மட்டக்களப்பு தேர்தல் களம் – வெற்றிவாய்ப்பில் இருக்கும் நான்கு கட்சிகள்.

( இரா.துரைரத்தினம் )

மட்டக்களப்பு தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவில் களைகட்டியிருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் மட்டுமல்ல வேட்பாளர்களுக்கும் சவால் நிறைந்த தேர்தல் களமாகவே இது காணப்படுகிறது.

மட்டக்களப்பு தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து பிரதான தமிழ் கட்சிகளின் வாக்கை குறைப்பதற்கென்றே பல கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் களமிறக்கப்பட்டிருக்கின்றன.

16 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக்குழுக்களுமாக 38அணிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் சுயேச்சைக்குழுகள் ஊடாக 304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தை போன்று வாக்காளர்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் களுகு சின்னத்தில் ஒருவர் களமிறக்கப்பட்டதை போன்று இம்முறை வடக்கு கிழக்கில் வீட்டு சின்னத்தை போன்று தோற்றம் கொண்ட கூடாரம் சின்னத்தில் சுயேச்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் முக்கிய நோக்கம் வீட்டு சின்னத்திற்கு விழும் வாக்கை குறைப்பதாகும். இத்தகைய சூழ்ச்சிகள், வாக்கு பிரிப்புக்கள் மத்தியிலேயே இம்முறை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 38 கட்சிகள் சுயேச்சைக்குழுக்களில் 30க்கு மேற்பட்ட அணிகள் 5வீதத்திற்கு குறைவான வாக்குகளைத்தான் பெறப்போகிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6 கட்சிகள் மட்டுமே 5 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற கூடியவர்கள்.

  1. தமிழரசுக்கட்சி
  2. சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ்
  3. ரி.எம்.வி.பி
  4. ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பு. ( ஹிஸ்புல்லா தலைமையிலான அணி )
  5. ஐக்கிய மக்கள் சக்தி ( அமீர்அலி தலைமையிலான அணி )
  6. பொதுஜன பெரமுன ( வியாழேந்திரன் தலைமையிலான அணி )

இதில் ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன போன்ற கட்சிகள் 5வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றாலும் ஒரு ஆசனத்தை பெறக் கூடிய வாக்கு அவர்களுக்கு கிடைக்காது.

ஏனைய தமிழ் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின்  பெயர்மாற்றம் செய்யப்பட்ட விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி., ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி உட்பட ஏனைய 32 கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுகளும் அளிக்கப்படும் வாக்கில் 5வீத வாக்கைக்கூட பெற முடியாதவர்கள். இவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலையான வாக்கு வங்கி கிடையாது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை தமிழரசுக்கட்சி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ரி.எம்.வி.பி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே வாக்கு வங்கி உண்டு.

மாவட்ட விகிதாசார தேர்தல் முறையில் ஒரு கட்சிக்கு அம்மாவட்டத்தில் நிலையான வாக்கு வங்கி இருந்தால் வேட்பாளர்களின் ஆதரவு தளத்தையும் வைத்து வெற்றி பெற முடியும். வாக்கு வங்கி இல்லாத எந்த கட்சியும் தனியே வேட்பாளர்களின் ஆதரவு தளத்தை வைத்து வெற்றி பெற முடியாது.

எனினும் இக்கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து எடுப்பதால் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்றை இழக்கும் அபாயம் காணப்படுகிறது.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி சுமார் 10ஆயிரத்திற்கு உட்பட தமிழ் வாக்குகளை பெற்று அமீர்அலியை நாடாளுமன்ற உறுப்பினராக்கினார். கணேசமூர்த்திக்கு பட்டிருப்பு தொகுதியிலிருந்தே இந்த வாக்குகள் கிடைத்தன. இதனால் நூறு வீதம் தமிழர்கள் வாழும் பட்டிருப்பு தொகுதியிலிருந்து ஒரு பிரதிநிதி தெரிவு செய்யப்பட முடியாமல் போனது மட்டுமன்றி நான்கு தமிழ் பிரதிநிதிகளை பெற வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தமிழ் பிரதிநிதிகளை மட்டுமே பெற முடிந்தது.

