அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக்கேட்கிறது.

பாண்டிருப்பு 
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தோற்கடிப்பதற்க்கு எந்தக்கொம்பனாலும் முடியாது. உரிமை தேசியம், விடுதலை என்பதில் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் உறுதியான கொள்கை கொண்டவர்கள். அரசாங்கம் சிங்கள மக்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கேட்பது இராணுவ ஆட்சியை அடக்கு முறையைக் கொண்டுவருவதற்காகும். இந்நிலையில் தமிழ் மக்களின் காப்பரணாக திகழும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்த தமிழ் மக்கள் திடசங்கற்பம் பூணவேண்டும்
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்தார். செட்டிபாளையம் கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரன் அங்கு மேலும் தெரிவிக்கையில்..
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக பல கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவர்களின் நோக்கம் ஆசனம் பெற்று மக்களுக்கு சேவை செய்வதல்ல. கூட்டமைப்பிற்க்கு கிடைக்கவுள்ள வாக்குகளை குறைத்து மாவட்டத்தின் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதாகும். கூட்டமைப்பை குறை சொல்லுபவர்கள் இம் மாவட்டத்தில் மக்களுக்காக என்ன உருப்படியான சேவையை செய்துள்ளார்கள் என்று கேளுங்கள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் எவராலும் பிரிக்கமுடியாது. இம்முறை நான்கு ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்க்கு மாவட்ட மக்கள் தங்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கவேண்டும். அரசாங்கத்தின் எடுபிடிகளாகவும், பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலிலும் இயங்கும் புல்லுருவிகளை மக்கள் இனங்கண்டு அவர்களை ஓரங்கட்டவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் என்ற பேரில் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இச் செயற்பாட்டை தடுத்து நிறுத்தும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே செயற்பட்டுவருகின்றது. அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் அல்லது அரசோடு ஒட்டி உறவாடும் எந்தக்கட்சியாலும், எவராலும் எதிர்த்து குரல் கொடுக்க முடியாது. மாற்றுக்கட்சிகளின் நோக்கம் தேர்தலில் வென்றால் அமைச்சுப்பதவி எடுத்து உல்லாசமாக வாழ்வதாகும்.
தமிழ் மக்கள் தேர்தலில் நிதானமாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்க்கு  சிங்கள மக்களின் பெரும்பான்மை பலத்தை பிரதமர் மஹிந்தராஜபக்ஸ கேட்கிறார். பிரதமரது நோக்கம்  யாப்பை மாற்றி தமிழ் மக்களை உரிமையற்ற இரண்டாம்தர பிரஜைகளாக வைத்திருப்பதற்காகும். இவ் அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் முறியடிக்கும், தட்டிக்கேட்கும், சர்வதேச சமூகத்திற்க்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே உள்ளது. ஆகவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பிற்கு எதிரான சதி முயற்சிகளை தோற்கடித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தேர்தலில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றார்.