கொரோனா காரணமாக தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய உற்சவ காலத்தில் பக்தர்கள் ஆலயம் வரவேண்டாம் வீட்டில் இருந்து தரிசிக்குமாறு என பரிபாலன சபைத் தலைவர் வேண்டுகோள்

மட்டு மாறன்  —
மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் 14 07 2020 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. எனவே நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆலயத்தில் மக்கள் ஒன்று கூடமுடியாத நிலையினால் பக்தஅடியார்கள் ஆலயத்துக்குவருவதை தவிர்த்து வீட்டில் இருந்து தரிசிக்குமாறு ஆலய பரிபாலனசபை தலைவர் அருணன் தெரிவித்தார்

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஓப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வேண்டுகொள் விடுத்துள்ளார்.
ஆலய உற்சவம் கடந்த 14 ம் திகதி கொடியேற்றம் ஆரம்பித்து எதிர்வரும் 04.08.2020 தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறவிருக்கிறது. இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோன தொற்று நோய் காரணமாக ஆலயத்தில் பக்த அடியார்கள்  ஒன்று கூடமுடியாத நிலை காரணமாக சுகாதார பிரிவினரது அறிவுறுத்தல்களுக்கமைய 50 பேர் மாத்திரம் முருகப்பெருமானுடைய பூஜை செய்வதற்கு அனுமதி கிடைத்திருக்கின்றது
எனவே இந்த அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு அடியார்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, மலசல கூட வசதி , அன்னதான வசதி எதுவும் செய்யவில்லை. ஆகவே பக்த அடியார்கள் அதனை கருத்தில் கொண்டு இந்த வருடம் முருகப்பெருமான தரிசிக்க வருகை தராமலிருப்பது நல்லது என்பதுடன் ஸ்ரீ முருகப் பெருமானுடைய அடியார்கள் தங்களது வீட்டிலேயே இருந்து முருகனைத் தரிசிக்குமாறு பரிபாலன சபையின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
தா என்று இரப்போருக்கு இந்தா என்று அருள்பவர் தாந்தாமலை ஸ்ரீ முருகன் அத்தகைய பலரை வளர வைத்த அத்திருத்தலத்தில் அதற்கு மாறான ஒரு பழி ஏற்பட்டது என்ற பழி ஏற்படாதிருப்பதற்காக அடியார்கள் வருகை தருவதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வினயமாக வேண்டுகின்றோம். அடியார்களின் நலன்களினைக் கருத்தில் கொண்டும் சட்ட நியமங்களுக்கு மதிப்பளித்தும் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கின்றோம்.
எமது சமய, பண்பாடு, வழக்காற்று விடயங்களில், ஏற்பட்டிருக்கின்ற இந்த மாறுபட்ட நடைமுறைகளுக்காக வருந்துகிறோம். இருப்பினும் சட்டத்தினைப் பின்பற்றுமாறு அனைத்து அடியார்களையும் வேண்டுகின்றோம்.
நாட்டில் இடம்பெற்றிருக்கின்ற கொரோனா தொற்றினை குறைக்கும், தவிர்க்கும்; முகமாக மக்கள் கூடுவது குமுழுவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சமயத்தில் கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்பு மிக்க சின்னக்கதிர்காமம் என்று அழைக்கப்படுகின்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கடந்த காலங்களில் லட்சக்கணக்கான மக்கள்; ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானுடைய இஸ்ட சித்திகளைப் பெற்று செல்வது வழமை. ஆனால் இந்த வருடம் வினயமாகக்கேட்டுக் கொள்வது இந்த வருடம் வீடுகளிலேயே தனித்திருந்து எம்பெருமானுடைய இஸ்ட சித்திகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் எங்களையும் பாதுகாத்து ஏனையோரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரிடமும் இருக்கின்றன.
இங்கு வருகை தருகின்ற மக்களிலிருந்து கொரோனா தொற்றியது என்ற பழி தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பரிபால சபையினர், அதனை அண்டிய மக்கள் ஆளாகக்கூடாது. என அவர் தெரிவித்தார்