மத்தியரசின் அதிகாரங்கள் மாகாண மட்டங்களில் பரவலாக்கம் செய்யப்படவேண்டும்.

0
115

 

(பாண்டிருப்பு நிருபர்) நல்ல சிந்தனைகள் ஆட்சியாளர்களது மனங்களில் உருவாக வேண்டும். யார் ஆட்சி செய்வதாக இருந்தாலும் பேரின அடிப்படைவாதமே
இந்நாட்டை ஆட்சி செய்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டு. மாவட்ட வேட்பாளருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கிரான்குளம் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

எங்களுடைய பிரதேசத்துக்குரிய அதிகாரங்களை எங்களிடம் தந்துவிட்டால் மத்திய அரசை சுற்றிவர வேண்டிய தேவையில்லை. மக்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்து தொழிற்சாலைகளையும் தொழில்களையும் பெறக்கூடிய ஒரு சூழ்நிலையினை உருவாக்குவதற்கு ஒற்றையாட்சிப் பொறிமுறை தடையாக இருக்கின்றது.

நீங்களும் நாங்களும் வாழ வேண்டுமாக இருந்தால் மத்தியரசின் அதிகாரங்கள் மாகாண மட்டங்களில் பரவலாக்கம் செய்யப்பெற்று அதிகாரப் பகிர்வு மூலமாக எங்களது பிரதேசங்களை நாங்களே சுயமாக ஆட்சி செய்வதற்கும் உங்களது பிரதேசங்களை நீங்கள் ஆட்சி செய்வதற்கும் மத்திய அரசோடு ஒரு தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய பொறிமுறையையும் ஏற்படுத்தி, சமஸ்டி அதிகாரப் பகிர்வு இடம்பெற்றால் ஒழிய இந்நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. அடிப்படைவாதம் நாட்டுக்குள் கொட்டமடித்துக் கொண்டிருந்தாலும் சர்வதேச ரீதியில் தோல்வியாளர்களாகவே நோக்கப்படுகின்றார்கள்.

நாங்கள் பள்ளங்களை நோக்கி பயணித்துக்கொண்டிருக்க
மற்றைய நாடுகள் வளர்ந்து கொண்டு செல்கின்றது. சிங்கள பெளத்த மேலாதிக்கம் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சிசெய்ய வேண்டும் என்று கனவு காணுகிறார்கள், இந்தக் கனவு பலிக்கப் போவதுமில்லை. இந்த நிலைமையிருந்தால் நாடு அபிவிருத்தியடையப் போவதும் இல்லை. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே இந்நாடு செல்வச் செழிப்பான வளம்பெருந்திய நாடாக மாறும்.

தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாததனால் எத்தனையோ புத்திஜீவிகள், நாட்டின் மனித வளங்கள், சொத்துக்கள், உடமைகள் உட்பட அனைத்தும் நாசமாக்கப்பட்டிருக்கின்றது.எனவே பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் எல்லாம் நன்றாக முடியும். நாடும் மக்களும் அபிவிருத்தியடைவார்கள், தேசிய ஒற்றுமையும் உருவாகும். அரசியல்வாதிகள் குறுகிய கட்சி அரசியல் இலாபத்திற்காக இனவாத ரீதியில் செயற்படாமல் சகல மக்களுக்கும் பொதுவான கொள்கைகளோடு செயற்பட வேண்டும்.