இங்குள்ளன.
சமூகப்பற்றுமிக்க, துடிப்புள்ள தலைவர்களே எதிர்கால சமூகத்தை வழிநடத்துவதற்குப் பொருத்தமானவர்கள்” என்றார்.
முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, வேட்பாளர்களான எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர், கே.எம்.ஏ.றஸாக் (ஜவாத்) உட்பட பலர் உரையாற்றினர்.