கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்தினால் எமது ஜனநாயக பலம் நிரூபிக்கப்படும் – இரா.சாணக்கியன்

கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்தினால் எமது ஜனநாயக பலம் நிரூபிக்கப்படும்
என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்
இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய
போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொதுத்தேர்தலுக்கு
இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன.

எமது எதிர்கால இருப்பினை தீர்மானிக்கப்போகின்ற சக்திகளாக உங்களது பொன்னானவாக்குகள் காணப்படுகின்றன. எனவே அனைவரும் வாக்குரிமையினை தவறானதுபயன்படுத்த வேண்டும் என்பதே எனது தாழ்மையான கோரிக்கை.

தமிழ் தேசிய நீக்க அரசியலில் ஈடுபட்டுள்ள சிலர் இம்முறை பொதுத்தேர்தலில்
களமிறங்கியுள்ளனர். களமிறங்கியுள்ளனர் என்பதை விட களமிறக்கப்பட்டுள்ளனர்
என்பதே நிதர்சனமான உண்மை.

தற்போதைய சூழலில் வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல நாட்டின்  அனைத்து
பாகங்களிலும் உள்ள சிறுபான்மை மக்களின் எதிர்காலம்
கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த தேர்தலில் நாம் ஒருமுகமாக சென்று வாக்களிக்க வேண்டும், அனைவரையும்
வாக்களிக்க செய்ய வேண்டும்.

இதை செய்கின்ற போதுதான் தமிழ் தேசம் இந்த நாட்டில் இருக்கிறது என
ஆட்சியாளர்களுக்கும் உலகத்துக்கும்  திரும்பவும் ஒரு பலமான செய்தி
கிடைக்கும்.

இப்படி ஒரு பலமான செய்தியினை நாம் சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டுமாக
இருந்தால், மக்கள் கூட்டமைப்பிற்கு மீண்டும் ஒருமுறை மக்கள் ஆணையினை வழங்கவேண்டும்.

அவ்வாறு வழங்கினால் மாத்திரமே கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பேரம் பேசும்
சக்தியாக இருக்கும்.

இன்று மாற்றுத்தலைமை என்ற பெயரில் சிலர் களமிறங்கியுள்ளனர். ஒரிரு ஆசனங்களைகைப்பற்றிக்கொள்வதே இவர்களின் இலக்காக காணப்படுகின்றது.

இவ்வாறானாவர்கள் எப்படி மாற்றுதலைமை என தங்களைக் கூறிக்கொள்ள முடியும்.
இவர்களினால் எமக்கான உரிமையினை ஒருபோதும் பெற்றுத்தர முடியாது என்பதே
நிதர்சனமான உண்மை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.