இம்முறை கணேசமூர்த்தி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடுகிறார். தந்தையும் மகனும் போட்டியிடுகின்ற இக்கட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 5ஆயிரம் வாக்குகளை பெறுவதே பெரும்பாடாக இருக்கும். விக்னேஸ்வரன் தலைமையிலான இக்கட்சிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்களை தேடிப்பிடிப்பதே பெரும் கஷ்டமாக இருந்தது. கடந்த காலங்களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலும் ஐக்கிய தேசியக்கட்சியிலும் போட்டியிட்ட கணேசமூர்த்தியையும் அவரது மகனையும் பிரதான வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறது விக்னேஸ்வரனின் கட்சி.

ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் கிழக்கு தமிழர் ஒன்றியமும் இணைந்து போட்டியிடுகிறது. கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சந்திராதேவி மகேந்திரராசா, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாம். தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆனந்தசங்கரியின் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது செல்வாக்கிழந்த கட்சியாக காணப்படுகிறது. அக்கட்சிக்கு மட்டக்களப்பில் கிளைகளோ அல்லது அங்கத்தவர்களோ கிடையாது. வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கால் தான் வாக்குகளை சேகரிக்க முடியும். கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சந்திராதேவி கூட பல்கலைக்கழக மட்டத்தில் அறியப்பட்டவரே ஒழிய மட்டக்களப்பு சமூகத்தில் அறியப்பட்ட ஒருவர் அல்ல. இக்கட்சி கூட மட்டக்களப்பு மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கு குறைவான வாக்குகளையே பெற உள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத கட்சிதான். கடந்த பொதுத்தேர்தலில் சுமார் ஆயிரம் வாக்குகளைத்தான் பெற்றார்கள். இம்முறை அந்த ஆயிரம் வாக்குகளைத்தானும் பெறுவார்களா என்பது சந்தேகம் தான்.

இது தவிர ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி, சோசலிசக்கட்சி என பல தென்னிலங்கை கட்சிகளிலும் தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

5வீதத்திற்கு குறைவாக பெறப்போகும் இந்த அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்களில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் சுமார் 30ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறுவார்கள். இவ்வாக்குகள் பிரயோசனமற்ற வாக்குகளாக அமைவதுடன் தமிழ் பிரதிநிதித்துவம் ஒன்றை இழப்பதற்கு வழிவகுக்கும் என்பதே உண்மையாகும். தமிழ் பிரதிநிதித்துவத்தை குறைப்பதே மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தொகையான உதிரிக்கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் களம் இறக்கப்பட்டதற்காக பிரதான காரணமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் 38 அணிகளில் 4 அணிகள் மட்டுமே வேட்பாளர்களை பெறக் கூடிய நிலையில் உள்ளன.

தமிழரசுக்கட்சி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ரி.எம்.வி.பி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு இந்த நான்கு கட்சிகளில் மூன்று கட்சிகளே பெரும்பாலும் ஆசனங்களை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நான்கு கட்சிகளில் ஒரு கட்சி ஆசனத்தை பெற முடியாத நிலை ஏற்படலாம். ஆனால் முதலாவதாக வரும் கட்சியின் வாக்கு எண்ணிக்கை குறைவடைந்தால் அக்கட்சி இரு ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெறுவார்கள்.

யாருக்கு இந்த வாய்ப்பு உண்டு. அக்கட்சிகளுக்கு இருக்கும் சாதக பாதக நிலைகளை பார்ப்போம்.

தமிழரசுக்கட்சி ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு )

சாதகமான நிலைமைகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால வரலாற்றை எடுத்து பார்த்தால் ஜனநாயக ரீதியாக செயற்படும் தமிழ் கட்சிக்கு வாக்களிப்பது என்ற மனப்போக்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.

