அடுத்த கட்டமாக, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லோருமாகச் சேர்ந்து தீர்மானிப்போம்.

கோணேஸ்வரம் கோயில்
கோகர்ண விகாரை

7.07.2020ஆம் திகதியிலிருந்து பத்திரிகைகளிலும் ஏனைய சமூக ஊடகங்களிலும் திருக்கோணேஸ்வர ஆலயம், கோகர்ண விகாரை பற்றி பௌத்த பிக்கு எல்லாவல மேதானந்த தேரர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சார்ந்து திருகோணமலை மக்கள் மட்டுமல்லாது, இலங்கையில் வாழும் அனைத்து சைவப் பெருமக்களும் குழப்பமும் கவலையும் அடைந்திருக்கிறார்கள் என திருக்கோணேஸ்வரர் ஆலயம் அல்ல விகாரை என எல்லாவெல மெத்தானந்த தேரர் கூறிய கருத்து தொடர்பாக திருக்கோணேஸ்வரர் ஆலயம் நம்பிக்கை பொறுப்பாளர் சபை தலைவர் க. அருள் சுப்பிரமணியம்  இன்று 2020.07.10 வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சமய பேதமின்றி வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களும் பக்தியோடும் நம்பிக்கையோடும் வணங்கிச் செல்லும் ஆலயமாகத் திகழ்கிறது திருக்கோணேஸ்வரம்.

ஆலயத்திற்கு வரும் அனைத்து இன மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அவர்களது பிரார்த்தனைக்கும்  நம்பிக்கைக்கும் எவ்வித இடையூறுமில்லாமல் உறுதுணையாக சைவப் பெருமக்கள் இருக்கிறார்கள் என்பது நாம் சார்ந்த சமயத்திற்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் விடயம்.

குறிப்பாக, திருக்கோணேஸ்வரத்திற்கு வரும் பெருமளவிலான சிங்கள மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு வந்து தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பிக்கிறார்கள்.  திரும்பவும் வந்து தங்கள் நேர்த்தியை நிறைவேற்றிவிட்டுச் செல்கிறார்கள்.  கோணேசப் பெருமானில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவதானிக்கையில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.

இத்தகைய பின்புலத்தில் “கோணேஸ்வரம் கோயில் அல்ல, அது கோகர்ண விகாரையே” என்னும் தேரர் அவர்களின் கூற்று வேதனையளிப்பதில் வியப்பொன்றுமில்லை.

எங்கள் ஆலயம் தொன்மை வாய்ந்தது என்பதை நிரூபணம் செய்து கொண்டிருக்க வேண்டிய தேவை எமக்கில்லை.  ஆனால், அதற்கான சூழலை வலிந்து ஏற்படுத்தும் போது நாம் கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் இருப்போமானால் அது நம் ஆலயத்திற்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

அதற்காக, நம் மனங்களில் ஆத்திரத்தின் வெளிப்பாடாகத் தோன்றுகிற அத்தனை எண்ணங்களையும் நாகரிகமற்ற முறையில் பொதுவெளியிலும், சுதந்திரமாக எழுத வாய்ப்பளிக்கும் ஊடகங்களிலும் பதிவு செய்ய முற்பட்டால், அவற்றினால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உண்மை என்றுமே தோற்காது, தோற்பது போலத் தோன்றும். இறுதியில் உண்மையே வெல்லும். எனவே, நம்பிக்கையோடு நம் நற்பணியினைத் தொடர்வோம்.
—–

உலக சமயங்களின் மாநாடு 11.09.1893ல் சிகாகோவில் நிகழ்ந்த போது சுவாமி விவேகானந்தர் தனது சொற்பொழிவின் ஆரம்பத்தில் கூறியதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

“சகிப்புத் தன்மையையும், அனைத்து சமயங்களையும் ஏற்றுக் கொள்ளும் பண்பினையும் இந்த உலகிற்குப் புகட்டிய ஒரு சமயத்தைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். அது மட்டுமல்லாது, அனைத்து மதங்களும் உண்மையானவை என்றும் ஏற்றுக் கொண்டவர்கள் நாம்.”

சுவாமி விவேகானந்தர் புத்த மகானைப் பற்றிக் கூறியது:
“Buddha was the great preacher of equality.  Every man and woman has the same right to attain spirituality.”

