நிரப்ப முடியாத வெற்றிடமாகியுள்ள அமரர் அருணாச்சலம் தங்கத்துரை அவர்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்

இன்று அவரது 23வது நினைவு தினம்.

திருக்கோணமலை மாவட்டமானது விகிதாசாரத் தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக மூன்று தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.. தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருக்கோணமலைத் தொகுதி, முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மூதூர்த் தொகுதி, சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சேருவிலத் தொகுதி என்பனவே அவை.
மூதூர்த் தொகுதியானது நாடாளுமன்றத் தேர்தல் காலங்களிலே இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்தது.
1970 மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலே மூதூர்த் தொகுதியிலே இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட அமரர் அருணாச்சலம் தங்கத்துரை அவர்கள் 19787 வாக்குகள் பெற்று இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினராகவும் இலங்கை சுதந்திரக் கட்சி சார்பிலே போட்டியிட்ட மர்ஹ_ம் ஏ.எல் அப்துள் மஜீத் அவர்கள் 22727 வாக்குகள் பெற்று முதலாவது நாடாளுமன்ற உறுப்pனராகவும் தெரிவாகினர்.
1977 ஜூலை 21 ஆம் நாள் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் அமரர் அ.தங்கத்துரை அவர்களும் மர்ஹ_ம் ஏ.எல்.அப்துள் மஜித் அவர்களும் மூதூர்த் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றினர்
மர்ஹ_ம் ஏ.எல் அப்துள் மஜீத் அவர்கள் கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அமரர் அ.தங்கத்துரை அவர்கள் மூதூர், கிளிவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
மூதூர்த் தொகுதியில் மூதூர் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகிய முதலாவது உறுப்பினர் என்ற பெருமை அமரர் அருணாச்சலம் தங்கத்துரை அவர்களுக்கு உண்டு.
அமரர் அ.தங்கத்துரை அவர்களது நாடாளுமன்றக் காலம் மூதூர்ப் பிரதேசத்தின் பொற்காலம் என அப்பிரதேச மக்களால் இன்றும் நினைவு கூருவதில் எந்த மிகைப்படுத்தலுமில்லை. ஏனெனில் அவரது நடவடிக்கைகள் அவ்வாறுதான் இருந்திருக்கின்றன.
1936 சனவரி 17 ஆம் நாள் கிளிவெட்டியிலே பிறந்த அமரர் அருணாச்சலம் தங்கத்துரை அவர்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்திலே எழுது வினைஞராக பணியாற்றியவர். சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் செயற்பட்டவர். 1977 ஆம் ஆண்டின் பின்னர் சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டவாளர் ஆனார்.
மக்களுடன் பழகுவதற்கு மிகவும் எளியவராக காணப்பட்ட அமரர் அ.தங்கத்துரை அவர்கள் மூதூர்ப் பிரதேசத்தினது விவசாயத்தினை மேம்பாடடையச் செய்வதற்கு பலவேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். நீர்ப் பாச்சலில் இருந்துவந்த சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். விவசாயச் சங்கங்களை வினைத்திறனுடன் இயங்க வைத்தார். விவசாயச் சங்கங்கள் சிறப்பாக இயங்கினால் மாத்திரமே விவசாய நடவடிக்கைகள் உயர் நிலைக்குக் கொண்டு வர முடியும் என்ற மேலான கொள்கையினை வைத்திருந்து அதனை செயலிலும் காட்டியிருந்தார்.
கல்வித்துறைக்கு அவர் ஆற்றிய பணி இன்றுவரை எவராலும் நிவர்த்தி செய்ய முடியவில்லை. பல அதிபர்களை உருவாக்கியிருந்தார். சில தகுதியற்ற நபர்களையும் அதிபர்களாக உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டு சிலரால் முன்வைக்கப்படுவதனையும் மறுப்பதற்கில்லை. ஆனால் அவ்வாறானவர்களால்தான் மூதூர் பிரதேசத்திலே கல்வி வளர்ச்சி பெற்றதென்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. நகர்ப்புறத்திலிருந்து பின்தங்கிய நிலையிலிருந்து பிரதேசமான மூதூருக்குச் சென்று கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் பின்னின்ற காலத்தில் அமரர் அ.தங்கத்துரை அவர்களின் தூர நோக்கினடிப்படையிலான கல்விச் செயற்பாடுகளை எந்த வகையிலும் யாராலும் கேள்விக்குட்படுத்தவோ அன்றி விமர்சனம் செய்வதற்கோ முடியாது.
பல பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியவர் அமரர் அ.தங்கத்துரை அவர்களே.