கடந்த கால சிங்கள அரசாங்களும் சிறிலங்கா படைகளும், தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளால் கோபம் அடைந்த தமிழ் மக்கள் பலர் உள்ளனர். இவர்கள் சிங்கள கட்சிகளுக்கோ அல்லது சிங்கள கட்சிகளுக்கு சார்பான தமிழ் கட்சிகளுக்கோ வாக்களிக்க மாட்டார்கள். தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு வாக்கு பலத்தைத்தான் பாவிப்பார்கள்.

உதாரணமாக போரின் மூலம் தமது இனத்தை அழித்த கோத்தபாய ராசபக்ச மீது தமது எதிர்ப்பை காட்டுவதற்கு ஜனாதிபதி தேர்தலை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பயன்படுத்தினர். ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையான்குழு என அழைக்கப்படும் ரி.எம்.வி.பி, பொதுஜன பெரமுன, கிழக்கு தமிழர் ஒன்றியம் என 10க்கும் மேற்பட்ட கட்சிகள் கோதபாயவுக்காக தீவிர பிரசாரம் செய்தனர். ஆனால் கோதபாய பெற்ற வாக்குகள் 38460 வாக்குகள் மட்டும் தான். சதிஸ் பிரமதாஸ பெற்ற வாக்குகள் இரண்டு இலட்சத்து 38ஆயிரத்து 649 வாக்குகளாகும். கோதபாயாவை விட சதிஸ் பிரமதாஸ 2இலட்சம் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தார். சதிஸ் பிரமதாஸாவின் மீது கொண்ட ஆதரவால் இவ்வாக்குகள் கிடைக்கவில்லை. கோதபாயா மீது கொண்ட கோபத்தின் வெளிப்பாடுதான் இம்முடிவு.

எனவே கோத்தபாய ராசபக்ச தலைமையிலான அரசு மீதும் அந்த ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் தமிழ் கட்சிகள் மீதும் மட்டக்களப்பு மக்களின் ஒரு பகுதியினர் இத்தேர்தலிலும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டுவார்கள். அரச எதிர்ப்பு வாக்குகள் பெரும்பாலும் தமிழரசுக்கட்சிக்கே கிடைப்பது வழமை.

சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களின் ஊடாக நடக்கும் பிரசாரங்கள் சென்றடையாத 40வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர். இந்த பாமர மக்களின் பெரும்பான்மையானவர்கள் பாரம்பரிய தமிழ் கட்சிக்கு வாக்களிப்பது என்ற மனப்பாங்கை கொண்டவர்கள்.

தமிழர்கள் தமது இனத்திற்கான உரிமைகளை பெற்று வாழ வேண்டும், அந்த உரிமைகளை பெறுவதற்காக நீண்டகாலமாக போராடுகின்ற கட்சி தமிழரசுக்கட்சி. ஆயுதப்போராட்டம் தோற்றுப்போன நிலையில் தமிழரசுக்கட்சியே அதனை பெறுவதற்காக செயற்படுகிறது என்ற நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

தமிழரசுக்கட்சிக்கு பிரதேச மட்டத்தில் கிளைகள் உண்டு. வாலிப முன்னணி மாநகர பிரதேச சபை உறுப்பினர்கள் என்ற கட்டமைப்பும் கிராம மட்டத்தில் உண்டு.

பாதகமான நிலைமைகள்.

தமிழரசுக்கட்சி உரிமைகளை பெற்றுத்தருவோம் என வாக்குகளை பெற்றாலும் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளில் பாராளுமன்றம் சென்று அந்த உரிமைகளை பெற்றுத்தந்தார்களா என்ற கேள்வி எழுகிறது.

