இவர்கள் நமது மண்ணை மீட்க வரவில்லை. எமது மண்ணை விற்க வந்தவர்கள்.

இப்படிக்கூறுகின்றார் க.கமலநேசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் பிரதிநிதித்துவ ஆசனத்தினை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் களமிறங்கப்பட்டுள்ளனர் என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று கிளை செயலாளருமான க.கமலநேசன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசாங்கத்தின் உதவி மூலம் சில கட்சிகளும், பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களால் எந்தவித ஆசனத்தையும்; பெறமுடியாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தற்கால அரசியல் சூழ்நிலையில் நான்கு ஆசனம் பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதனை பிரித்து மாற்று சமூகத்திற்கு வழங்கும் பாணியில் எமது தமிழ் பிரதிநிதிகள் களமிறங்கியுள்ளனர். இந்த விடயமானது எமது சமூகத்திற்கு செய்யும் பாரிய துரோகச் செயலாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

மாறாக எஞ்சி இருக்கின்ற தமிழ் தேசிய வாதிகளையும் எமது கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் இல்லாமல் செய்வதற்கும் தமிழர் தாயக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்து கிழக்கு பகுதியில் தொல் என்ற பெயரில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை மேலோங்கச் செய்வதற்காகவுமே எமது மாவட்டத்திலுள்ள அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள் ஒப்பந்தம் செய்து கொண்டு வந்துள்ளார்கள் என்பதை மக்கள் மறந்து விடக் கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ் தேசிய நிறைந்த மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் வாக்களிக்க முன்வர வேண்டும். இல்லையேல் நீங்கள் வேறு கட்சிகளுக்கு அழிக்கும் வாக்குகள் அனைத்தும் செல்லுபடியற்ற வாக்குகளாகவே போய் விடும். ஏனெலில் இவர்களால் எந்த ஆசனமும் செற முடியாது. இவர்கள் நமது மண்ணை மீட்க வரவில்லை. இவர்கள் எமது மண்ணை விற்க வந்தவர்கள்.

கடந்த காலத்தில் எமது இளைஞர்கள் எமது மக்களின் விடிவுக்காக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அந்த போராட்டத்தினை கொஞ்சைப்படுத்தியவர்கள் தற்போது களமிறங்கப்பட்டு, இளைஞர்களின் போராட்டத்தினை களங்கப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களால் எமது இளைஞர் சமூகம் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளியவர்கள் இப்போது மீண்டும் காலடிக்கு வந்து பொய்யான வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் மக்கள் பிரதிநிதியாக வெளி வந்தவர்கள் தற்போது பணத்தின் மோகம் காரணமாக தமிழ் மக்களை விற்றுப் பிழைப்பு நடாத்தும் வகையில் ஆளும் கட்சியின் நேரடியாகவும், மறைமுகமாகவும் இணைந்து தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் சிந்தித்து மாற்று சமூகத்தினருக்கோ அல்லது நம்மை மாற்று சமூகத்திடம் விற்கும் நபர்களுக்கோ வாக்களிக்காது எப்போதும் தமிழ் மக்களின் குரலாய் ஒழித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் ஒரேயொரு கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க முன்வரவேண்டும்.

நீங்கள் சரித்திரத்தினை மாற்றுவோம் என்று முற்பட்டால் உங்களது மற்றும் உங்கள் பிள்ளைகளது எதிர்காலத்தினை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது. மீண்டும் எமது உறவுகளை நாம் தேட வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆகவே அனைத்து தமிழ் வாழ் மக்களும் சிந்தித்து செயற்படுங்கள் என்றார்.