கிழக்கில் சிறந்த கல்விச்சேவையை வழங்க திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

இன்று பதவியேற்றகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் நிசாம்.
(காரைதீவு  நிருபர் சகா)


மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைவாக இன்று நான் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராகக் கடமையேற்கிறேன். இருக்கின்ற காலத்துள் சிறந்த கல்விச்சேவையாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளேன். அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு  வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராகக் கடமேயேற்ற எம்.ரி.எ.நிசாம் தெரிவித்தார்.

அவரது பதவியேற்பு நிகழ்வு நேற்று திருமலையிலுள்ள மாகாண கல்விப்பணிமனையில் நடைபெற்றது. கல்வித்துறை அதிகாரிகள் அபிமானிகள் எனப்பலரும் சூழ்ந்திருந்தனர்.

அங்கு அவர் கூறுகையில்: கிழக்கு மாகாணத்திலுள்ள 17கல்வி வலயங்களிலுள்ள அதிபர் ஆசிரியர் மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்விசேவையாற்றுவேன். அதற்காக உந்துதந்து வாழ்த்துத்தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். என்றார்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இதுவரை செயற்பட்டுவந்த எம்.கே.எம். மன்சூர்  மாகாண கல்விப் பணிப்பாளராக செயல்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்குமுடியும்  வரை  இடைக்கால தடை உத்தரவை வழங்கியிருந்தமை தெரிந்ததே.

இவ்வழக்கு கடந்த 14ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டது.இதனை விசாரித்த  நீதிபதிகள் குழாம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்புக்கு வழக்குமுடியும் வரை இடைக்கால தடை உத்தரவை வழங்கி எம். ரி. ஏ நிசாம்   கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயல்படுவதற்கு அனுமதியை வழங்கி உள்ளது.

இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எல்.சிரான் குணரத்ன கலாநிதி ருவான் பெர்ணாண்டோ பிறப்பித்துள்ளனர்.பணிப்பாளர் நிசாம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி ஆஜரானார்.அவருடன் சட்டத்தரணி தம்மிகாவும் பிரசன்னமாயிருந்தார்.சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற சமர்ப்பணத்தின்பின் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.