தமிழரசுக்கட்சி தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் ஆளுமை அற்றவர்கள் சம்பந்தன் போன்றவர்கள் சர்வாதிகாரப்போக்கில் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக இருக்கும் சம்பந்தன் அவர்கள் பதவிகளையும் சலுகைகளையும் பெறுவதிலேயே குறியாக இருக்கிறாரே தவிர தமிழ் இனம் பற்றிய சிந்தனையோ உணர்வோ அவரிடம் கிடையாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு விலைபோகாத சலுகைகளுக்கு பின்னால் போகாத கட்சி என்ற ரீதியில் தான் தமிழ் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் சம்பந்தன் கொழும்பில் பங்களா, வாகன ஆள்அணி, மற்றும் சலுகைகளை பெற்றுக்கொண்டு வாழ்கிறார். முதுமை அடைந்த நிலையில் இளைய தலைமுறையினருக்கு சந்தர்ப்பங்களை வழங்காது தொடர்ந்து தாமே பதவிகளையும் சொகுசான வாழ்க்கையையும் அனுபவிக்க வேண்டும் என அவர் எண்ணுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு. இத்தகைய நிலை தமிழரசுக்கட்சிக்கு பாரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் தமிழரசுக்கட்சி மீது வெறுப்படைந்தவர்களும் உள்ளனர்.

கடந்த காலங்களில் உள்ளுராட்சி தேர்தலின் போதும் இம்முறை பொதுத்தேர்தலின் போதும் மாவட்ட குழுவின் முடிவுகள் விரும்பங்களை கணக்கில் எடுக்காது கொழும்பில் முடிவுகள் எடுக்கப்பட்டதால் மாவட்ட மட்டத்தில் கணிசமான அதிருப்திகள் உண்டு. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் மாவட்ட குழுவுடன் ஆலோசிக்காது பட்டிருப்பு தொகுதியில் இரு உள்ளுராட்சி மன்றங்களை ரெலோவுக்கு வழங்கியதால் பட்டிருப்பு தொகுதியில் உள்ள தமிழரசுக்கட்சியினர் அதிருப்தி அடைந்திருந்தனர்.

அது போல இம்முறை பொதுத்தேர்தல் வேட்பாளர் தெரிவின் போதும் மாவட்ட கிளையின் ஆலோசனையை பெறாது வேட்பாளர்கள்  நியமிக்கப்பட்டதால் பலர் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சிக்கான வாக்கை குறைக்கலாம்.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ்.

முஸ்லீம் மக்கள் தமக்கான தனித்துவமான கட்சியாக அஷ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியையே பார்க்கிறார்கள். அஷ்ரப் அவர்களின் மறைவிற்கு பிறகு அக்கட்சி பிளவடைந்து சிலர் புதிய கட்சிகளை ஆரம்பித்தாலும் முஸ்லீம்கள் மத்தியில் பலமான கட்சியாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியே திகழ்கிறது.

1989ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த 2015ஆம் ஆண்டுவரை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெற்று வருகிறது. 5 ஆசனங்களை கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் முஸ்லீம் வாக்காளர்களுக்கு ஒரு ஆசனம் கட்டாயம் கிடைக்க வேண்டும். அந்த ஆசனத்தை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் பெற்று வருகிறது.

ரி.எம்.வி.பி ( தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி )

சாதகமான நிலைகள்.

நீண்டகாலமாக அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் ரி.எம்.வி.பி கட்சி மாவட்டத்தின் அபிவிருத்தியை முதன்மைப்படுத்தி பிரசாரம் செய்வதால் அபிவிருத்தியை விரும்பும் மக்களின் ஆதரவு அவர்கள் பக்கம் சேர்ந்திருக்கிறது.

பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது குறிப்பிடத்தக்க அபிவிருத்திகள் மட்டக்களப்பில் நடைபெற்றதாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

மட்டக்களப்பை பொறுத்தவரை தேர்தல் காலத்தில் பிரதேச வாதத்தை பேசி வாக்கு கேட்கும் போக்கு நீண்டகாலமாக காணப்படுகிறது. வடக்கு தலைமையை நிராகரித்து மட்டக்களப்பு தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற போக்கும் ஒரு சாராரிடம் காணப்படுகிறது. இந்த பிரதேச வாதமும் ரி.எம்.வி.பி கட்சிக்கு வாக்குகளை அதிகரிக்கலாம்.

