எமக்கு ஆணை தாங்கள் இந்தத் தமிழன் பிடிவாதத்தோடுதான் இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டு கோத்தபாய செயற்படுவார்

0
158

இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் 

கி.துரைராசசிங்கம்

(ஏறாவூர் கபூர்)

தமிழர்களின் இருப்பை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வாக்களிப்பது இன்றைய காலத்தின் தேவையாகும் என்று இலங்கை தமிழரசுக்  கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்

ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு 01 கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்  கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

தமிழ் பிரதேசங்களில் சிங்கள மக்களது பரம்பலை தடுப்பதற்கும் சிங்கள மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு மட்டக்களப்பில் வாக்குக் கேட்டு தெரிவு செய்யப்படுகின்றவர்களை தமிழரசுக் கட்சி முறியடித்தேயாகும்.

இதனைத் தொடர்ந்து வந்த ஆக்கிரமிப்புக்களை தடுக்காமல் இருப்பின் இலங்கையின் மேற்கு தெற்கு பகுதியில் இருந்த தமிழர்கள் போன்று நாமும் தொலைந்திருப்போம். உதாரணமாக சிலாபம் பகுதியில் தமிழர்களின் ஆலயம் உண்டு தமிழர்கள் இல்லை. புத்தளம் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசம் அங்கும் தமிழர்களைக் காணவில்லை.  நீர்கொழும்பிலும் தமிழர்களைக் காணவில்லை. கதிர்காமம் இருக்கின்றது அங்கு முருகன் ஆலயமும் இருக்கின்றது தமிழர்கள் அங்கு இல்லை. ஏன் அவர்களைக் காணவில்லை ஏன் அவர்கள் தொலைந்து போனார்கள் என்றால் அங்கிருந்த தமிழ்த மக்களுடைய தலைவர்கள் கவனயீனமாக இருந்ததன் காரணமாக சிங்கள மக்களோடு தங்களின் தனித்துவத்தை பேனாது கலந்து கலந்து தங்களுடைய அடையாளத்தை இழந்து விட்டு இருந்து விட்டார்கள்.

ஆனால் வடகிழக்கிலே உங்களுடைய தலைமைகள் கவனமாக இருப்பதனால் தமிழ் மொழி தமிழ்க் கலாசாரம் இந்த மண் தமிழ் மண்.  சிங்கள மயம் உருவாகாத  வகையில் வடகிழக்கிலே சமஅந்தஸ்து கிடைக்கக் கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளோம். சிங்கள மக்களின் குடியேற்றங்கள் வரும் போது நாங்கள் எங்களுடைய மக்களை குடியேற்றி சிங்கள குடியேற்றங்களைத் தடுத்திருக்கிறோம்.

மிகப் பெரிய தீவிரமான போராட்டம் நடந்தது எமது இளைஞர்கள் வீரதீரச் செயல்களைச் செய்தார்கள் ஆனால் அவர்களுக்குள்ளே ஒரு சதியைச் செய்து போராட்டத்தை பிரித்தார்கள். அதற்கு கிழக்கு மாகாணத்தவர்கள் துணைபோனார்கள் அவ்வாறு பிரித்து ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றுகுவித்து யுத்த காலத்தில் நடைபெறுகின்ற சாதாரண மக்களை காணவில்லை என்று சொன்னார்கள்.  இவர்களை அழித்தவர்கள் இந்த நாட்டை ஒரே தேசம் ஒரே நாடு என்று சொல்லி ஒரு ஏற்பாட்டை செய்யப்பார்த்தார்கள்  2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்களெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதன் மூலம் நீங்கள் என்னதான் செய்தாலும் கூட எங்களுடைய மொழியை எங்களுடைய மதத்தை கலாசாரத்தை பாதுகாப்பதில் இருந்து எள்ளளவும் பிசுகமாட்டோம் என்று சிங்கள பௌத்த தேசிய வாதத்தின் மூலம் நாடு முழுவதையும் ஆட்சி செய்வதற்கு நாங்கள் இணங்கிக் போக மாட்டோம் என்று எதிர்ப்பலையை தமிழ் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்த தமிழ் மக்கள் செய்து காட்டியுள்ளனர்.

இப்பொழுது ஜனாதிபதி அவர்கள் தனது பதவியேற்பு வைபவத்தில் என்னை சிங்கள  மக்கள்தான் தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே சிறுபான்மை மக்கள் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுத்துள்ளார். இந்த அறைகூவலோடு இந்தத் தேர்தல் வந்திருக்கின்றது. இந்த தேர்தலிலே தமிழ் மக்கள் இவருடைய அறைகூவலுக்கு நாங்கள்  ஆமா சாமி போடப் போகின்றோமா அல்லது நாங்கள் தொடர்ச்சியாக இந்த நிலத்தை மொழியை கலாசாரத்தை காப்பாற்றினோம் என்கின்ற எங்களுடைய எதிரலையை அவருக்கு கொடுக்கப்போகின்றோமா என்பதுதான் நாம் இத் தேர்தலின் மூலம் கொடுக்கயிருக்கின்ற செய்தி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் தெரிவு செய்வதன் மூலம் நாங்கள் பெரும்பான்மையோடு நாங்கள் கரைந்து விட மாட்டோம் எங்களுடைய தனித்துவத்தை காப்பாற்றுவோம் என்கின்ற செய்தியை சொல்லியனுப்பக் கூடியதான செய்தியை வருகின்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக் இருந்தால் இம் முறை புத்திசாலித்தனமாக தமிழர்கள் என்ற உணர்வோடு வாக்களித்தால் 04 பாராளுமன்ற உறுப்பினர்களைப் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுவோம் அதுமாத்திரமின்றி வன்னி மற்றும் யாழ்ப்பானத்தில் இவ்வாறு தெரிவு செய்யப்படுவதன் மூலம் 18 அல்லது 20 ஆசனங்களைப் பெறுகின்றபொழுது கோத்தபாய ராஜபக்ஸ அவர்கள் இன்னும் இந்தத் தமிழன் பிடிவாதத்தோடுதான் இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டு செயற்படுவார்

அதன் மூலம்  எமது வரலாற்று கடமைகளை செய்யலாம் என்கின்ற விடயத்தை  சொல்லி தமிழ் இனத்தின் இருப்பிடத்தை பாதுகாக்கின்ற இந்த செயற்பாட்டுக்கான உங்களுடைய வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். எதிர்வரும் 05 ஆம் திகதி வீட்டுச் சின்னத்திற்கும் எனது இலக்கம் 02 க்கும் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் உரிமையைப் பாதுகாப்போம் அதனூடாக அபிவிருத்தியையும் செய்வோம் என்றார்