1983 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் கரணீயமாக அனேகமான அரசியல் தலைவர்கள் தமிழகம் சென்று அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால் அமரர் அ.தங்கத்துரை அவர்கள் 1988 ஆம் ஆண்டிலே நாட்டிற்கு மீள வருகை தந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாடுகளை நாட்டிலிருந்த கட்சி உறுப்பினர்களின் உதவியுடன் சிறியளவிலே செயற்படுத்தினார். ஹவ்லொக் வீதியிலே இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தை தனது இருப்பிடமாக்கி கட்சியினை அழிவிலிருந்து காப்பாற்றினார் என்றே சொல்ல வேண்டும்.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணி திருக்கோணமலை மாவட்டத்திலே தோல்வியடைந்திருந்தது. அத்தேர்தலிலே திரு.இரா.சம்பந்தன் அவர்களும் தோல்லிவயைத் தழுவியிருந்தார். அத்தேர்தலிலே ஈரோஸ் அமைப்பு சுயேற்சைக் குழுவாகப் போட்டியிட்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தது.
1994 ஆம் ஆண்டிலே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலே தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திரு.இரா.சம்பநதன் அவர்களும் அமரர் அ.தங்கத்துரை அவர்களும் போட்டியிட்டனர். கட்சி 28006 வாக்குகளைப் பெற்று ஓர் உறுப்பினரை மாத்திரமே பெற்றது. இருவரில் அமரர் அ.தங்கத்துரை அவர்கள் 22409 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். திரு இரா.சம்பந்தன் அவர்கள் தோல்வியடைந்திருந்தார்.
அமரர் அ.தங்கத்துரை அவர்கள் திருக்கோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையிலே தூர நோக்குடன் செயற்றிட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்தியவர். திருக்கோணமலை தொழில்நுட்பக் கல்லூரி அமைத்தலில் அக்கல்லூரி அமையப்பட்ட இடத் தெரிவானது சிறப்பானதாக காலத்தினால் மெச்சக் கூடியதாக இன்றும் இருக்கின்றது.
கணேஸ்லேன் எனும் குடியிருப்பை ஆண்டாங்குளத்திற்கு அருகிலே உருவாக்கினார்.
இவ்விரு திட்டங்களும் அமரர் அ.தங்கத்துரை அவர்களின் தூர நோக்குச் சிந்தனைகளுக்கு சான்று பகர்ந்து நிற்கின்ற செயற்பாடுகள் என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை.
1997 ஜூலை 05 ஆம் நாள் திருக்கோணமலை சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்விலே கலந்து கொண்டிருந்தவேளையில் இனந்தெரியாத நபர்களின் குண்டுத்தாக்குதலில் தனது உயிரை துறந்தார். அன்றைய நாள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கரும்புலிகள் நாளாக நினைவு கூரப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கோணமலை மாவட்டமானது அடிமட்ட மக்களுடன் பணியாற்றிக் கொண்டிருந்த உயர்ந்த பண்புள்ள செயல்திறனுள்ள துடிப்புடன் இயங்கிக் கொண்டிருந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அன்றைய நாளில் இழந்து நின்றது.
அவரது வெற்றிடம் வெற்றிடமாகவே உள்ளது. இன்று அவர் மறைந்து இருபத்தி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அந்த வெற்றிடத்தினை நிரப்ப முடியாத நிலை மூதூர் பிரதேசத்தில் மாத்திரமல்ல திருக்கோணமலை மாவட்டத்திலே காணப்படுகிறது.
1994 ஆம் ஆண்டு தேர்தலானது திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழர் அரசியலிலே முக்கியமான சிக்கல்களைத் தோற்றுவித்த தேர்தலாக அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது. அத்தேர்தலில் திரு இரா சம்பந்தன் அவர்களும் அமரர் அ.தங்கத்துரை அவர்களும் இணைந்தே தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் தேர்தல் முடிவு அமரர் அ.தங்கத்துரை அவர்களையே வெற்றி பெற்றதாக சொல்லியது. இது திருக்கோணமலை நகரத்தில் இருந்த கட்சி ஆதரவாளர்களிடையே மூதூர் மக்கள் அநீதி இழைத்து விட்டார்கள் என்ற விமர்சனத்தையும் பிரதேச ரீதியிலான வேறுபாட்டினையும் உருவாக்கியிருந்தது.
2009 இலே நாட்டிலே யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற அல்லது நடைபெறுகின்ற தேர்தல்களிலே 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு நடைபெறற்று விடக் கூடாது என்பதனை மனதில் வைத்தே மூதூர்ப் பகுதியிலிருந்து வேட்பாளர்கள் கட்சித் தலைமையால் நியமிக்கப்படுகின்றார்கள்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலே மூதூர் பிரதேசத்திலிருந்து திரு க.நடேசபிள்ளை, திரு.கு.நாகேஸ்வரன். திரு.சீ.மதியழகன். திரு.க.திருச்செல்வம் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 33268 வாக்குகளைப் பெற்றிருந்தது. திரு இரா சம்பந்தன் அவர்கள் 24458 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். நால்வரில் ஒருவரால் கூட 9000 விருப்பு வாக்குகளுக்கு அதிகமாகப் பெற முடியவில்லை.