பெண் வேட்பாளர் ஒருவரை ரி.எம்.வி.பி கட்சி நிறுத்தியிருப்பதால் அதுவும் அவர்களுக்கு சாதகமான நிலைதான்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளில் அதிகளவு பணத்தை செலவு செய்யும் கட்சியாக ரி.எம்.வி.பி கட்சி காணப்படுகிறது. இதுவரை அக்கட்சி 8கோடி ரூபாய்களை தேர்தல் செலவுக்காக ஒதுக்கியிருப்பதாக தெரியவருகிறது. ஓவ்வொரு வாக்காளர்களுக்கும் தலா ஆயிரம் ரூபா வீதமும் கிராமமட்டத்தில் அதனை ஒருங்கிணைப்பவருக்கு தலா 10ஆயிரம் ரூபாவும் என்ற அடிப்படையில் பணம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டு அரசியலைப்போல பணபலமும் வாக்குகளை பெறுவதற்கான உத்தியாக ரி.எம்.வி.பி பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

பாதகமான நிலைமைகள்.

பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது முஸ்லீம் சிங்கள பிரதேசங்களே பெரும்பாலும் அபிவிருத்தி செய்யப்பட்டதாகவும் கிழக்கு மாகாணத்தில் 16 வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டன. அதில் 13 வைத்தியசாலைகள் முஸ்லீம் பிரதேசத்திலும் 2 வைத்தியசாலைகள் சிங்கள பிரதேசத்திலும், ஒரேஒரு வைத்திசாலை மட்டும் தமிழ் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டது. வேலைவாய்ப்பிலும் சிங்கள முஸ்லீம்களுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

வடக்கு கிழக்கு கரையோர பிரதேச அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட பெருந்தொகை நிதியை கொண்டு சேருவில சிங்கள பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டதாக அண்மையில் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகன் குற்றம் சாட்டியிருந்தார்.  ஹிஸ்புல்லாவுக்கு புனானையில் பெருந்தொகையான காணி வழங்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் ரி.எம்.வி.பிக்கு பாதகமானவையாகும்.

ரி.எம்.வி.பி கட்சி அல்லது பிள்ளையான் குழுவின் கடந்த கால செயற்பாடுகள் கல்விமான்கள் புத்திஜீவிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

அக்கட்சி தொடர்பாக மக்கள் மத்தியில் அச்சம் ஒன்று நிலவி வருகிறது. பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போதுதான் சிறுமிகள், பெண் பொறியியலாளர் உட்பட பல பெண்கள், கல்விமான்கள்,  பொதுமக்கள் என பலர் படுகொலை செய்யப்பட்டனர். வர்த்தகர்கள் பலர் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம், சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் இருக்கும் தமிழ் ஆயுதக்குழுக்களில் ஆகக்கூடிய மனித உரிமை மீறல் குற்றங்களை புரிந்ததாக ரி.எம்.வி.பி மீது குற்றம் சாட்டியிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் 2015.செப்டம்பர் 16ஆம் திகதி இலங்கை தொடர்பான விசாரணைக்குழு அறிக்கையை வெளியிட்டது. 260 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் ரி.எம்.வி.பி கட்சி சிறுமிகளை கடத்தி படுகொலை செய்தது, பெண் பொறியியலாளர் உட்பட பெண்கள் அரச ஊழியர்கள் பொதுமக்களை படுகொலை செய்தது, தமிழர் புனர்வாழ்வு கழக ஊழியர்களை படுகொலை செய்தது, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் உட்பட கல்விமான்கள் ஊடகவியலாளர்கள் ஆகியோர் ரி.எம்.வி.பி ஆயுதக்குழுவால் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ( பக்கம் 532 தொடக்கம் 570வரை)

தற்போது ரி.எம்.வி.பி கட்சியின் வேட்பாளராக இருக்கும் மங்களேஸ்வரி சங்கர் பணியாற்றிய ரான்ஸ்பரன்சி இன்ரநஷனல் என்ற அமைப்பும் ரி.எம்.வி.பி செய்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சாட்டியிருந்தது.

