உண்ணாவிரதமிருந்த முருக பக்தர் ஒருவர் உள்ளிட்ட 29 பேர் குமுக்கனூடாக கதிர்காமத்தை சென்றடைந்தனர்.

 

(வி.சுகிர்தகுமார்)கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதமிருந்த முருக பக்தர் ஒருவர் உள்ளிட்ட 29 பேர் கொண்ட குழுவினர் நேற்று(18) குமுக்கனூடாக கதிர்காமத்தை சென்றடைந்தனர்.

குமுக்கன் வரையில் பாதயாத்திரையாக சென்ற குழுவினரை மிருகங்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக வனவள அதிகாரிகள் தொடர்ந்தும் பாதயாத்திரையாக செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அங்கிருந்து வனவள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கமைய வாகனத்தின் மூலம் கதிர்காமத்தை சென்றடைந்ததாக பாதயாத்திரையை மேற்கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

யாழ் சந்நதியில் வைக்கப்பட்டுள்ள வேலுடன் புறப்பட்ட குறித்த ஒரேயொரு பாதயாத்திரை குழுவின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சித்திவிநாயகம் ஜெய்சங்கர் எனும் பக்த அடியவர் பாணமை பிள்ளையார் ஆலயத்தில் கதிர்காம பாதயாத்திரைக்கான அனுமதி கோரி கடந்த 09ஆம் திகதி உண்ணாவிரத்தை ஆரம்பித்தார்.

பாணமை பிள்ளையார் ஆலயத்தில் உண்ணாவிரதமிருந்த அவரது குழுவினர் உகந்தையை சென்றடைந்த நிலையில் ஜெய்சங்கர் உகந்தை முருகன் ஆலயத்தில் போராட்டத்தை தொடர்ந்தார்.

இந்நிலையில் பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் குமுக்கன் வரையில் பாதயாத்திரையாக சென்ற குழுவினர் வாகனத்தின் மூலம் கதிர்காமத்தை சென்றடைந்து தமது நேர்த்தியை நிறைவு செய்ததாக பாதயாத்திரையை மேற்கொண்ட ஒருவர் கருத்து தெரிவித்தார்.