அம்பாறையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகள்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (17) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

பயணத்தை ஆரம்பித்து பதியதலாவைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களிடம் பிரதேச மக்கள் கேட்டுகொண்டதற்கமைய, பதியதலாவ நகர மத்திய வீதியை நான்கு வழிப் பாதைகளாக விரிவுப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
கிரமான, சேரங்கட மற்றும் மரங்கல கிராமங்களின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக அம்பகென்ஒய திட்டத்தின் கீழ் நீரை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி அவர்கள் வழங்கிய உத்தரவிற்கு பதிலளிக்கும்போது நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத்பந்து விக்கிரம குறிப்பிட்டார்.
சேனா புழுவினால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.
மகாவலி காணி தொடர்பாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. பிரதேசத்தின் குளங்கள் மற்றும் சிறிய நீர்ப்பாசன கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் காட்டு யானைகள் கிராமத்தினுள் வருவதை தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
தொழில்வாய்ப்பின்மை தொடர்பாக மக்கள் முன் வைத்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், சுபீட்சத்தின் நோக்கு பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு தேர்தலின் பின்னர் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பயிற்சிபெற்ற தொழில்வள அபிவிருத்தியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்திருந்தவர்களுக்கு தெளிவூட்டினார்.
எலுமிச்சை மற்றும் தானியங்கள் உள்ளிட்ட தமது அறுவடைகளை விற்பனை செய்வதற்கு பொருளாதார மத்திய நிலையமொன்றை ஸ்தாபித்து தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஜனாதிபதி அவர்கள் பதிலளித்தார்.
கிராமங்களில் தொழிநுட்ப பயிற்சிகள் இல்லாத காரணத்தால் இளைஞர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கூடியிருந்த மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை கல்வி அமைச்சரிடம் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வைத்தியர் திலக் ராஜபக்ஷ அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க மகஓய, 69 சந்தியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்த மக்களிடம் சுமூகமாக கலந்துரையாடினார்.
பாரம்பரியமாக மற்றும் வன ஒதுக்கீடுகளுக்கு அருகில் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படும் உறுதிபத்திரம் அற்ற காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மகஓய சந்தையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அவர்களை மகாசங்கத்தினர் ஆசிர்வதித்தனர். கொவிட் வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை மகாசங்கத்தினர் பாராட்டினர்.
திரு.கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பழங்குடியினர் பலரும் கலந்துகொண்டனர்.
திரு.விமலவீர திசாநாயக்க உகன, பிரதேச சபைக்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்கேற்றார்.
பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள 300 ஏக்கருக்கும் அதிகமான பயிர் நிலங்களை மீண்டும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்துவதற்கு தேவையான நீரை வழங்குவதற்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றியுள்ள காணிகளை மக்களுக்க வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்தவர்களிடம் குறிப்பிட்டார். பல பிரதேசங்களில் வாழும் மக்கள் முகங்கொடுக்கின்ற குடிநீர், பயிர்ச் செய்கைக்குரிய நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றி குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி உடனடியாக தீர்வை பெற்றுத் தருவது அரசாங்கத்தின் மிக முக்கிய பணியாகுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நெல் அறுவடைக்கு உத்தரவாத விலையின்றி விற்பனை செய்ய வேண்டாமென்று ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பல பிரதேசங்களில் முன்பள்ளி ஆசிரியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம நாமல்ஒய, சல்கஸ் சந்தி சந்தையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பிரதேசத்தில் தொழிலற்ற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
அம்பாறை, நாமல்ஒய குளத்தை புனர்நிர்மாணம் செய்வதன் அவசியம் பற்றியும் மக்கள் சுட்டிக்காட்டினர். திரு.விமலவீர திசாநாயக்க, அம்பாறை நகர சபை பசுமை பூங்காவிலும் திரு.டப்ளியு.டி.வீரசிங்க ஹிங்குரான சந்தையிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.
சேனா புழுவினால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்ட ஈடு வழங்கவும் அனுமதியின்றி எத்தநோல் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்திருந்தவர்களிடம் தெரிவித்தார்.
ஹிங்குரான சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பாக கூடியிருந்த மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு தமது பாராட்டை தெரிவித்தனர்.
மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.17