2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திரு.க.துரைரெட்ணசிங்கம், திருக.கனகசிங்கம், திரு.சரா.புவனேஸ்வரன், திரு.க.ஜீவரூபன் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 45894 வாக்குகளைப் பெற்றிருந்தது. திரு இரா சம்பந்தன் அவர்கள் 33834 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். நால்வரில் ஒருவரால் கூட 15000 விருப்பு வாக்குகளுக்கு அதிகமாகப் பெற முடியவில்லை.
2020 ஆகஸ்ட் 05 ஆம் நாள் நடைபெறவுள்ள தேர்தலிலும் மூதூர்ப் பிரதேசத்திலிருந்து திரு.க.ஜீவரூபன், திரு.இரா.சச்சிதானந்தம், திருமதி.சுலோசனா ஜெயபாலன் ஆகிய மூவரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
2010, 2015 ஆகிய இரு தேர்தல்களிலும் மூதூரிலிருந்து களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் ஒருவரையொருவர் ஐயத்துடன் எதிர்கொண்டே தேர்தல் காலத்தில் செயற்பட்டார்கள். ஆனால் தேர்தல் முடிவடைந்ததும்தான் உண்மை நிலையினை உணர்ந்தார்கள். இரு தேர்தல்களிலும் போட்டியிட்ட அனைவருமே (திரு க.ஜீவரூபன் தவிர-இம்முறையும் வேட்பாளராக உள்ளார்) தற்போது அரசியல் களத்தில் கட்சியுடன் நெருங்கிய உறவில் இல்லை அல்லது கட்சியிலேயே இல்லை.
இது ஒரு வகையான பதவியினை தக்க வைப்பதற்கான பொறிமுறையாக நோக்கலாம். கட்சி எப்படிப் போனாலும் பரவாயில்லை. தனது இருப்பு மாத்திரமே தேவை என்பதனை மனதிருத்தி நடைமுறைப்படுத்தப்படும் பொறிமுறை இது.
கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்றது என்னவோ உண்மைதான். ஆனால் இம்முறை திருக்கோணமலை மாவட்டத் தேர்தல் களமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த காலங்கள் போல் இருக்காது என நோக்கப்படுகின்றது.
கட்சியின் மாவட்டக் கிளையின் மற்றும் தலைமையின் தான்தோன்றித் தனமான போக்கு, செயல் திறனற்ற செயற்பாடுகள், வேட்பாளர் தெரிவில் காட்டப்பட்ட பாகுபாடுகள் என்பன திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வாக்காளர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
திருக்கோணமலை மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலின் மூலமான நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏழு வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும். வேட்பாளர்கள் நியமனமானது மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும்.

01. கந்தளாய் (1170), தம்பலகமம்(4347), கிண்ணியா(1864) உள்ளடக்கிய பிரதேசத்தில் ஒருவர்- 7377 தமிழ் வாக்குகள்
02. வெருகல்(8434), சேருநுவர(1951) உள்ளடக்கிய பிரதேசத்தில் ஒருவர் -10385 தமிழ் வாக்குகள்
03. மூதூர் பிரதேசத்தில் ஒருவர் – 18421 தமிழ் வாக்குகள்
04. குச்சவெளி(8860) மொரவேவ(844) பிரதேசத்தில் ஒருவர் – 9704 தமிழ் வாக்குகள்
05. திருக்கோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் ஒருவர் -21774 தமிழ் வாக்குகள்
06. திருக்கோணமலை நகரசபைப் பிரதேசத்தில் இருவர் -23636 தமிழ் வாக்குகள்.
ஏன்ற அடிப்படையில் பிரதேசத்தினையும் வாக்காளர் எண்ணிக்கையினையும் கருத்திற் கொண்டு ஏழு வேட்பாளர்களும் தெரிவு செய்யப்படுவார்களாயின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது.
திருக்கோணமலை மாவட்டத்திலே அதிக வாக்காளர்களைக் கொண்டிருக்கும் புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவானது 4594 வாக்குகளைக் கொண்டது. அது பட்டணமும் சூழலும் பிரதேசத்தில் உள்ளது. ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் அனைவராலும் வலியுறுத்தப்படுகின்ற விடயம் புளியங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பது. அது இன்றுவரை கணக்கிலெடுக்கப்படவில்லை. அதே போன்று மூதூர்,வெருகல் பிரதேசத்திலே வாழ்கின்ற இம்மாவட்டத்திற்கே உரித்துடையோர்களான பழங்குடி மக்களில் இருந்து ஒருவர் கட்டாயமாக வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். அவர்களிலிருந்தும் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.
இவ்வாண்டு வேட்பாளர்களாக நியமிக்கபட்டிருக்கின்ற ஏழு பேரில் ஐவர் கல்விப் புலத்தைச் சேர்ந்தவர்கள்.
இவை அனைத்தும் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருப்பது வியப்பிற்குரியவை அல்ல.
இவ்வாண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலத்த சவால்களைச் சந்தித்து கடின உழைப்பின் மூலமே வெற்றியீட்ட வேண்டிய நிலையில் உள்ளது.

கதிர்.திருச்செல்வம்.
தம்பலகமம்.