புத்த மகான் கூறிய நல்வாக்குகளில் ஒன்று:
“நீங்கள் உண்மையை மாற்ற முடியாது.  ஆனால், உண்மை ஒருநாள் உங்களை மாற்றிவிடும்.”
——
கோணேசர் மலையின் அருகாமைக் கடலடியில் அழித்தொழிக்கப்பட்ட எமது ஆலயத்தின் கட்டுமானப் பொருட்கள், விக்கிரகங்கள் போன்ற அரிய தொல்பொருட்கள் நிறைந்துள்ளன.  அவற்றை ஆராய்ந்து பார்த்து வெளிக்கொணரும் அனுமதி எமக்கில்லை.  நாம் எந்தவொரு சமயத்திற்கும் மக்களுக்கும் எதிரானவர்களல்ல. அதே வேளையில் எமது உரிமையினை பாதுகாக்கும் கடமை எமக்குண்டு.  ஆனால் அதனை அமைதியான வழியில் மட்டுமே நாம் வெளிப்படுத்த முயல்கிறோம்.

முதற்கட்டமாக, திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை சார்ந்த சில முக்கிய விபரங்களை நம்மக்களின் கவனத்திற்காக இங்கே தர முயல்கிறேன்.

“ஸ்ரீமான் வே. அகிலேசபிள்ளை அவர்கள் எழுதிய திருக்கோணாசல வைபவம், 1889)”

கோணமாமலையமர்ந்த கோவிலின் அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தை ஆழ்ந்த சிவபக்தனாகிய இராவணன் தன் தாயார் வணங்கும் பொருட்டு தன்னுடன் எடுத்துச் செல்ல பலவந்தமாக முயன்ற போது கோணேசப் பெருமானால் தண்டிக்கப்பட்டு, பின்னர் மன்னிப்புப் பெற்ற விடயம் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.  (சான்றாகத் திகழ்வது: இராவணன் வெட்டு).

இக்கருத்தின் சாரம் கோணேசர் கோயில் இராவணனால் வழிபடப்பட்டது என்பதாகும். அத்தோடு தன் தாயின் ஈமச்சடங்கினை வெந்நீரூற்றுக் கிணறுகள் அமைந்துள்ள கன்னியாவில் நிறைவேற்றினான் என்பதும் வரலாறு.

இவையெல்லாம் புராணக்கதைகள் தானே என்று புறந்தள்ளாமல் பரிபூரண நம்பிக்கையோடு இப்புராண வரலாற்றுச் சான்றுகளை சைவப் பெருமக்கள் போற்றிப் பேணி வருகிறார்கள்.

இராமாயண இதிகாசத்தின்படி இராவணனின் காலத்தை இராமன் வாழ்ந்த காலமாகக் கொள்ளலாம்.  இராமன் காலம் கி.மு. 1600 என்று வரலாற்று ஆய்வாளர் திரு. பர்கிரெர் அவர்களும், கி.மு. 800க்கும் 600க்கும் இடைப்பட்டது என திரு. எஸ்.என். வியாஸ் அவர்களும் கூறுகிறார்கள். (India in the Ramayana Age – page 7).
—–

வரலாற்று ஆய்வாளர் திரு. பீ.ஈ பீரீஸ் அவர்கள் தனது “Nagadipa and Buddhist Remains in Jaffna”  என்னும் நூலில் (பக்கங்கள் 17-18) “விஜயன் வருவதற்கு முன்னரே, இலங்கையில் 5 சிவாலயங்கள் இருந்தன.  அவைகளில் ஒன்று:  கோணேஸ்வரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  (விஜயன் காலம் கி.மு. 543-505).
—–

கலாநிதி. டபிள்யூ. பாலேந்திரா அவர்கள் தனது “Trincomalee  Bronzes” என்னும் நூலில் – “ According to the Portuguese account found at the Adjuda Library – codes x51 Chapter 7, para 40,  Koneswaram existed 1300 years (கி.மு.1300) before the coming of Christ”” என எழுதியுள்ளார்.
—–

திரு. ஈ. கிருஷ்ண ஐயர் அவர்கள் தனது “The Trincomalee Icons” – Oct 1951 (page 46) என்னும் நூலில் “கோணேஸ்வரம் ஏறக்குறைய கி.மு. 1300ல் கட்டப்பட்டது.” எனக் கூறியுள்ளார்.
—–

“மகாவம்சம்” என்னும் நூல் கி.பி. 6ம் நூற்றாண்டளவில் பாளி மொழியில் மகாநாம தேரர் என்னும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டது.  இலங்கையின் வரலாற்று ஆவணமாக பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களால் கருதப்படுகிற இந்நூலில் காணப்படும் விடயங்கள்:

“மகாசேன மன்னன் பிராமணக் கடவுளுக்கான கோவில்களை அழித்து 3 விஹாரங்களை அமைத்தான்.  அழிக்கப்பட்ட கோயில்களில் கோகர்ண விஹாரம் என அழைக்கப்பட்ட கோணேஸ்வரம் ஒன்றாகும்.” (மகாசேனன் காலம் கி.பி. 277-304).
—–

திரு. எஸ். பரணவிதான என்னும் வரலாற்று ஆய்வாளர் அவர்களினால் எழுதப்பட்ட (Fragmentary Sanskrit Inscription from Trincomalee 1955)  என்னும் நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“ஆதிகாலத்தில் இந்தியாவின் கிழக்குக் கரையிலிருந்து வந்த கப்பல்கள் தங்கும் துறையாக திருகோணமலை விளங்கியிருக்க வேண்டும். மகாவம்ச காலத்திற்கு முன்னர் பௌத்தமத நம்பிக்கையற்ற மக்கள் இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் சார்ந்த கோயில்கள் மகாசேனன் காலத்திற்கும் முன்னதாக அப்பகுதியில் இருந்தன.”
—–

“மகாவம்சம்” xxxiii 24-26
இலங்கையில் எல்லாள மன்னனின் ஆட்சிக் காலத்தில் (கி.மு. 205-161) குண்டல எனப் பெயர் கொண்ட பிராமணன் பற்றி மகாவம்சம் கூறுகிறது.
—–

கலாநிதி செ. குணசிங்கம் அவர்களினால் 1973ல் எழுதப்பெற்ற வரலாற்று ஆய்வு நூலான “கோணேஸ்வரம்” நூலிலிருந்து:

“மகாவம்சத்தின் உரைநூலான “மகாவங்சதீக” தரும் தகவல்களுக்கமைய “பௌத்த மத வருகைக்கு முன்னர் இயக்கர், நாகர் என்போரது வழிபாட்டு முறைகள், லிங்க வழிபாடு, மற்றும் பிராம்மணியம் ஆகிய மதக் கருத்துக்கள் இலங்கையில் காணப்பட்டன.”

“திருகோணமலையின் கிழக்குக் கரையில் இருந்த கோகர்ண விஹாரம் என அவர்களால் அழைக்கப்பட்ட கோணேஸ்வர கோயில் மகாசேனனின் கவனத்தை குறிப்பிடத்தக்க விதத்தில் ஈர்க்குமளவுக்கு சிறப்புப் பெற்றிருந்தது என்றும், இந்து சமய  வழிபாடு இப்பகுதியில் வேரூன்றியிருந்திருக்கிறது என்றும் கொள்ள முடிகிறது.”

“மகாவங்சதீக”- மகாசேனனால் இடிக்கப்பட்ட கோவில்களில் ஒன்று திருகோணமலையிலிருந்த சிவலிங்கக் கோவில் ஆகும் எனக் குறிப்பிடுகின்றது.”
“பௌத்த மதம் தேவநம்பிய தீசன் காலத்திலேயே (கி.மு. 307 – 267) இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அவருக்குப் பின் வந்த அரசர்களும் பௌத்தத்திற்கு தமது ஆதரவை வழங்கினர்.

தேவநம்பிய தீசனது சமகால வடஇந்திய ஆட்சியாளர்  அசோகர்  ஆவார்.  அனுராதபுரத்திற்கு போதி மரக்கிளை கொண்டு வரப்பட்ட போது திவக்க என்னும் பிராமணரின் கிராமத்திற்குப் போகும் வழியிலும் போதிமரக்கிளை ஊர்வலம் நிறுத்தப்பட்டது என மகாவம்ச குறிப்பிடுகின்றது.  இந்தப் பிராமணர் மிக முக்கியத்துவம் பெற்ற ஒருவராக இருந்தார் என்பதனை மகாவம்ச தரும் செய்தியிலிருந்து கவனிக்க முடிகிறது.  அதாவது போதிமரம் நாட்டப்பட்ட வைபவத்தின் போது சமூகம் கொடுத்த முக்கியத்துவம் வாய்ந்தோரில் இப்பிராமணர் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனைக் கவனிக்கும் போது பௌத்தத்திற்கு முற்பட்ட இலங்கையின் சமூகத்தில் பிராமணர்கள் குறிப்பிடத்தக்க ஒரு நிலையைப் பெற்றிருந்தார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.

கிறீஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே நெருங்கிய பண்பாட்டுத் தொடர்புகள் இருந்து வந்திருக்கின்றன எனவும் அறிய முடிவதால் இந்துக்கள் தமது சமய வழிபாட்டிற்காக கோவில்களை அமைத்திருப்பார்கள் என்பதில் தவறில்லை.  இத்தகைய ஒரு சூழ்நிலையில் கோணேசர் கோவிலும் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

கிறீஸ்துவிற்கு முற்பட்ட 6ம் நூற்றாண்டிலிருந்து 1ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் இடையீடின்றி பிராமணர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.  கோகர்ண சிவன் கோவில் மகாசேனனினால் இடிக்கப்பட்டு அதன் அருகில் புத்த விஹாரம் அமைக்கப்பட்ட போதிலும், இந்துமதம் அப்பகுதியில்  பெற்றிருந்த செல்வாக்கினை அரசனால் குறைக்க முடியவில்லை.

பிற்பட்ட காலத்தில், மகாசேனன் தான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வருந்தி இடித்த ஆலயத்தினை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டான்.”
—–

Fernao De Queyroz (The Temporal and Spiritual Conquest of Ceylon, Translated by S.G. Perera, Book 1, Colombo 1930. Page 236.
17ம் நூற்றாண்டில் போர்த்துக்கீச பாதிரியார் குவைறோஸ், திருகோணமலை பற்றிக் குறிப்பிட்டது திருக்கோணேஸ்வரம் இதற்கு முற்பட்ட காலத்தில் எத்தகைய நிலையில் இருந்தது என்பதனை விளங்கிக் கொள்ள உதவுகின்றது.  கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோமாபுரி என இக்கோவிலை வர்ணித்த குவைறோஸ், அதிகமான பக்தர்களின் கவனத்தை ஈர்த்த இந்தியக் கோவில்களான இராமேஸ்வரம், காஞ்சிபுரம், திருப்பதி திருமலை ஜகந்நாதர் ஆகியவற்றிற்கு சென்ற யாத்திரிகர்களைக் காட்டிலும் கூடுதலானோர் கோணேஸ்வரத்திற்கு வந்து வழிபட்டுச் சென்றனர் எனவும் கூறியுள்ளார்.
—–

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோணேசருக்கு திருப்பதிகம் பாடியது கி.பி. 600-630.

அருணகிரிநாதரின் திருப்புகழில் திருக்கோணேஸ்வரம் கி.பி. 1468.

திருக்கோணேஸ்வரத்தின் தலப்புராணமாகிய தெட்சண கைலாய புராணம் கி.பி. 1380.
—–

புத்த மகான் அனைத்தையும் துறந்து ஞானம் பெற்று மனித குலத்திற்கு நல்வழி காட்டிய தலைசிறந்த ஞானி.  சைவப் பெருமக்களாகிய நாம் புத்த மகானை மட்டுமல்லாது ஏனைய மதங்களின் ஞானிகளையும் மதித்து வணங்குவதற்குத் தவறுவதில்லை.  அத்தகைய மனப்பாங்கு கொண்டிருக்கும் எங்களிடம் புத்தர் சிலைகளைத் திணித்து அவரை வணங்கச் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதே போல மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத இழி செயல்;.

சைவமக்கள் இறை நம்பிக்கை மிகுந்த மக்கள்.  எம்முன்னோர்கள் எமக்கு விட்டுச் சென்ற ஆன்மீக இலக்கியச் சொத்துக்கள் அளவிளடங்காது.  தேவார திருவாசகங்களை உள்ளடக்கிய திருமுறைகள், இராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இதிகாசங்கள், திருக்குறள் போன்ற மனித வாழ்க்கையின் அத்தனை கூறுகளையும் உள்ளடக்கிய சமூகநீதி நூல்கள் என்று எண்ணற்ற நூல்களுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள்.
அவைகளிலிருந்து கலாசாரம் பண்பாடு அன்புடைமை அறிவுடைமை என்னும் நல்லவைகளை நாம் பெற்றிருக்கிறோம்.

எந்தவொரு கையறுநிலையிலும், இணையற்ற இலக்கியங்கள் மூலம் நாம் சாஸ்வதமாக்கிக் கொண்ட “கண்ணியத்தை” காப்பாற்றும் விதமாகச் செயலாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

அடுத்த கட்டமாக, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லோருமாகச் சேர்ந்து தீர்மானிப்போம்.

அன்பே சிவம்.

கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம்
தலைவர்
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை
10.07.2020