இச்சம்பவங்களால் ரி.எம்.வி.பி கட்சி மீது மக்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள். அந்த அச்சத்தை போக்கும் வகையில் அவர்கள் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் இனிமேல் இத்தகையை கொலைகளை மனித உரிமை மீறல்களை செய்ய மாட்டோம். கப்பம் பெற மாட்டோம் என உத்தரவாதம் ஒன்றை வழங்கியிருந்தால் அச்சம் அடைந்திருக்கும் மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்தாத வரையில் மக்கள் அக்கட்சி மீது அச்சம் கொண்டவர்களாவே இருப்பார்கள். கடந்த காலங்களில் அக்கட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பையும் குறைவாக மதிப்பிட முடியாது. அவ்வாறானவர்கள் அமைதியாக இருந்து தமது வாக்கு பலத்தை பிரயோகிப்பார்கள்.

ஜோசப் பரராசசிங்கம் அவர்களை தேவாலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொன்றதாக பிள்ளையான் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இச்சம்பவம் கிறிஸ்தவ மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவர்களில் கணிசமானவர்கள் ரி.எம்.வி.பிக்கு எதிராக வாக்களிக்கலாம் என்றும் நம்பபடுகிறது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு.

முஸ்லீம் மக்கள் மத்தியில் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு அடுத்த ஆதரவு தளத்தை கொண்ட அணியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹிஸ்புல்லா, பசீர் சேகு தாவுத் ஆகியோரைக் கொண்ட இந்த கட்சி காணப்படுகிறது.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் இம்முறை ஹிஸ்புல்லாவுக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.

ரவூப் மௌலவி தலைமையிலான அணி பசீர் சேகு தாவுத் அவர்களுக்கு வாக்களிக்குமாறு அறிவித்திருக்கிறது. எனவே காத்தான்குடியில் 80வீதமான வாக்குகள் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கிடைக்கும்.

ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடியிலும் இக்கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர பசீர் சேகு தாவுத் அவர்களுக்கு தமிழ் வாக்குகளும் கிடைக்கலாம். வெளிநாடுகளில் உள்ள முன்னாள் ஈரோஸ் உறுப்பினர்கள் பசீர் சேகு தாவுத் ஊடாகவே தமிழ் கிராமங்கள் சிலவற்றிற்கு உதவி செய்து வருகின்றனர். பசீர் சேகு தாவுத் அமைச்சராக இருந்த காலத்திலும் சில தமிழ் கிராமங்களுக்கு உதவி செய்தார் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட அளவு வாக்குகள் பசீர் சேகுதாவுத்துக்கு கிடைக்கலாம்.

வெற்றி பெறப்போகும் கட்சிகள்.

இந்த நான்கு கட்சிகளில் தமிழரசுக்கட்சி குறைந்தது ஒரு இலட்சம் வாக்குகளை பெற்றால் மூன்று ஆசனங்களை அக்கட்சி பெறும்.

நான்காவது ஆசனம் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் பெற்றுக்கொள்ளும்.

ஐந்தாவது ஆசனம் யார் பெறப்போவது என்பதில் தான் ரி.எம்.வி.பி கட்சிக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் இடையில் போட்டியிருக்கும். இதில் பெரும்பாலும் ரி.எம்.வி.பி கட்சிதான் ஐந்தாவது ஆசனத்தை பெறலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற போதிலும் ஹிஸ்புல்லா தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

( இரா.துரைரத்தினம் )