தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தினைக் குறைத்தால் நடக்கப்போவது என்ன உதயகுமார் விளக்கம்.

தமிழ் மக்களான எமக்கு இந்த நாட்டில் உரிமை இல்லாதபோது எமக்காக அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற எவ்வகையிலான அபிவிருத்தியானாலும் சரி அதனால் ஒரு முழுமையான பயனை நாம் எப்போதும் அனுபவிக்கமுடியாது என தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மா.உதயகுமார்.

நேற்றையதினம் (04) செங்கலடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்..
நடைபெற இருக்கின்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பிற்கு எதிராகப் போட்டியிடுகின்ற கட்சிக் காரர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முழுமையான அபிவிருத்தியையும் வேலையற்ற இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினையும் தாங்கள் ஏற்படுத்தித் தருவதாக பொய்யான போலியான உறுதிமொழிகளை வழங்கி வருகின்றார்கள் இவ்வாறான வார்த்தைகளை நம்பி எமது மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.
இளைஞர்களுக்கான வேலையில்லாப் பிரட்சினை குறிப்பாக வேலையில்லா பட்டதாரிகள் எமது மாவட்டத்தில் மாத்திரமல்ல நாடுமுழுவதுமே இருக்கின்றார்கள் பெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் அனைவருக்கும் அரச தொழில் வழங்க முடியாது தற்போது கோட்டா அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளது அனேகமான வேலைவாய்ப்புகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலமாகவேதான வழங்கப்படுவதனைக் காணலாம்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை எமது பிரதேசத்தில் உருவாக்க வேண்டும் இதனுடாக பல ஆயிரம் தொழில் வாய்ப்புகளை எம்மால் உருவாக்க முடியும் அனைவருமே அரச தொழிலை எதிர்பார்க்க முடியாது.
மேலும் தொழில் சந்தைக்கு ஏற்றவாறான கல்வியினை எமது மாணவர்கள் கற்க வேண்டும் எமது பிரதேசத்தில் இருக்கின்ற சில தொழிற் கல்விகளை மாணவர்கள் பயன்படுத்தத் தவறுகிறார்கள் உதாரணமான மட்டு நாவலடியில் உள்ள சமுத்திரவியல் கல்லூரியைக் குறிப்பிடலாம் இந்தக் கல்லூரியில் பல கற்கை நெறிகள் இருக்கின்றன இவற்றினைப் பூர்த்தி செய்தால் உலகளாவிய ரீதியில் பல தொழில் வாய்ப்புகள் எமக்காக எமது இளைஞர்களுக்காக காத்திருக்கின்றன.
எனவே எங்களுக்கு வாக்களித்தால் பத்தாயிரம் பதினையாயிரம் இளைஞர்களுக்கு தொழில் வழங்குவோம் என்றோ பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை இங்கு செய்வோம் என்றோ எதிர்க் கட்சிகள் கூறுவதனை நீங்கள் நம்பி ஏமாற வேண்டாம்.
இந்தக் கட்சிகளின் ஒரே நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற இருக்கிற ஆசனங்களின் எண்ணிக்கையினை எப்படியாவது குறைத்து கூட்டமைப்பின் பலத்தினைக் குறைக்க வேண்டும் என்பதே.
த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக போட்டியிடுகின்ற தமிழ்க் கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்குகள் பல பிரிவுகளாகப் பிரிவதனால் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் ஒன்று மாற்று இனத்தவருக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் உண்டாகலாம் கடந்த முறை நடைபெற்ற தேர்தல்களை உற்று நோக்கினால் படகுக் கட்சியினுடைய தலைவருக்கு அளிக்கப்பட்ட வாக்குகளினால் கிஸ்புள்ளாவும் கணேசமூர்த்திக்கு அளிக்கப்பட்ட வாக்குகளினால் அமீரலியும் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவானதனை நாம் மறுக்க முடியாது.
ஆகையால் அன்பான தமிழ் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தினைக் குறைத்தால் தமிழ் மக்கள் தேசியத்தின் பால் அக்கறை இழந்தவர்களாகவும் இலங்கை அரசின் செயற்பாடுகளை ஆதரிப்பவர்களாகவும் சர்வதேசத்திற்கு காட்டி ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நல்லிணக்க நீதிப் பொறிமுறையினை இல்லாது ஒழிக்கவும் சர்வதேச தலையிட்டுடனான அரசியல் தீர்வு மற்றும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் என்பவற்றினை இல்லாமல் செய்வதனூடாக ராஜபக்சக்களின் நீண்டநாள் நிகழ்ச்சி நிரலின்படி சிங்கள பேரினவாத பௌத்த ஆட்சியினை இலங்கையில் மேலோங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் அதிதீவிரமாக மேற்கொள்ளப்படும் என்பதனை மறக்காதீர்கள். இதற்கான முன் ஏற்பாடுகள் பௌத்த தேரர்களால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதனையும் ஊடகம் வாயிலாக அறிந்திருப்பீர்கள் (குசானர் மலை முருகன் ஆலயம் மற்றும் வெல்லாவெளி வேத்துச்சேனை) என நான் நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.