தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலும், ஊடக சந்திப்பும் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையிலும், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பி.கோணேஸ்வரன் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மா.உதயகுமார், மு.ஞானப்பிரகாசம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர், ஊடகப் பேச்சாளர் க.துளசி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் உட்பட ஜனநாயகப் போராளிகள் திருகோணமலைக் கிளைத் தலைவர், கட்சியின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஜனநாயகப் போராளிகளின் ஆதரவு தொடர்பிலும், தேர்தல் தொடர்பில் போராளிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் இணைந்து ஊடகசந்திப்பினை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.